Monday, January 13, 2025

குற்றம்

"என்னங்க, எங்க இருக்கீங்க? வர நேரமாவுமா?" 

"அண்ணா நகர்ல ஒரு கிளையண்ட்டுக்காக காத்துகிட்ருக்கேன். என்னாச்சு சுசீ, ஏன் பதட்டமா இருக்க?"

"இன்னிக்கு எண்ணை தேச்சு குளிச்சேனா, அப்போ வைரத் தோட்டை கழட்டி வச்சேன். குளிச்சிட்டு தலையை ஆத்திட்டு தூங்கிட்டேன். இப்ப எழுந்து போட்டுக்கலாம்னு தேடுனா ரெண்டு தோட்டையும் காணோம். இன்னி வெலைக்கு எப்டியும் ஏழெட்டு லெட்சம் பொறும்ல? அதான் படபடன்னு வருது"

"சுசீ, பதட்டப்படாம யோசிச்சுப் பாரு. எந்த எடத்துல வச்சன்னு. தொலைஞ்சு போயிருக்காது, நிச்சயமா அங்கதான் எங்கனாவது இருக்கும், இல்லை கீழே விழுந்து கெடக்கும். பொறுமையா தேடு. நான் எப்டியும் இன்னும் 2 மணி நேரத்துல வந்திருவேன். வந்து தேடித்தரேன். சரியா" என்றவாறு போனைத் துண்டித்தார் நாராயணன்.

"இங்கதானே வச்சேன், நல்லா ஞாபகம் இருக்கே"ன்னு தனக்குத்தானே பேசியவாறு மீண்டும் டிவி ஸ்டேண்டை சுத்தியே தோடுகளைத் தேட ஆரம்பித்தார் சுசீலா.

நிதானமா யோசிக்க சொன்னார்ல.

உக்காந்து என்ன செஞ்சோம்னு வரிசையா நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.

பாதி யோசிக்கும் போதே,"அங்கருக்குமோ, இங்கருக்குமோ"ன்னு தோணுன எடமெல்லாம் போய்த் தேடி நேரம் போனதுதான் மிச்சம். தோடு கெடைக்கல.

நாராயணன் வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 4. 

"என்ன கெடைச்சுதா?"

"இல்லீங்க"

"காசு பெத்த பண்டத்துல இப்டியா அலட்சியமா இருப்ப?"

"என்னங்க இப்டி சொல்றீங்க? இந்த டிவி ஸ்டேண்ட்ல இந்த இடத்துலதான் வச்சேன்."

"ஏன் அதை பத்திரமா ஒரு டப்பால போட்டு பீரோல வச்சிருக்கலாம்ல? சம்பாதிச்சாதாண்டி காசோட அருமை தெரியும்"

"இப்ப எதுக்கு எங்கிட்ட சண்டைக்கு வாரீங்க? நானே நகையைக் காணுமுன்னு தவிச்சுகிட்டு நிக்கிறேன். நீங்க சம்பாதிக்குற பெருமையை சொல்லிக்காட்டுற நேரமா இது" கண்ணைக் கசக்க ஆரம்பித்தார் சுசீலா.

வைரம்லாம் வாங்குற அளவுக்கு காசுள்ள குடும்பம் கிடையாது சுசீலாவோட பொறந்த வீடு. இந்தத் தோடு வாங்குறதுக்கு, அதுவும் 25 வது கல்யாண நாளுக்கு நாராயணன்கிட்ட சண்டை போட்டு வாங்கிகிட்ட தோடு. முழுசா இன்னும் ரெண்டு வருசம் கூட ஆகலையேன்னு ஆதங்கம் சுசீலாவுக்கு.

சாயந்தரம் வரைக்கும் தேடித்தேடி, இருவரும் சண்டை போட்டு சோர்ந்து போனதுதான் மிச்சம்.

"காலைல நான் வெளில போனதுக்கப்புறம் நீலா மட்டுந்தான் வீட்டுக்குள்ள வந்திட்டுப் போயிருக்கா. வேற யாருமே உள்ள வர்ல. நீ இங்கதான் வச்சேன்னு தீர்மானமா சொல்றதால, தோடு தொலைஞ்சிருக்க வாய்ப்பில்ல,  நீலாதான் எடுத்துட்டுப் போயிருக்கணும்னு எனக்குத் தோணுது"

நீலா இந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சில் வீட்டு வேலை செய்யும் பெண். பாலவாக்கத்தில் இருந்து தினமும் பஸ்சில் வந்து இங்கு திருவான்மியூரில் வீட்டு வேலை செய்கிறாள்.

"நம்ம வீட்டு வேலை முடிச்சிட்டு, வழக்கமா அடுத்து யார் வீட்டுக்குப் போவா நீலா?"

"B ப்ளாக்ல லலிதா மாமி வீட்டுக்குப் போவா"

லலிதா மாமிக்கு போன் போட்டுக் கேட்டதில் இன்னைக்கு நீலா வேலைக்கு வர்ல, தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டான்னு பதில் வந்தது.

"ஒன்னும் சரியாப்படலையே. நீலாவுக்கு போன் போடு"

போன் போட்டு நீலாவை அவசரமாக வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள்.

நீலாவிடம் எப்படிப் பேசுவது என்று கணவனும் மனைவியும் ஒத்திகை பார்த்துக் கொண்டனர். 

"இந்தா நீலா, நீ எங்ககிட்ட 10 வருசமா வேலை பாத்திருக்க. இதுவரைக்கும் உன்னால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல. இன்னிக்கு நீ இங்க வந்துட்டுப் போன நேரத்துல, இங்க வச்சிருந்த வைரத் தோடு காணாமப் போயிருக்கு. உன்னைத் தவிர வீட்டுக்கு வேற யாரும் வர்ல, அதுனாலதான் உங்கிட்ட கேக்குறோம்"

"என் மேலயாம்மா சந்தேகப் படுறீங்க? அப்டில்லாம் அடுத்தவங்க பொருளைத் திருடி வாழ்க்கை நடத்துறவ இல்லம்மா நானு. தோடு வேற எங்கியாவது மறந்தாப்ல வச்சிருப்பீங்க, நல்லா தேடிப் பாருங்கம்மா" இரண்டு கைகளையும் கூப்பினாள் நீலா.

அடுத்தது குறுக்கு விசாரணை.

"நீ ஏன் லலிதா மாமி வீட்டுல வேலை செய்யப் போகல இன்னிக்கு"

காலைல நீங்க மொளாத்தூள் அரைக்க மில்லுக்குப் போவ சொன்னீங்கள்ல, அங்க அந்த சத்தத்துல நிக்கும்போதே தலை வலிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்றம் திரும்பி இங்க வந்து பாத்திரம் தொலக்கி, துணி காய வச்சு, வூடு பெருக்கி தரை தொடச்சி முடிக்கறப்போ தாங்க முடியாத தலைவலிம்மா, அதான் லலிதா மாமிக்கு போன் பண்ணி சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்."

"தோ பாரு நீலா, திரும்பத் திரும்பப் பேசறதுல ஒன்னும் அர்த்தம் இல்ல. நீ எடுத்துட்டுப் போன தோட்டைக் கொண்டாந்து திரும்பக் கொடுத்துரு. இல்லைன்னா நான் போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுக்கறதத் தவிர வேற வழி இல்லை", நாராயணன் கடைசி அஸ்திரத்தை உபயோகிச்சார்.

"அய்யா, வேணாம்யா, போலீசுக்கெல்லாம் போயிறாதீங்க. சாமி சத்தியமா, நான் தோட்டை எடுக்கலய்யா"

நீலா பயந்து போய் விட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

கடைசியில் நாராயணின் காலில் விழுந்து விட்டாள் நீலா.

"அய்யா, என் குடும்பம் ஏழைப்பட்ட குடும்பமா இருந்தாலும் மானத்தோட வாழ்றோம்யா, போலீஸ்லாம் வந்து விசாரிச்சா, நான் நாண்டுகிட்டு செத்துடுவேன்யா"

"சரி நீலா, நீ கெளம்பு. நாங்க சொன்னதெல்லாம் யோசிச்சுப் பாரு. சீக்கிரமா தோட்டைக் கொண்டாந்து கொடுத்துரு. அடகு கிடகு வச்சிருந்தீன்னா சீட்டைக் கொண்டாந்து கொடு. நாங்களே மீட்டுக்கறோம்."

"உனக்கு என்ன தோணுது சுசீ? நீலா எடுத்துருப்பாளா?

"அவதான் எடுத்துருக்கணும். வீட்டுக்குள்ள வேற யாருமே வர்ல, தோட்டையும் காணும். போலீஸ் கம்ப்ளெயிண்ட்னு நீங்க சொன்னோன்ன பதறுறா. அவ எடுக்கலைன்னா ஏன் பதறணும்?

"அவளை வேலைக்காரின்னு ஒரு நாள் கூட நெனைச்சதோ, நடத்துனதோ கெடையாது. அவ குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டதுன்னு எல்லாத்துக்கும் முடிஞ்ச அளவுக்கு பொருளா பணமா குடுத்து சப்போர்ட் பண்ணிருக்கோம். கடைசில உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற மாதிரி இப்டி நம்ம வீட்டு நகையை எடுத்துட்டுப் போயிட்டாளே. இது அடுக்குமா?" சாபம் விடாத குறை, சுசீலாவுக்கு.

இரவு பத்து மணி வரை நீலா திரும்ப வரவில்லை.

பொறுமையிழந்து போய், போலீஸ் ஸ்டேஷனுக்கு புறப்பட்டார் நாராயணன், புகார் கொடுக்க.

******

"ஏங்க, ஒரு நிமிசம் யோசிங்க. இந்த போலீஸ் கம்ப்ளெயிண்ட் அது இதுல்லாம் நமக்கு சரியா வருமான்னு தெரிலயே. பேசாம போனா போவுதுன்னு விட்றலாமா?"

"அதெப்படி சுசீ விட முடியும்? சாதாரண விஷயமா இது. நீ பேசாம இரு. நான் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வரேன்."

"சரி, அப்டின்னா செக்ரெட்டரி சார்கிட்ட சொல்லிட்டு அவரையும் கூட்டிகிட்டு போங்க. அதென்னவோ போலீஸ் ஸ்டேஷன் போறதுன்னா கொஞ்சம் கலக்கமா இருக்கு. இதெல்லாம் நமக்கு தேவையான்னு தெரில"

செக்ரெட்டரி மகேந்திரன் நாராயணனுக்கு நன்கு அறிமுகமானவர். நாராயணன் நடந்தவற்றை சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார்.

"இது உங்க வீட்டுக்குள்ள நடந்தது. இதுல அசோஷியேஷன் தலையை விட முடியாது. அதான் யோசிக்கிறேன்."

"சார், அது எனக்குப் புரியுது. நான் உங்ககிட்ட இதை விசாரிக்க சொல்லலை. தகவல்தான் சொல்றேன். ஒரு ஃப்ரெண்டா என் கூட ஸ்டேஷனுக்கு வர முடியுமான்னுதான் கேக்குறேன்"

"அதெப்டி சார், கமிட்டியைக் கலந்து பேசாம நான் தன்னிச்சையா வர முடியாதுல்ல" 

"புரியுது சார். பிரச்னை வரும்போதுதான் மனுசங்களை புரிஞ்சுக்க முடியுது. நீங்க மாசமாசம் மெயிண்டெனன்ஸ் காசை வாங்குற வேலையை மட்டுந்தான் பாப்பீங்க. நடத்துங்க.."

"விருட்டென்று கோபத்துடன் வெளியேறினார் நாராயணன்.

தரைத்தளம் சென்று காரை எடுத்து மெயின் கேட்டுக்கு அருகில் வரும்போது செக்ரட்டரி வழி மறித்தார். கதவைத் திறந்து காரில் ஏறினார். 

"சாரி சார். உங்க கூட வரக்கூடாதுன்னு இல்லை. என்ன, ஏதுன்னு யோசிக்கறதுக்குள்ள நீங்க கோவப்பட்டுட்டீங்க. வாங்க, ஒரு ப்ரெண்டா உங்க கூட வர்றேன், போகலாம்"ன்னு சொன்னவுடன் கார் நகர்ந்தது.

********

காவல் நிலையம்.

"சார், உங்களுக்கு உறுதியாத் தெரியுமா, அந்தப் பொண்ணுதான் நகையை எடுத்திருப்பான்னு?"

"வேற யாரும் எடுத்திருக்க வாய்ப்பே இல்ல சார். வீடு பூராவும் தேடியும் பாத்துட்டோம். அவதான் நிச்சயமா எடுத்திருக்கா"

"சரி, நீங்க சொன்னதெல்லாம் ஒரு கம்ப்ளைண்ட்டா எழுதிக் குடுங்க, நாங்க கூப்ட்டு விசாரிக்கிறோம்"

அவசர அவசரமாக புகார் எழுதி வாங்கப்பட்டது.

நீங்க கெளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்.

*******

"மாப்பிள்ளை போன் பண்ணிருந்தார். லக்‌ஷ்மியும் பேசுனா. நீங்க வந்தா போன் பண்ண சொன்னாங்க"

லக்‌ஷ்மி,  நாராயணன் - சுசீலா தம்பதியரின் ஒரே மகள், மும்பையில் வசிக்கிறார்கள்.

"என்னவாம்? தோடு தொலைஞ்ச கதையை அவசரமா பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?"

"அவகிட்ட சொல்லாம எப்படி இருக்கிறது. நீங்க வேற சும்மா இருக்காம போலீஸ் கீலீஸ்னு கெளம்பிட்டீங்க"

"அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம். டயர்டா இருக்கு இப்போ. தூங்கப்போவோம்."

*******

விடிகாலை 5 மணிக்கெல்லாம் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியிடம் இருந்து இண்டர்காமில் நாராயணனுக்கு அழைப்பு.

"சார், நீலா அவங்க வீட்டுக்காரர் வந்திருக்காரு, உங்களைப் பாக்க. மேலே அனுப்பி வைக்கவா?"

தூக்கக் கலக்கத்தில் இருந்தார் நாராயணன். 

"வேணாம், நானே கீழே வரேன்"

சட்டையைப் போட்டவாறே லிஃப்டைப் பிடித்து கீழே போன நாராயணனை வழியிலேயே மடக்கி காலில் விழுந்தான் சோமு, நீலாவின் கணவன்.

"அய்யா, நீலாவை டேசனுக்கு கொண்டு போயி அடிக்கிறாங்கய்யா. காலைல மூணு மணிலேருந்து. கதறிக்கிட்ருக்காய்யா.

நாங்கூட அங்க இங்க கைய வைக்கிற ஆளுதான். ஆனா, நீலா சுத்தத் தங்கம்யா. அவ ஒங்க பொருளை எடுக்கலய்யா. ஒரு வார்த்தை நீங்க நேர வந்து சொன்னா உட்ருவாங்கய்யா"

நாராயணனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அதே சமயம் தான் தோற்றுப் போவதாகவும் தோன்றியது. நகை கிடைக்காதோ என்ற பயம் வேறு.

"இதோ பாருப்பா, எங்களுக்கு அவ மேல் புகார் கொடுக்கணும்னு ஆசையா என்ன? இல்ல, எங்கூட்டு நகை, தானே கால் மொளைச்சு நடந்து போயிருக்குமா என்ன? தப்பை ஒத்துகிட்டு நகையைத் திருப்பிக் கொடுத்துட்டா நீலாவை வெளிய விட்ருவாங்க. நானும் அப்றமா கேசை வேணா வாபஸ் வாங்கிக்கறேன். தண்டனை ஏதும் இல்லாம பாத்துக்கறேன், போதுமா"

********

காலை பத்து மணி வாக்கில் அந்த ஏரியா கவுன்சிலர் காவல் நிலையத்துக்குப் போய் வாக்குவாதம் செய்தவுடன் வேறு வழியில்லாமல் நீலாவை விசாரணை முடிந்து வீட்டுக்கு அனுப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் போன் செய்து சொன்னார்கள். நீலா உண்மையை ஒத்துக் கொள்ளவில்லை என்றும், நீலா வீட்டில் நடந்த சோதனையிலும் ஏதும் சிக்கவில்லை என்றும்,  பக்கத்திலுள்ள அடகுக் கடைகளில் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் நாராயணனுக்குத் தகவல் சொன்னார்கள். 

நீலா நகையைத் திருப்பித் தரமாட்டாள் என்பது நாராயணனுக்கு  தெளிவாகத் தெரிந்தது. சற்று அவமானமாகக் கூட இருந்தது. இந்த விஷயத்தில் நீலாவிடம் தோற்றுப் போனதாகவே தோன்றியது.

அன்றைக்கு மாலை அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது.

போலீஸ் அடித்ததில் நீலாவுக்கு பலத்த உள்காயம் என்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் 

தகவல் வந்தவுடன் நாராயணனுக்கு பயம் வந்து விட்டது.

ஆனால் செக்ரெட்டரியோ  இதெல்லாமே நாடகமாகத்தான் இருக்குமென்றும், அந்தக் கவுன்சிலர்தான் இதையெல்லாம் தூண்டி விட்டிருப்பார் என்றும் சொன்னார்.

நீலாவின் மருத்துவமனை நாடகம் நாராயணனுக்கு புதியதொரு தலைவலியாகத் தோன்றியது.

*******  

"வாங்க நாராயணன் சார், முக்கியமான விஷயம் பேசணும்னுதான் வரச் சொன்னேன்" பீடிகை போட்டார் சப் இன்ஸ்பெக்டர்.

"சொல்லுங்க சார், நகையக் கண்டுபிடிச்சிட்டீங்களா?"

"இன்னும் இல்ல சார். அந்தம்மா அடமெண்ட்டா இருக்காங்க. போதாக்கொறைக்கு அவங்க ஏரியா கவுன்சிலர் வேற இதுல தலையை விட்டுக் கொழப்புறார்.

உங்க நகையை மீட்க முடியும்னு தோணல. மொதல்ல அந்த நகையை அந்தம்மாதான் எடுத்துதான்னு எங்களால இப்போதைக்கு உறுதியா சொல்ல முடில. எவ்ளோ அடிச்சும் அது எடுக்கல, எடுக்கலன்னு சொன்னதையே சொல்லிட்ருக்கு. பேசாம, நீங்க கேசை வாபஸ் வாங்குங்க. நாங்க கொஞ்சம் பொறுமையா நோட்டம் பாத்தா, அவளை ஆதாரத்தோட புடிச்சிருவோம். இப்ப அந்தம்மா ஆசுபத்திரில அட்மிட் ஆகி உள்காயம்னு சர்ட்டிபிகேட் வாங்கிருக்கு. இன்னிக்குள்ள இந்த கேசை வாபஸ் வாங்கலைன்னா, போலீஸ் மேலயே கேஸ் போடுவோம், ப்ரஸ்சுக்குப் போய் போலீசை ரெண்டுல ஒன்னு பாத்திடுவேன்னு மெரட்டுறான் அந்த கவுன்சிலர்."

"நல்லாருக்கு சார். திருடன் போலீசை மெரட்றதும், அதைக் கேட்டு, நீங்க என்ன வாபஸ் வாங்க சொல்றதும். போலீஸ் எப்டியும் விசாரிச்சு நகையை மீட்டுத் தருவீங்கன்னு நம்பிதா கேஸ் கொடுத்தேன்.  என்னால வாபஸ் வாங்க முடியாது. நீங்க எப்டியாவது விசாரிச்சு நகையை மீட்டுக் கொடுங்க"

இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல வெளியே வந்தார் நாராயணன். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும், சப் இன்ஸ்பெக்டரையே எதிர்த்துப் பேசிவிட்டோம் எனும் ஹீரோ மனப்பான்மை அவருக்கு ஒரு திமிரைத் தந்தது.

******

இன்னையோட ஒரு வாரம் ஆச்சு, நகை தொலைஞ்சு போய். அன்னைக்கு சப் இன்ஸ்பெக்டர் கிட்ட கேஸ் வாபஸ் வாங்க முடியாதுன்னு சொன்னதுக்கப்புறம் எந்த முன்னேற்றமும் இல்லை. நீலா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும், போலீஸ் கவுன்சிலர் கூட சமரசம் பேசி செட்டிலாய்ட்டாங்க. 

நாராயணனுக்கு ஸ்டேஷன்ல எந்த மரியாதையும் கிடைப்பதில்லை இப்பல்லாம். 

"டெய்லி வந்து இப்டி பாலோ பண்ணாதீங்க சார். விசாரணை பண்ணிட்ருக்கோம். எதுனா தகவல் கெடைச்சா போன் பண்றோம், போங்க"

"இப்படி விட்டேத்தியா சொன்னா எப்டி சார், ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. பொருளைத் தொலைச்சவனுக்கு கவலை இருக்கும்ல. எதுனா ஆக்‌ஷன் எடுங்க, ப்ளீஸ்"

"சார், ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு கேஸ் வருது எங்களுக்கு. உங்க கேஸை மட்டுமே பாத்துகிட்ருக்க முடியுமா. புரிஞ்சுக்கங்க சார்"

மீண்டும் நாராயணன் அங்கேயே அமர்ந்திருக்க, "கெளம்புங்க சார்" என்ற அதட்டலின் கனம் தாங்காமல் நகர்ந்தார்.

********

நீலாவோட நிலைமை இன்னும் மோசம்.

"இப்டிப் படுத்தே கெடந்தா எப்டி நீலா? புள்ளைங்கள்லாம் ஒம்மூஞ்சியைப் பாத்துதானே வளருதுங்க. எந்திரிச்சு குடும்பத்தைக் கவனி. அடுத்து பொழைப்புக்கு என்ன செய்லாம்னு ரோசி"

"முடியலக்கா. நானு கல்லாணத்துக்கு மிந்தி சொகுசா இருந்தவ. இந்தாளு மேல ஆசைப்பட்டு கட்டிகிட்டு ஓடியாந்தேன். இவரு ஒளுங்கா குடிக்காம சம்பாதிச்ச காசை எங்கிட்ட கொடுத்திருந்தா நான் ஏன் பொறத்தியார் வூட்டுக்கு பாத்திரம் தொலக்கப் போவணும் சொல்லு? அப்டிப் போக சொல்லதான இப்டி பழிசொல்லு கேட்டு போலீஸ் கைல அடி வாங்கி சாவுறேன்.

கைய நீட்ட சொல்லி உள்ளாங்கைல ப்ளாஸ்டிக் பைப்பாலயே அடிச்சானுக தெரியுமா, வலி உசுரு போயிருச்சு. இந்தா பாரு, மொழங்காலுக்குக் கீழ"ன்னு புடவையைத் தூக்கிக் காட்டுறா. கெண்டைக்காலெல்லாம் தடிச்சுக் கெடக்கு.

"எப்புடி ஒழைச்சிருக்கேன் தெரியுமா அந்தக் குடும்பத்துக்கு? என் மேல திருட்டுப் பட்டம் கட்ட எப்புடி மனசு வந்துச்சு அந்தம்மாவுக்கு?

எனக்கு உசுர் வாழவே புடிக்கல. இந்தப் புள்ள ரெண்டையும் கரை தேத்தனுமேன்னு இன்னும் சாவாம கெடக்கேன்."

"இதுல அந்த கவுன்சிலர் அண்ணன் கேக்குறாரு. 'ஆறேழு லட்சம்ன்றாங்க, என்னையும் கொஞ்சம் கவனிங்க'ன்னு"

"இந்த ஊர் ஒலகத்துக்கு நான் ஒரு திருடின்னு ஆயிப்போச்சு. அந்த காம்பவுண்ட்ல 4 வூட்டுக்கு வேலை செஞ்சேன். அல்லாரும் இப்போ வேணாம்னுட்டாங்க. இனி எப்டி நான் கை சுத்தமானவன்னு புரிய வைக்கிறது? ஆயுசுக்கும் இந்தக் கெட்ட பேரோடு வாழ்ந்து சாவணும்கிறது என் விதி போல"

"நீலா, நீ சொல்றதெல்லாம் கரீக்டுதான். ஏழைப் பட்ட நாம என்ன செய்ய முடியும் சொல்லு. மத்ததெல்லாம் சாமி பாத்துக்கும்னு சொல்லிட்டு எழுந்து குடும்பத்தைக் கவனிக்குற வழியைப் பாரு. ஒழைக்குற நமக்கு, இந்த நாலு வூடு இல்லைன்னா, வேற நாலு வூடு. தூக்கிப் போட்டுட்டு வா" 

"சாமி எங்க பாக்குது, பாத்தா எனக்கு இப்டி நேந்திருக்குமா"

"நான் சொல்றேன், நம்பு. சாமி ஒன்னிய என்னிக்கும் கை விடாது", நீலாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிப் போனார் பக்கத்து வீட்டு செண்பகம்.

*********

திருவான்மியூர் காவல் நிலையம்.

"சார், என் பேரு மகேந்திரன். ஏற்கனவே மிஸ்டர் நாராயணன் புகார் கொடுக்க வந்தப்போ, அவர் கூட வந்திருந்தேன்"

 "ஏன் சார் இப்டி உசுரை எடுக்கறீங்க, புகார் கொடுத்தவர் தொல்லை தாங்கலைன்னா, நீங்க வேற புதுசா ஃபாலோ பண்ண வந்திருக்கீங்களா, கெளம்புங்க சார் இங்கேருந்து" கொந்தளித்தார் எஸ் ஐ.

"ஃபாலோ பண்றதுக்காக வர்ல சார். ஒரு முக்கியமான தகவல், உங்ககிட்ட ரகசியமா சொல்லணும், அதான் நேர்ல வந்தேன்"..

******

"வணக்கம் சார். முத்துக்கண்ணு, சப் இன்ஸ்பெக்டர்." என்றவாறு கையை நீட்டினார்.

"வாங்க சார். நான் ராமானுஜம். இந்த பிராஞ்ச் மேனேஜர். என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு.."

"ஒரு விசாரணை. அது சம்பந்தமா உங்க உதவி வேணும். உங்க க்ளையண்ட் ஒருத்தர் கடைசியா எப்ப லாக்கர அக்செஸ் பண்ணினார்ங்கற தகவல் வேணும்."

"கஸ்டமர் டேட்டாவை அப்டி டக்னு குடுத்துற முடியாது சார். அதுக்கு ஒரு ப்ரோசீஜர் இருக்கு. ஒரு ஃபார்ம் தரேன். அதை பில்லப் பண்ணிக் கொடுங்க. அப்றமா நான் டேட்டா எடுத்துத் தரேன்"

அதற்குள் சிவில் உடையில் இருந்த இன்னொரு போலீஸ்காரர் மேனேஜர் ரூமுக்குள் நுழைந்து எஸ் ஐயிடம் கண் ஜாடை செய்தார்.

எஸ் ஐ வெளியே வந்தவுடன், "சார், முந்தா நேத்திக்கு, அதாவது நகை தொலைஞ்சு போனதா கம்ப்ளெயிண்ட் கொடுத்த பத்தாம் நாள் இங்க வந்து லாக்கரைத் தொறந்திருக்காங்க, காலைல பத்து மணிக்கு தொறந்திட்டு 10.02 க்கு முடிருக்காங்க"

"ஓகே, ஓகே, ஒரு நிமிஷம்" என்றவாறு மீண்டும் மேனேஜர் ரூமுக்குள் நுழைந்த எஸ்.ஐ, "அதுக்குள்ள இன்னுமொரு முக்கியமான கேஸ். நான் அப்றமா வரேன், தேங்க்ஸ் சார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

********

"சொல்லுங்க சார், அந்த நகை எந்த வருஷம் வாங்குனீங்க, வாங்குன பில் எடுங்க"

திடீரென வீட்டுக்கு வந்த எஸ்.ஐ இப்படிக் கேட்டவுடன் சுசீலாவும் நாராயணனும் பதில் சொல்லவியலாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றனர்.

"என்ன சார் ஒன்னும் சொல்லாம நின்னா எப்படி? பில் இருக்கா இல்லையா? வழக்கு சம்பந்தமா நீங்க ஒத்துழைச்சாதானே எங்களால கேசை சீக்கிரமா முடிக்க முடியும்"

"பில் இருக்கான்னு தேடிப் பாக்கணும். சுசீ, பீரோல இருக்கா பாரு"

சில நிமிடங்கள் காத்திருப்பு, இறுக்கமான மெளனத்துடன்.

"இந்தாங்க, இதானா பாருங்க"

"இதேதான், 2016 ல வாங்குனது. இந்தாங்க சார்" 

எஸ்.ஐ பில்லை போட்டோ எடுத்தவுடன், "வாங்க, ஒரு எடுத்துல நகை கெடைச்சிருக்கு. உங்களுதான்னு போய் செக் பண்ணிருவோம்"

"அதெப்படி சார்" னு படக்குனு கேட்டார் நாராயணன்.

"அதெப்படின்னா? நகை தொலைஞ்சதுன்னு புகார் கொடுத்தீங்கல்ல, நாங்க கண்டுபிடிக்கணும்ல"

சுசீயும் நாராயணனும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உறைந்து போய் நின்றனர்.

"வாங்க சார், போகலாம், அப்டியே உங்க ....

 பேங்க் லாக்கர் சாவியையும் எடுத்துட்டு வாங்க" என்றார் எஸ்.ஐ.

"அது எதுக்கு" இது நாராயணன்.

"போகும்போது சொல்றேன், எடுத்துட்டு வாங்க"

நாராயணனுக்கு காலெல்லாம் வெடவெடன்னு ஆட ஆரம்பித்தது. சுசீ முகமோ பேயறைந்தது போல்.

அடுத்த சில நொடிகள். யாரும் அசையவில்லை. இது எதிர்பாராதது.

"என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசாத் தெரியும். இந்த நிமிசம் வரைக்கும் உங்க ரெண்டு பேரையும் நான் மரியாதையாதான் நடத்திகிட்டிருக்கேன். லாக்கர் சாவியை எடுத்துகிட்டு உடனே வாங்க. எதுனா நான்கோஆபரேட் பண்ணினீங்கன்னா, அப்றம் நான் வேற மாதிரி நடக்க வேண்டியிருக்கும். நான் கவர்ன்மெண்ட் சர்வண்ட். எனக்கு நீலாவும் ஒன்னுதான், நாராயணனும் ஒன்னுதான், அண்டர்ஸ்டேண்ட்" போலீஸ் தொனி மிரட்டலில் அதிர்ந்து போய்,  நாராயணன் உள்ளே இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

"நானும் வர்ட்டுமா உங்க கூட..."னு சுசீலாவும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கீழே வந்தார். 

" வாங்க சார், நம்ம ஜீப்பிலேயே போய்ட்டு வந்துறலாம்"ன்னு எஸ்.ஐ கூப்பிடவும், இன்னும் பயந்தார் நாராயணன்.

"இல்ல சார், நாங்க எங்க கார்லயே வர்றோம். லேடீஸ் வர்றாங்க. உங்க ஜீப்ல போனா ஒரு மாதிரி இருக்கும், அதான்..."

"சார், நான் நீலாவைப் பண்ண மாதிரி அரெஸ்ட் பண்ணியா கூட்டிட்டு போறேன். நீங்க கொடுத்த கம்ப்ளெய்ண்ட்டை விசாரிக்கத்தானே கூப்டுறேன். சரி, நானும் உங்க கார்லயே வர்றேன்" என்றவாறு நாராயணனின் காரில் ஏறினார் எஸ்.ஐ.

கணவனையும் மனைவியையும் தனியாய்ப் பேசவோ, வேறு யாருடனும் போனில் பேசவோ வாய்ப்பு தராமல் வங்கி வரை கூடவே இருந்தார் நாராயணன்.

"சார், இன்னேரம் என்ன நடக்குதுன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். நேரா உள்ள போய் லாக்கரைத் தொறந்து நீங்க மறைச்சு வச்ச ரெண்டு தோட்டையும் எடுத்துட்டு வாரீங்க. இதைப் பத்தி யார் கூடவும், எதுவும் பேசக்கூடாது பேங்க்ல. புரியுதா? இங்க எதுவும் கொளறுபடி பண்ண நினைச்சீங்கன்னா, அசிங்கப்படுறது நீங்களாதான் இருப்பீங்க, ஏன்னா உங்க லாக்கர் பக்கத்துல 6 கேமெரா இருக்கு. மேல மேல தப்பு பண்ணி அசிங்கப்படாம சொன்னதை செய்ங்க."

"சார், தொலைஞ்ச நகை இங்க எப்படி சார் இருக்கும்?" என்றவாறே கணவருடன் உள்ளே போக எத்தனித்தார் சுசீலா.

சுசீலாவிடம், "ஹலொ மேடம், நீங்க உள்ள போக வேண்டாம், இங்கேயே நில்லுங்க, சார் போய் நகையை எடுத்துட்டு வரட்டும்"

எந்த பதிலும் சொல்லாமல், கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போல் வங்கிக்குள் சென்றார் நாராயணன்.

******

நாராயணன் இல்லம்.

எஸ்.ஐ, இன்னொரு போலீஸ்காரர், நாராயணன், சுசீலா, நீலா மற்றும் நீலாவின் கணவர் சோமு.

"சம்பந்தப்பட்ட எல்லாருமே இங்க இருக்கோம். இங்க நடக்கறதும் இந்த வழக்கு விசாரணையோட ஒரு பகுதிதான். இப்ப சொல்லுங்க நாராயணன். எதையும் மறைக்காம நடந்தது நடந்தபடி சொல்லுங்க. அப்றமா மேற்கொண்டு என்ன செய்றதுன்னு முடிவு பண்ணுவோம்.

 "மொதல்லயே ஒன்னு சொல்லிக்கறேன். நாங்க சட்டத்துக்கும் நீதிக்கும் பயந்து நடக்குறவங்க. யாரையும் கஷ்டப்படுத்திப் பாக்கணும்னு நினைக்கறவங்க கிடையாது." நாராயணன் ஆரம்பித்தவுடன் இடைமறித்தார் எஸ்.ஐ.

"நேரா டாபிக்குக்கு வாங்க. ஜஸ்ட் நடந்ததை வரிசையா சொல்லுங்க, அது போதும்"

"நாங்க போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததுல சொல்லியிருந்த எல்லாமே உண்மைதான். நீலாவைத் தவிர வேற யாரும் வீட்டுக்குள்ள வர்ல. நகையும் வச்ச எடத்துல இல்லை. வீட்ல மத்த எல்லா எடத்துலே தேடியும் கிடைக்கல. அப்ப எங்களுக்குத் தோணுன ஒரே சந்தேகம் நீலா மேல மட்டுந்தான். ஆனா கடந்த 10 வருசமா நீலா எங்க வீட்ல வேலை செஞ்சதுல, ஒரு தரம் கூட சந்தேகப் படுற மாதிரி  எதுவும் நடக்கல.

இருந்தாலும், நகையைக் காணோம்ன்ற பதட்டத்துல நீலா மேல சந்தேகம்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டோம்.

இதுனால நீலாவை நீங்க கடுமையா விசாரிச்சு கஷ்டப்படுத்துனப்போ எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு"

"எதுக்கு நீட்டி மொழக்குறீங்க. நடந்ததை மட்டும் சொல்லுங்க சீக்கிரமா"

"சரி சார். சொல்றேன். 4 நாள் முந்தி எங்க வீட்ல சாம்பார் வச்சிருந்தாங்க. சாதத்துல சாம்பாரை ஊத்திப் பிசையலாம்னு ஆரம்பிச்சா, கைல என்னவோ தட்டுப் படுதேன்னு எடுத்துப் பாத்தா தொலைஞ்சு போன ஒரு தோடு.

பத்து நாளைக்கு மின்ன தொலைஞ்சு போன தோடு எப்புடி இன்னைக்கு நம்ம வீட்டு சாப்பாட்டுல வந்திருக்கும்னு புரியாம தேட ஆரம்பிச்சோம். 

அப்பதான் தோடு தொலைஞ்சு போன அன்னிக்கு எங்க வீட்ல மொளகாத்தூள் அரைச்சது ஞாபகத்துக்கு வந்துச்சு. அன்னிக்கு காலைல நீலா மொளாத்தூள் அரைச்சிட்டு வந்து இந்த டிவி ஸ்டேண்டுக்குப் பக்கத்துல, இந்த சில்வர் டப்பாவை தொறந்து வச்சிருக்கு, ஆறட்டுமேன்னு. அதுக்கு கொஞ்ச நேரம் முன்னதான் தோட்டைக் கழட்டி  இந்த டிவி ஸ்டேண்ட் மேல இருந்த நியூஸ் பேப்பர்ல வச்சிருக்காங்க. பேன் காத்துல நியூஸ் பேப்பர் ஆடி அந்தத் தோடு ரெண்டும் கீழ கரெக்டா மொளத்தூள் டப்பாவுல உழுந்து உள்ள போயிருக்கணும். மொளாத்தூள் ஆறிப்போன உடனே, நீலாவே எடுத்து மூடி கிச்சன் கப்போர்டுல வச்சிட்டு வீட்டுக்குப் போயிருக்கு. மொளாத்தூளை பெரிய டப்பாலேருந்து வாரத்துக்கு ஒருக்கா சின்ன பிளாஸ்டிக் டப்பாவுல அள்ளி தினசரி உபயோகத்துக்கு வச்சுக்குவோம். அதுவழியா ஒரு தோடு சாம்பாருக்கு வந்திருக்கணும்னு அனுமானம் பண்ணி, சில்வர் டப்பாவுல போய் தேடுனா இன்னொரு தோடும் அதுக்குள்ள இருந்து கிடைச்சுது.

தோடு நம்ம வீட்டுக்குள்ளதான் இருந்திருக்குன்னு தெரிஞ்சோன்ன உடனே போலீசுக்குத் தகவல் சொல்லிக் கேசை வாபஸ் வாங்கணும்னு தெரிஞ்சாலும் அதை செய்ய எங்களுக்கு தைரியம் வர்ல. ஏற்கனவே  நீலா போலீஸ்ல அடிவாங்கி, திருட்டுப் பட்டம் வாங்கி கஷ்டப்பட்டிருக்கு. இது தெரிஞ்சா இன்னும் பிரச்னை பெரிசாயிரும்னு பயந்து நகையை லாக்கர்ல கொண்டி வச்சுட்டோம். இன்னும் நாலைஞ்சு நாள் கழிச்சு நகை போனா பரவால்ல, நாங்க கேசை வாபஸ் வாங்கிக்கறோம்னு சொல்லி வாபஸ் வாங்கலாம்னு நெனைச்சிட்ருந்தோம். ஆனா அதுக்குள்ள எஸ்.ஐ சார், எப்படியோ தகவல் கெடைச்சு தோடு கெடைச்சதை கண்டு பிடிச்சுட்டார். இதான் நடந்தது"

"அப்ப என் வூட்டுக்காரி மேல பொய் கேசு கொடுத்துட்டு, நகை கெடைச்சோன்ன கமுக்கமா கொண்டு போய் பேங்குல வச்சுட்டு வந்தா என்னா அர்த்தம். மனசாச்சி இருந்தா ஒடனே நகை கெடைச்சிருச்சுன்னு எங்க எல்லாருக்கும் சொல்லிருக்குனுமா இல்லியா" இது சோமு.

"கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இப்போ கேஸ் கொடுத்திருக்கிறது நாராயணன். நகையை யாருமே திருடலைன்னாலும் ஒளிச்சு வச்சது நாராயணன். ஆக குற்றவாளியும் நாராயணன்தான். ஆதாரத்தை மறைச்சது, பொய்யா இன்னொருத்தர் மேல குற்றம் சுமத்துனது, விசாரணைக்கு ஒத்துழைக்காம கேசை திசை திருப்புனதுன்னு நாலைஞ்சு செக்‌ஷன்ல என்னால கேஸ் புக் பண்ண முடியும். நீலா ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தா ஒங்க ரெண்டு பேத்தையும் புடிச்சு உள்ள தள்ளவும் முடியும். இப்போ நீலா தரப்பு என்ன சொல்றாங்கன்றதுதான் முக்கியம்"

நீலா பேசுவதற்காக எழுந்து நின்றாள். அவளின் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பேசவியலாமல் விக்கி விக்கி கண்ணீரைத் துடைப்பதிலேயே நேரம் கழிந்து கொண்டிருந்தது. 

"நீ பேச வேணாம். உக்காரு. நா பேசிக்கறேன்"னு எழுந்தான் சோமு.

"சார், எங்க மேல எந்தத் தப்பும் இல்லன்னு ஆயிருச்சு. ஆனா நீலாதான் நகையை எடுத்துச்சுன்னு கேசு கொடுத்து அவளை அடி வாங்கி அவமானப் படுத்துனதுக்கு ஈடா, ஒரு லச்ச ரூவா கொடுக்க சொல்லுங்க. இத்தோட பைசல் பண்ணிட்டுக் கெளம்பிடுறோம்"

நீலாவுக்குக் கோவம் தலைக்கேறியது. 

"த்தூ.. காசு வேணுமா உனக்கு? அவங்க பொருள் தொலைஞ்சதுக்கு நம்ம மானத்தை வாங்குனாங்க.  இப்போ என் மானம் போனதுக்கு நீ காசு கேக்குற. அப்றம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசங்கிறேன்"

"சார், எங்களுக்குக் காசும் வேணாம், பணமும் வேணாம். என் மேல குத்தம் இல்லைன்னு அவங்களையே சொல்ல வச்சுட்டீங்க. ஞாயமாப் பாத்தா, நகை கெடைச்ச உடனேயே அதை போலீஸ்கிட்ட சொல்லி கேசை வாபஸ் வாங்கிருக்கணும். அப்டி செஞ்சா அவங்க மருவாதி குறைஞ்சுரும். ஆனா "நீலாவோட மானம் போனா என்ன, ஏழை நாயி எக்கேடு கெட்டா என்ன, ஆயுசுக்கும் திருட்டுப்பட்டத்தோட அலையுட்டுமே, இப்ப என்ன"ன்னு இருந்தவங்களை, அவங்க வாயாலேயே உண்மைய ஒத்துக்க வச்சதுக்கு நன்றி சார்"ன்னு சொல்லி எஸ்.ஐ கால்ல விழுந்தார் நீலா.

"நீலா, நீ நினைக்குற அளவுக்கு"ன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்ச சுசீலாவைப் பேச விடாமல் தடுத்துக் கையெடுத்துக் கும்பிட்டார். 

"போதுந்தாயே, நீங்க செஞ்சதெல்லாம் போதும்,  இந்த சென்மத்துல உங்க சங்காத்தமே வேணாம்".

"போலாம் வா, காசு வேணுமா காசு, வீட்டுல போய் வச்சிக்குறேன் ஒனக்கு," புருசன் கையைப் பிடிச்சு தரதரவென இழுத்துக் கொண்டு வெளியேறினார் நீலா.

முற்றும்

Monday, December 30, 2024

காசு, பணம், துட்டு, மணி...

வருடம் 2000

"நிறுத்துடி, உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? நீ லவ் பண்ண லட்சணம் இந்த ஊருக்கே தெரியுமே. நல்லா பசையுள்ளவனாப் பாத்துதான் லவ் வருமோ? இந்த அழகுல நான் காசு பின்னாடி அலையுறேன்னு என்னை சொல்ற நீ. த்தூ" காரித் துப்பியது மஞ்சுளா, புஷ்பாவைப் பார்த்து.

புஷ்பா வேறு யாருமில்லை, மஞ்சுளாவோட மூத்த மகள்.

கோபம் கொடூரமான உணர்வு, ஆனால் உள்ளத்தில் உள்ளது அனைத்தையும் மடை திறந்து முழுமையாகக் கொட்டிவிடும். கடைசிவரை சரி செய்ய முடியாத இழப்பை  பரிசாகத் தந்துவிட்டுத்தான் அடங்கும்....

புஷ்பா காதலித்தது, ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது எல்லாம் இப்போ இல்ல, அது நடந்து பத்து வருசம் ஆச்சு. அப்போல்லாம் மஞ்சுளா அந்தக்காதலை ஏற்கவுமில்லை, புஷ்பா கல்யாணம் செஞ்சுகிட்டதை கண்டுக்கவுமில்லை. கிட்டத்தட்ட "விட்டுது சனியன்" ங்கற மாதிரிதான் நடந்துகிட்டாங்க.

ஆனா கல்யாணத்துக்கப்புறம் புஷ்பாவோட நிலைமை மேலேறிக்கிட்டே இருந்தது. மஞ்சுளாவோட நிலைமை தலைகீழாப் போயிருச்சு. 

தன்னோட நிலைமை எறங்கிருச்சுன்னு தெரிஞ்சப்புறம் புஷ்பாவோட உறவை புதுப்பிச்சுகிட்டு, அப்பப்போ வந்து போகன்னு இருந்தாங்க. அப்பப்போ காசு பணம் துணிமணின்னு கேட்டு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. 

புஷ்பாவுக்கு அம்மாவைப் புடிக்கலைங்கறது உண்மையா இருந்தாலும், அடிப்படைல பாசக்காரின்றதால அம்மாவை ஒதுக்க நினைக்கல.

"ஏம்மா, நீ அக்காகிட்ட இவ்ளோ மோசமா சண்டை போடுற" ன்னு அம்மாவைக் கண்டிச்சான் ரவி, மஞ்சுளாவோட பையன்.

"ஒங்கக்காளப் பத்தி என்னடா தெரியும் உனக்கு? வண்ட்டான் ஞாயம் பேச"

"என்னைப் பத்தி என்னா தெரியும் ஒனக்கு? ஏதோ பேசணும்னு பேசாத. எங்காசு பணம்னு அவ்ளோ அனுபவிச்சுட்டு இப்போ நான் காசு தர முடியாதுன்னு சொன்னோன்ன என்னியத் துப்புற அளவுக்கு வந்துட்டேல்ல. உங்க ரெண்டு பேத்தையும் நான் இங்க வந்து பாக்குறது இதான் கடைசி தடவை" ன்னு சொல்லிட்டு கிளம்பி விட்டாள் புஷ்பா.

சற்று நேரன், வீடே மயான அமைதியாய்ருச்சு புஷ்பா கெளம்பிப் போனோன்ன. குப்புறடிச்சுப் படுத்துட்டாங்க மஞ்சுளா. 

"இந்த நாலு வருசமா என் காலேஜ், ஹாஸ்டல் ஃபீசெல்லாம் அக்காதான் கட்டுச்சு. இன்னிக்கு நீ தேவைல்லாம் வம்பை வலிச்சு அக்காவை அசிங்கமா பேசி, நம்ம தலைல நீயே மண்ணை வாரிப் போட்டுட்ட"

"எலேய், ஒங்கப்பாரு சாவும்போது ஒனக்கு அஞ்சு வயசு. இத்தினி வருசமா உன்னை  நான் வளக்கல? படிக்க வைக்கல?, இப்ப காலேஜ் போன்னோன்னதான ஒங்கக்கா ஃபீசு கட்னா? அதுக்கு முன்னாடி எல்லாம் ஒங்கக்காதான் பண்ணாளா?  நீ உருப்பட மாட்டடா, பெத்த வவுறு பத்தி எரியுது, நீ சொல்றதெல்லாம் கேக்குறப்போ. அவ என்னை அவ்வளோ மட்டமா பேசுறா, பெத்த தாய்னு கூடப்பாக்காம. நீ அவளுக்கு ஒத்தூதுற. காரியகாரப் பயடா நீயி."

"இப்ப என்ன சொல்லிட்டேன்னு எனக்கு சாபம் உடுற நீயி. உண்மையை சொன்னா உனக்குக் கோவம் வருது. அதான், வேறென்ன" சொல்லிவிட்டு விருக்கென்று வெளியே கிளம்பிப் போனான் ரவி.

**********

வருடம் 1990.

புஷ்பா 8வது படிக்கறப்போ அவளோட அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார். அவர் இறக்கும் வரைக்கும் விவசாயம்தான் செய்து கொண்டிருந்தார். அவருக்கு மாத வருமானம் இல்லை ஆனாலும் விவசாயம் நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்தது. 10 மா நிலம். கிட்டத்தட்ட நல்ல வசதியான குடும்பம்தான். 

ஒரே குறை, விவசாயத்தைப் பத்தி எதுவுமே தெரியாத, அதில் ஆர்வமே இல்லாத மஞ்சுளாவுக்கு, கணவர் இறந்தவுடன் தொடர்ந்து விவசாயம் பண்ணத் தெரியல. ரெண்டு வருசம் குத்தகைக்கு விட்டுப் பாத்ததுல, ஏமாந்ததுதான் மிச்சம். 

மேலும், கணவரின் ஆளுமைக்குக் கீழ் இருந்த மஞ்சுளாவுக்கு  இப்போ எந்தத் தடையும் இல்லாத வாழ்க்கை போதையைத் தந்தது. 

இது மஞ்சுளாவுக்கு மட்டும் என்றில்லை. எல்லாப் பெண்களுக்கும் இள வயதில்  கணவன் மறைய நேரிட்டால், சோகத்தைத் தாண்டி, சிறிதளவேனும் விடுதலை உணர்வு தோன்றத்தான் செய்யும். ஆனால் பொறுப்புச்சுமை அழுத்துவது அதை விட அதிகமாக இருப்பதால் அந்த விடுதலையின் சுகம் உணரத்தக்கதாகவே அமையாது. 

சின்ன வயலேருந்தே மஞ்சுளா ஒரு சினிமாப் பைத்தியம். இப்போ சினிமா, சினிமா, சினிமாதான் வாழ்க்கைன்னு ஆகிப்போனது.

வீட்டுக்கார் உயிரோட இருந்த வரைக்கும் வருசத்துக்கு 4 படம் பாத்துக்கிட்டிருந்தவங்க, அவர் போய் சேந்தோன்ன, மாசத்துக்கு நாலு படம்னு ஆகிப் போச்சு. 

விறகடுப்பிலிருந்து கெரசினுக்கும், பின்னர் கேஸ் அடுப்பிற்கும். எண்ணெய்ப் பண்டங்கள், பலகாரங்கள் இடை விடாது. விளை நிலங்கள் விலை போய், உணவாகவும், உடையாகவும், கேளிக்கையாகவும் கரைந்தது.

ஆனால் மஞ்சுளா, "கேட்பாரும் இல்லை, மேய்ப்பாரும் இல்லை" என்று சொல்வார்களே, அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள், ஆனால் வீழ்ந்ததென்னவோ மொத்தக் குடும்பமும்.

இருக்குற நெலத்தெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வித்து நாலே வருசத்துல மிஞ்சுனது குடியிருக்குற வீடும் 100 குழி நிலமும்தான்.

 "குந்தித்தின்றால் குன்றும் மாளும்" கதைதான்.

+2 வரை படித்த புஷ்பா மேலே படிக்க வசதி இல்லாததாலும், குடும்பத்துக்கென வருமானம் இல்லாத சூழ்நிலையாலும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம்.

தானே வேலைக்குப் போகணும்னு முயற்சி செஞ்சு வேலூர்ல ஒரு தனியார் மருத்துவமனைல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குப் போனா. சம்பாதிக்குற பணத்தை குடும்பத்துக்குதான் செலவு செஞ்சா. அம்மாவைக் கொஞ்சம் கண்டிக்க ஆரம்பிச்சா. புள்ளைங்க தலையெடுத்தோன்ன, இதுவரைக்கும் அம்மா பண்ணுன நிர்வாகம் சரியில்லைனு தோணி அதை சரி பண்ணணும்னு முயற்சி பண்ணும்போதுதான் குறுக்கே வந்தது காதல்.

அந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்துல மேனேஜரா வேலை செஞ்ச குணாவுக்கு புஷ்பாவோட அழகும், அறிவும் உழைப்பும் ஈர்த்திருக்கணும். அவர்தான் புஷ்பாகிட்ட தன் காதலை முதலில் சொன்னது. அதை மறுக்கிறதுக்கு எந்த காரணமும் இல்ல புஷ்பாகிட்ட. அந்த காலத்துல இந்த காதல்ங்கிற சமாசாரமே கற்புநெறி தாண்டினதுங்கற ஒரு சமுதாய மனப்பான்மைதான் அவளை கொஞ்சம் யோசிக்க வச்சது. ஒரு நாலைஞ்சு மாசம் கழித்து ஒரு சுபயோக சுபதினத்தில் ரத்னகிரி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு "ஓடிப்" போனார்கள்.

மஞ்சுளாவுக்கு புஷ்பா காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டுப் போனதுல உள்ளுக்குள்ள பெரிய கோவம் இல்லைன்னாலும் வெளியுலகுக்காக கோபப்படுற மாதிரி நடிச்சிகிட்ட்ருந்தாங்க. அது மட்டுமில்லாம, மறுபடியும் சுதந்திரம். இருந்த 100 குழி நிலத்தையும் வித்து சூரை விட்டாங்க. கடைசில ஒன்னும் மிஞ்சிலைங்கற நெலமை வந்ததும் புஷ்பா கூட பேச்சுவார்த்தை, போக வரன்னு ஆரம்பிச்சாங்க, வாழ்க்கைய ஓட்டணுமேன்னு.

அதுக்குள்ள ரவியும் +2 முடிச்சிட்டு எஞ்சினியரிங் காலேஜ்ல சேர முயற்சி பண்ணிட்ருந்தான். அவனே அக்காகிட்ட தான் காலேஜ் படிக்கணும்கிற ஆசையை சொல்லி உதவி கேட்டான். அக்காகாரிக்கும் தம்பி மேல பாசம். உதவுனா. அவனும் படிச்சு முடிக்கற நேரம். 

இப்போ மஞ்சுளா புஷ்பாகிட்ட மேலும் மேலும் பணத்துக்கு அரிக்க ஆரம்பிச்சாங்க. புஷ்பா ஒரு ஆலோசனை சொன்னா அம்மாவுக்கு. "சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரம்பிச்சுத் தரேன். நீ அதை நடத்திப் பொழைச்சிக்கோ. இப்படி எத்தினி நாள் என்னை நம்பியே வாழ முடியும். எனக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்குல்ல"னு சொன்னதுலதான் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வந்து புஷ்பா கோச்சிகிட்டு கெளம்பிப் போனது.

*********

வருடம் 2010.

ஆங்கிலத்துல ஒவ்வொரு பத்து வருடத்தையும் ஒரு Decade ன்னு சொல்வாங்க. அடுத்த decade ல என்னென்ன அற்புதங்கள் அல்லது சோகங்கள் நம்ம வாழ்வுல நிகழும்னு யாராலயும் கற்பனை பண்ணவே முடியாது. அப்டியே பொரட்டிப் போட்டுட்டு நிக்காம போயிட்டே  இருக்கும் காலம்.

ரவிக்கும் கிட்டத்தட்ட அப்டித்தான் ஆச்சு.

எஞ்சினியரிங் முடிச்சு மொத ரெண்டு வருசம் வேலையே கெடைக்கல. அப்றம் சம்பளமே இல்லாம ஒரு கம்பெனில வேலைக்குப் போனான். அந்த ஆறு மாசத்துல கத்துகிட்ட தொழில்தான் அடுத்து சம்பளத்தோட வேலை கிடைக்க வாய்ப்பைக் கொடுத்துச்சு. மொத சம்பளம் 6000 ஓவா. அப்பவே வயசு 23 ஆய்ருச்சி. இப்படிப்போனா எப்படி வாழ்க்கைல செட்டில் ஆக முடியும்கற கவலை ரவிக்கு.

எங்காவது வெளிநாடு போவறதுக்கு முயற்சி பண்லாமான்னு யோசிச்சா ரெண்டு விஷயம் தடையா இருக்கு. ஒன்னு ஏஜென்சி கேக்குற பெரிய தொகை. ரெண்டாவது அந்த ஏஜென்சி போலியா இருக்குமோன்றது.

இதுக்கு நடுவுல ரெண்டு கம்பேனி மாறிட்டான் ரவி. மொத்தமா ஆறு வருடம் அனுபவம் வாரப்போ, 15000 ரூவா சம்பளம். "வயசு 27 ஆச்சு. பொண்ணு பாக்கட்டுமா"ன்னு அம்மா ஆரம்பிச்சுட்டாங்க.

ஏற்கனவே வாங்குற சம்பளத்துல சென்னைல வாழ்க்கை ஓட்றதே பெரும்பாடா இருக்கு. இதுல ஊர்ல இருக்குற அம்மாவுக்கும் மாசமாசம் பணம் அனுப்பணும். அக்காவோ சுத்தமா, ஒட்டு உறவு இல்லைன்னு விட்டுட்டா, இதுல என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த வாழ்ந்துன்னு தோணுச்சு ரவிக்கு.

அப்பத்தான் ஒரு நாள் ரவியோட காலேஜ்ல கூடப்படிச்ச சம்பத் போன் பண்ணுனான். 

"டேய், நேத்திக்கு பவித்ரா உன்னைப் பத்தி விசாரிச்சாடா"

"எந்த பவித்ரா" தனக்குத் தெரியாத மாதிரி இழுத்தான் ரவி.

"டேய் டகால்டி, நடிக்காதடா. நாம பைனல் இயர் படிக்கும்போ காலேஜ்ல பர்ஸ்ட் இயர் ஜாய்ன் பண்ணாளே. உனக்கு கூட ரூட் விட்டாள். நீதான் அவ பெரும் பணக்காரி, நமக்கு செட்டாவுதுன்னு கண்டுக்காம விட்டேல்ல, அதே பவித்ராதான். இப்ப ஞாபகம் வருதா?"

"என்னவாம் அவளுக்கு, எதுக்கு ஏன் நம்பர் கேக்குறா?"

"நீ செட்டில் ஆயிட்டியா, எங்க வொர்க் பண்றேன்னு கேட்டா. நான் சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டாடா. அப்றம் கல்யாணம் ஆயிருச்சான்னும் கேட்டா"

"அவளுக்கும் வேலையில்ல, உனக்கும் வேற வேலையில்ல, வைடா ஃபோனை."

******

"பாட்டி, உங்க வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்காங்க, பெரிய கார்ல" பக்கத்து வீட்டுப் பொடுசு மஞ்சுளாம்மாவுக்கு தகவல் சொல்லிவிட்டு ஓடுது.

"வணக்கம். என் பேரு தியாகராஜன். மதுரைலேருந்து வரேன். உள்ள வர்லாங்களா"

ஆஜானுபாகுவான தோற்றம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் கம்பீரமாய்த் தெரிந்தார் தியாகராஜன்.

"வாங்க, உள்ள வாங்க" 

"உங்க குடும்பத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டுத்தான்  வந்திருக்கேன்"

"என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு...."

"சொல்றேன். என் பொண்ணு பவித்ரா உங்க பையன் ரவியோட காலேஜ்ல படிச்சா. என் பொண்ணுக்கு உங்க பையனைப் புடிச்சிருக்கு. இந்த லவ் கிவ்லாம் ஒன்னும் இல்ல. ஆனா புடிச்சிருக்கு. அவ என்கிட்ட எதுவும் சொல்லல இத்னி வருசமா.

அவளுக்கு மாப்பிளை பாக்க ஆரம்பிச்சு ஒன்னும் சரியா அமையவே இல்ல. தட்டிப் போய்கிட்டே இருந்துச்சு. அப்பதான் ஒரு நாள் அவகிட்ட கேட்டேன். உனக்கு யார்னா தெரிஞ்ச, புடிச்ச பையன் இருந்தா சொல்லுன்னு, சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். அவ சட்டுன்னு உங்க பையனைப் பத்தி சொன்னா. உங்க குடும்ப சூழ்நிலை, ஏழ்மை இதெல்லாம் காரணம் காட்டி நான் ஏத்துக்க மாட்டேன்னு நெனைச்சு இது நாள் வரை எங்கிட்ட சொல்லல அவ. என்கிட்ட சொல்லாதது மட்டுமில்ல, அவ உங்க பையன் கிட்ட கூட இதைப் பத்தி சொல்லல.

எனக்கிருக்குறது ஒரே பொண்ணு. அவ மனசுக்கு ஒங்க பையனைப் புடிச்சிருக்கு. உங்க பையனுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நல்ல குணமான, உழைக்கத் தயாரா இருக்குற பையன். எனக்கு முழு சம்மதம். உங்களுக்கும், உங்க பையனுக்கும் இதுல விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்"

"எனக்கு இதுல ஏதும் சொல்றதுக்கு இல்லை. என் பையனுக்குப் புடிச்சிருந்துன்னா எனக்கும் புடிச்ச மாதிரிதான். ஆனா இதுல எங்க ரெண்டு பேரு சம்மதம் மட்டும் போதாதுல்ல...." என்று இழுத்தாங்க மஞ்சுளா.

********

"எதாருந்தாலும் போன்லயே சொல்லும்மா. இப்ப என்னால ஊருக்கு வர முடியாது, லீவு கெடைக்காது" அம்மாவிடம் திட்டவட்டமாக சொன்னான் ரவி.

"உன் ஃப்ரெண்டு பவித்ராவோட அப்பா நம்ம வூட்டுக்கு வந்தார்ப்பா." ன்னு ஆரம்பிச்சு நடந்ததெல்லாம் சொன்னாங்க மஞ்சுளா.

"நான் அவளைப் பாத்தே ஏழெட்டு வருசம் ஆச்சும்மா. இது என்ன புதுசா திடீர்னு ஒன்னிய வந்து பாத்துருக்காங்க"

"எப்ப பாத்திருந்தா என்னப்பா, ஒன்னியப் புடிச்சிருக்குன்னு சொல்லிருக்கா. அவங்கப்பா உனக்ககும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறார். நல்ல குடும்பமா தெரிது. நீ என்ன சொல்ற?"

"எனக்கு ஒன்னும் சொல்லத் தோணலம்மா. ஆனா, நாம ரெண்டு பேரு மட்டும் முடிவு பண்ண முடியாதுன்னு சொன்னியே, வேற யாரு இதுல முடிவு பண்ணனும்?"

"ஒனக்கு கூடப் பொறந்தவ ஒருத்தி இருக்கா, ஞாபகம் இருக்குல்ல?"

'இங்க பார்ரா, ஏம்மா, ஒனக்கு இன்னும் ஒம் பொண்ணு நெனைப்பு இருக்கா? ஆச்சர்யமா இருக்கு"

"எனக்கு நெனைப்பு இருக்றதெல்லாம் இருக்கட்டும். அவ உங்கூடப் பொறந்தவ. அவ கிட்ட கலந்துக்காம அதை முடிவு பண்ணிரக் கூடாதுல்ல. இன்னிக்கு அவ கூடப் பேச்சு வார்த்தை இல்லைங்கறதுனால இப்டியே விட்ற முடியுமா"

"சரிம்மா, நான் அடுத்த வாரம் கெளம்பி அக்காவை நேர போய் பாத்துட்டு வரேன். இந்தக் கல்யாண டாபிக் கெடக்கட்டும். அக்காகிட்ட பேசணும்னு நீயே சொன்னதுக்கு அப்றம் டிலே பண்ணக்கூடாதில்ல"

*********

காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள் புஷ்பா.

"யேய் ரவி, எப்டிரா இருக்க" ஓடி வந்து தம்பியின் கையைப் பற்றிக் கொண்டாள்.

"அம்மா நல்லாருக்கா ? நீ இங்க வர்றது அம்மாக்குத் தெரியுமா?"

"அம்மா சொல்லித் தாங்க்கா நானே வந்தேன்"

புஷ்பாவுக்கு ஆச்சரியம். மனுச மனசு எவ்ளோ வித்தியாசமா நெனைக்குது, எவ்ளோ மாறுது காலப்போக்குல.

"எப்டிக்கா இருக்கீங்க எல்லாரும்?"

"இருக்கோண்டா, ரெண்டு வருஷமா எதுவும் சரியாப் போகல. எதுல கைய வச்சாலும் தேற மாட்டேங்குது. உங்க மாமா புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறேன்னு ஒரு ஸ்டேஷனரி சாப் நெறைய காசைப் போட்டு ஆரம்பிச்சாரு. எதிர்பார்த்த அளவுக்குப் போகல. கடை போட்ட எடம் சரியா அமையல. பெருத்த நஷ்டம். இதுக்கு நடுவுல பெரியவ வயசுக்கு வந்துட்டா. அதுக்கு ஃபங்ஷன் கூட வைக்கல. வீட்டோட முடிச்சிகிட்டோம். மறுடியும் வேலைக்குப் போகலாமான்னு முயற்சி பண்ணிட்டிருக்காரு உங்க மாமா. 

புள்ளைங்களைப் பாத்துக்கணுமேன்னு நான் அப்பவே வேலையை விட்டது தப்பாப் போச்சு. காசு பணம் இல்லாம தவிக்கும்போதான் அம்மா எம்மாங்கஷ்டப் பட்டிருக்கும்னு தோணுதுடா"

"உங்க மாமாவுக்கு இருக்குற திறமைக்கு இந்தக் கஷ்டம் எல்லாத்தையும் தாண்டிருவோம். என்ன ஒன்னு, இருக்கறதை வுட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டதுதான் தப்பாய்ருச்சு"

"ஆனா, இதெல்லாம் வாழ்க்கைல ஒரு பெரிய விஷயம் இல்லடா ரவி. இங்க பாரேன். இப்ப நான் வயர் கூட பின்னி விக்குறேன். வீட்டு வேலைலாம் முடிச்சிட்டு கெடைக்குற நேரத்துல இதை செய்றேன். ஏதோ நம்மாலான வருமானத்தைக் கொண்டாரலாம்ல, அதான்"

"இதான் என் அக்கா. தோக்கறதுன்னா என்னான்னே தெரியாது. நீ பெரிய ஆளுதாங்க்கா" நெகிழ்ந்து போய் அக்காவின் கைகளைக் கோர்த்துக் கொண்டான் ரவி.

"அப்றம், நீ எப்டிறா இருக்க. எவ்ளோ சம்பாதிக்கற? அம்மாவை நல்லபடியா வச்சிருக்கியா?"

"ஒன்னும் பெருசா சம்பாதிக்கலக்கா, ஆனா முயற்சி பண்ணிட்டே இருக்கேன் அடுத்தடுத்து."

தன் கல்யாணப் பேச்சையும், அக்காவைக் கலந்து பேசி சொல்வதாக அம்மா பெண் வீட்டில் சொல்லிவிட்டதையும் சொன்னான் ரவி.

"அம்மாவை நான் எவ்ளோ அசிங்கமாப் பேசிருக்கேன். அதெல்லாம் மறந்துட்டு என்னைக் கேக்கனும்னு அம்மாவுக்கு தோணிருக்கு பாரேன்" 

'சரிடா, சாயந்தரம் உங்க மாமா வந்ததும் சொல்லிட்டு நானும் உங்கூட வரேன். போய் அம்மாவைப் பாத்து மத்ததெல்லாம் பேசுவோம்."

உறவுகள் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.

*******

எத்தனை வருடங்களாகப் பிரிந்து கிடந்த குடும்பம். திடீர்னு ஒரு நாள் காலைல ஒன்னு சேர்றதுல்லாம் சாதாரணமா நடக்கக்கூடிய நிகழ்வு இல்லை. ஆனால் இங்கே ரவியின் திருமணப்பேச்சு நிமித்தம் அது நிகழ்ந்தது. ஆனா என்ன, ரவியும் புஷ்பாவுக்கு வீட்டுக்குப் போன நேரம், வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டக்கா சாவியைக் கொடுத்துச்சு.


"நம்ம பூட்டுத்தாக்கு பாபுவோட பேத்திக்குக் கல்யாணம், திருவலம் கோயில்ல. அதுக்குதான் ஒங்கம்மா போயிருக்கு. காலைலதான் கெளம்பிப் போச்சு. 7.30 - 9 முகூர்த்தம். 10 மணிக்கெல்லாம் வந்திரும்"

அக்காவும் தம்பியுமாய் உள்ளே வந்தார்கள். புஷ்பாவுக்கு எல்லாம் புதுசா இருந்தது. கொல்லைல ரெண்டு மாடு கட்டிக் கெடக்குது. மாடு ரெண்டும் கொட்டாய்லேருந்து வெளில கட்டி இருக்கு. கொட்டாய் சாணியள்ளி, கூட்டி சுத்தமா இருந்துச்சு. 

சமையல் கட்டுல, பாத்திரம்லாம் வெளக்கி சுத்தமா கவுத்துருந்துச்சு. அரிசி டின்லயும், பருப்பெல்லாம் அழகழகா ப்ளாஸ்டிக் டப்பாலயும் கொட்டி அடுக்கிருக்கு.

 "நம்ம வீடுதானாடா இது?"ன்னு தம்பியைக் கேட்டாள் புஷ்பா.

"அக்கா, அம்மா மின்ன மாதிரி இல்லக்கா. நெறைய மாறிடுச்சு. நான் பணம் அனுப்பவான்னு கேட்டா  'வேணாண்டா, நான் பாத்துக்கறேன். உன் சம்பளத்துல நீ உன் வாழ்க்கையைப் பாரு' ன்னு சொல்லிரும்."

"வாழ்க்கை எல்லாரையும் மாத்திருதுல்ல" வியந்தாள் புஷ்பா.

அக்கா தோசை ஊற்றித் தர ரவி சாப்பிட்டான்.  

"அக்கா, நான் போய் கடைசி வீட்டு மாமாவைப் பாத்துட்டு வரேன். உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாய் கெடக்குறாராம். நீ சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. அம்மா எப்டியும் வாரதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆவும்ல" சொல்லிட்டு வெளில கெளம்பினான் ரவி.

அரை மணி நேரம் கழித்து ரவி திரும்ப வந்தான். கேட்டைத் திறக்கும் போது வீட்டுக்குள்ள பேச்சு சத்தம் கேட்டது. காரசாரமா வாக்குவாதம் நடக்குறா மாதிரி இருந்தோன்ன, அப்டியே திண்ணைலயே உக்காந்துட்டான் ரவி.

"இப்ப மாடு கன்னு வளத்து, பால் வித்து, ராட்டி தட்டி வித்துப் பொழைக்குறியே, இதே ஒழைப்பை அப்பா செத்தோன்ன செஞ்சிருந்தீன்னா, நம்ம நிலம்லாம் கையை விட்டுப் போயிருக்குமா? " புஷ்பாவின் குரல்தான்.

"அப்டி ஒழைச்சிருந்தீன்னா, நானும் +2வுக்கு மேல படிச்சு இன்னிக்கு நல்ல வேலை பாக்குற நெலைல இருந்திருப்பேன்ல. நீ சொத்தை மட்டுமா அழிச்ச, என் படிப்பையும்தான்"

அம்மா காயப்பட்டிருக்க வேண்டும். பதில் சொல்லல போல. அக்காதான் மேல மேல பேசிட்டே இருந்தாள்.

"அப்றம் நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கும் போது என்னென்ன சொன்ன, சாதி பாக்கணும், சாதகம் பாக்கணும்னு. நான் காசுள்ள ஆளை மயக்கிட்டு இழுத்துகிட்டு ஓடறேன்னு. இப்ப உம் புள்ள விவகாரம் எப்புடி? சாதி பாத்தியா, சாதகம் பாத்தியா? காசுக்காரின்னுதான தலைய ஆட்டற?"

"எதெ, அவங்கதான் தேடி வராங்களா? நீங்க பணம்னு ஓடலியா? அப்ப, எனக்கும் அதேதான? அவருதான என்னைக் கட்டிக்கிறேன்னு வந்தாரு?  அப்ப உன் புள்ளைக்கு ஒரு ஞாயம், எனக்கொரு ஞாயமா, சொல்லு"

அம்மாவிடமிருந்து பதிலேதும் இல்லை போல.

"ரவியை ஆசைப்பட்ட பொண்ணையே அவன் கட்டிக்கட்டும். எனக்கும் சந்தோசந்தான். ஆனா நீ எனக்கு பண்ணது சரில்லனுதான் சொல்றேன்." 

மேற்கொண்டு உரையாடல் தொடரவே இல்லை.

ரவிக்கு வருத்தமா இருந்தது. நேத்திக்கு சுமுகமா பேசுன அக்கா, இவ்ளோ வன்மத்தோட அம்மாகிட்ட பேசிருக்க வேணாம்னு தோணுச்சு. அக்கா கேட்ட கேள்வில்லாம் தப்பு இல்ல, ஆனா அதெல்லாம் கேட்டு அம்மாவைக் காயப்படுத்திருக்க வேண்டாமேன்னு நெனச்சான்.

அக்கா பேசுன அதிர்ச்சிலேருந்து மீளாம அப்டியே திண்ணைலயே கொஞ்ச நேரம் உக்காந்திருந்தான் ரவி.

திடீர்னு கேட் திறக்கிற சத்தம் கேட்டுத் திரும்பிப்பாத்தான் ரவி. அம்மா தெருவுலேருந்து கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளே வராங்க. அப்டியே அதிர்ச்சில உறைஞ்சு போய்ட்டான் ரவி. 

அம்மா இப்பதான் வராங்கன்னா, அக்கா யார்கிட்ட விவாதம் பண்ணிட்ருந்தா இன்னேரம்? தனக்குத்தானேதான் பேசிகிட்டிருந்தாளா!

"வாடா, வாரேன்னு போன் பண்ண மாட்டியா"

"இ..இல்லம்மா, திடீர்னு பொறப்பட்டு வந்துட்டேன்"

அதுக்குள்ள புஷ்பா கதவைத் தொறக்கிறா. "அம்மாஆஆ"ன்னு கத்திட்டே ஓடி வந்து கட்டிக்கறா.

"எப்டிம்மா இருக்க, என்னை சுத்தமா மறந்துட்டேல்ல"

"அதெப்படி மறப்பேன். ஏதோ, நம்ம கெட்ட நேரம், வெலகி இருந்துட்டோம். அதான் நீங்க ரெண்டு பேரும் சேந்து வந்துட்டீங்களே, வேறென்ன வேணும் எனக்கு"ன்னு சொல்லிட்டு, புஷ்பாவை அணைச்சிகிட்டாங்க மஞ்சுளா.

"ரவி எல்லாத்தையும் சொன்னான்மா, பொண்ணோட அப்பாவுக்கு நம்ம சம்மதத்தை போன் பண்ணி சொல்லிட்டு மேல ஆக வேண்டியதைப் பார்க்கலாம்மா."

"காலைல எதுனா சாப்டீங்களா"ன்னு கேட்டவாறே சமையற்கட்டை எட்டிப் பார்த்தார் மஞ்சுளாம்மா. 

"ப்ரிட்ஜுல மாவு வச்சிருந்தீல்ல, அதை எடுத்து தோசை ஊத்தி சாப்டோம்மா"

சற்று நேரம் ஊர்க்கதை, நாட்டுக்கதைலாம் பேசியபின் முத்தாய்ப்பாக மஞ்சுளாம்மா சொன்னது.

"அந்தப்பொண்ணோட அப்பா பணக்காரர்ங்கறதுக்காக மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கல. உன்னை விரும்புற பொண்ணு அவ. கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷமா இருப்பீங்க. நீயும் உன் மாமனார் தொழிலை கவனிச்சுகிட்டீன்னா, உங்க வாழ்க்கையும் செழிப்பும் சந்தோசமுமா இருக்கும். அதனாலதான்.

மத்தபடி, எனக்கு நீ ஒரு பைசா தர வேண்டாம். என் கையால ஒழைச்சே என் காலம் ஓடிரும். 

இன்னிக்கு ஒழைக்கிற மாதிரி உங்கப்பா செத்துப் போனோன்ன, புரிஞ்சு நான் உழைச்சிருந்தா நம்ம புஷ்பாவும் காலேஜ் போய் படிச்சிருக்கலாம். நல்ல வேலைக்கும் போயிருந்திருக்கலாம். நம்ம நிலம்லாம் இன்னிக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொத்தா நின்னிருக்கும். எல்லாம் வித்துத் தின்னே அழிச்சேன். எனக்கு அப்பெல்லாம் அது தப்புன்னே தெரியல. போனது போவட்டும். இப்பவாவது காசு உழைச்சு வந்தாதான் ஒட்டும், நிக்கும்ங்கறது எனக்குப் புரிஞ்சுதே, அது போதும்" 

அனுபவம் எல்லாப் புரிதலின்மைக்கும் பதில் தருகிறது. அது இந்தக் குடும்பத்திற்கும் புரிதலைக் கொடுத்திருக்கிறது.

( முற்றும் )

Tuesday, December 24, 2024

துரோகம்

"மாமா, இன்னைக்கே பேங்க்ல லோன் செக் கொடுத்துருவாங்களா?"

"இல்ல கயல், இன்னிக்கு முத்து வந்து  ஷ்யூரிட்டி கையெழுத்து போட்ட உடனே, லோன் சேங்க்‌ஷன் ஆயிரும். இரண்டு நாள்ல செக் வந்துரும்னு நெனைக்கிறேன்."

மனைவிக்கு பதில் சொல்லியவாறே நண்பன் முத்துவுக்கு போன் செய்தான் அருண்.

"மச்சான், கரெக்டா 11 மணிக்கு பேங்க்குக்கு வந்துருடா.  நான் முன்னாடியே போய் மத்ததெல்லாம் ரெடி பண்ணிர்றேன்."

எதிர்முனையில் முத்து ஆமோதித்திருக்க வேண்டும். "சர்ரா, சர்ரா" என்றவாறே போனைத் துண்டித்தான் அருண். 

எட்டு வருடக்கனவு. வெல்டராக சம்பளத்துக்கு வேலை பார்ப்பவனுக்கு, தானே வெல்டிங் பட்டறை போடுவதெல்லாம் நினைச்சுப் பாக்க முடியாதது. 

ஆனால் கயல்தான் விடாப்பிடியாக பட்டறை போடணும்னு இவனைத் தூண்டி விட்டவள்.

"எத்தினி வருடம் இப்படி சம்பளத்துக்கு வேலை பாத்து சாவுறது. பகலும் ராவுமா இந்த வெல்டிங் சூட்டுல கண்ணெரிஞ்சு இப்டி உழைக்குற. கையில் 15000 ரூவா கூட கெடைக்க மாட்டேங்குது. உன் உழைப்பால, உன் மொதலாளி குடும்பம்தான் கொழிக்குது. நாம இப்டியே கெடக்கணுமா"ன்னு அவனைத் தொணப்பி எடுத்து, இந்த மாதிரி செய்லாம்னு நம்பிக்கை வரவச்சது அவதான்.

அருண்தான் வீட்டுக்கு மூத்தவன். கூடப்பொறந்த 2 தங்கச்சிகளுக்கும் இருக்குற பரம்பரை சொத்தெல்லாம் வித்து, நல்ல மாப்பிள்ளைகளாப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு அப்பா. 

குடும்ப சொத்துன்னு எதுவும் நிக்கல அதுக்கப்புறம். அப்பாவோட மளிகைக்கடை வருமானம் அப்பா அம்மாவோட வாழ்க்கையை ஓட்றதுக்கு மட்டுந்தான் தேறுது.

அருணுக்கு படிப்பு சரியா ஏறல. பத்தாம்பு பெயிலு. அப்டி இப்டின்னு அலைஞ்சு இந்த வெல்டிங் வேலையை கத்துகிட்டதுதான் இன்னிக்கு பொண்டாட்டி புள்ளைக்குக் கஞ்சி ஊத்த உதவுது.

"மாமா, நானும் உங்கூட வர்றேன். போற வழில என்னை அங்காளம்மன் கோயில்ல எறக்கி வுட்ரு. ஒரு வெளக்கு போட்டுட்டு,  இன்னியோட நம்ப கஷ்டம்லாம் தீர்த்துடுன்னு ஆத்தாகிட்ட வேண்டிகிட்டு திரும்ப நடந்து வந்துர்றேன்."

"அப்டின்னா சீக்கிரம் கெளம்பு கயல்".

வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் சத்தம் கேக்குது. "அப்பா பை, அம்மா பை"ன்னு சொல்லிட்டு புள்ள ஸ்கூலுக்கு ஓடுது. 

கயல் பரபரன்னு வேலை செய்றா. அருண் குளிச்சு ட்ரெஸ் பண்ணிட்டு, லோன் பேப்பர்லாம் அடுக்கி எடுத்து பேக்ல வச்சிகிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்றான்.

"கயல், ரெடியா, சீக்கிரம் வா, டைம் ஆகுது பாரு".

"தோ வந்துட்டேன்". ஓடி வந்து பைக்கில் ஏறுகிறாள் கயல்.

வண்டி நகர்கிறது.

********

பேன் கார்டு பின் பக்கம் செராக்ஸ் எடுத்துட்டு வாங்க. நீங்களும் ஷ்யூரிட்டியும் ஆதார் செக் பண்ணிறலாம்.

மேடம், ஷ்யூரிட்டி வந்துகிட்ருக்கார். இன்னும் 10 நிமிசத்துல வந்துருவார்.

நோ ப்ராப்ளம். அவரு வந்தோன்ன வாங்க. 

முத்துவுக்கு போன் போட்டான். முழுசா ரிங் போச்சு, எடுக்கல. ஓகே, அப்டின்னா பைக்ல வந்துட்ருக்கான்னு நம்பிக்கையோட அருண் வெளில வழியையே பாத்துகிட்ருந்தான். 

எவ்வளவு அவமானம் இது வரைக்கும் வாழ்க்கைல. பெத்த அப்பனே தன்னை மதிக்கல, அரவணைக்கல என்பதெல்லாம் அருணுக்கு காலத்துக்கும் ஆறாதது. படிப்பு ஏறலைன்ற ஒன்னு மட்டுமே, ஒருத்தனை இந்த சமூகம் குப்பையாய்க் கசக்கிப் போட போதுமானதா இருக்கு.

"இந்தப் பொட்டிக் கடையை கொஞ்சம் விரிவாக்கி, செல்ஃப் சர்வீஸ் கடை ஆக்கலாம்" என்ற தன் யோசனையை அப்பா கேலி செய்தது இவனை நொறுங்கச் செய்தது. 

"40 வருசமா கடை நடத்தறேன். இந்தப் பெரிய மனுசன் ஐடியா குடுப்பாருன்னுதான் காத்திட்ருக்கேன்"னு அம்மாகிட்ட நையாண்டி செஞ்சார்.

அது மட்டுமில்ல, வீட்டு மாப்பிள்ளைங்களுக்கு நேரா மட்டந்தட்டுறது, தங்கச்சிங்க அதை ரசிக்கறதுன்னு, நோகடிச்சது நிறைய.

புள்ள சரியா செட்டில் ஆகலைங்கறத அப்பா ரசிக்கிறாரோன்னு சந்தேகமே உண்டு அருணுக்கு.

மளிகைக் கடைலேருந்துதான் வீட்டுக்கு மாச சாமான் வரும். இவனுக்குக் கல்யாணம் ஆன பிறகு, இவன் சம்பளத்தை அம்மாகிட்டதான் கொடுத்தான். வீடு அம்மாவோட நிர்வாகந்தான். கலயாணத்துக்குப் பிறகு அந்த ரெண்டு வருசம் ஒரே வீட்டுல இருந்தது, அடுத்த சென்மத்துல கூட மறக்காது.

சில்லு சில்லா தேஞ்ச சோப்பைத்தான் கயலுக்குன்னு அம்மா கொடுக்கும். அதாவது அவங்க குளிச்சு தேஞ்சு தூக்கி எறியறதெல்லாம் ஒட்டி மருமகளுக்கு வைக்கும். 

துணிமணி, உள்ளாடை, நாப்கின் எல்லாத்துக்கும் அம்மா எதுனா இடிச்சு காட்டிட்டுதான் காசு அவுக்கும். இவ வந்து அருண்கிட்ட அழுவா. ஒரு ஆம்பளை நொறுங்கிப் போறதுன்னா பொண்டாட்டி முன்னாடி கையாலாகாம நின்னு அவ அழறதைப் பாக்கும்போதுதான்.

தனிக் குடுத்தனம் போகணும்னா வாங்குற சம்பளம் போதாதுன்னு நல்லாவே தெரியும். அதுனால எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருந்தான் அப்போ.

எதுக்கோ ஒரு நாள், "ஏம்மா இப்படிப் பண்ற" னு அம்மாகிட்ட கேட்டதுக்கு அப்பாவுக்குக் கோவம் வந்து, காட்டுக் கத்தலா கத்துனார்.

"தொரைக்குக் கோவம் வேற வருதோ. கல்யாணம் பண்ணிகிட்டா போதுமா? குடும்பத்தை தனியா நின்னு நடத்திப்பாரு. அப்ப வலி புரியும். இதுல கோவ மயிரு ஒன்னுதான் கொறைச்சல்"

அடுத்த நாளே வாடகைக்கு வீடு பாத்து தனிக்குடுத்தனம் ஆரம்பிச்சாச்சு. கால் வயிறோ, அரை வயிறோ, அவமானப்படாம வாழ முடியுது. என்ன ஒன்னு, கையில் ஒன்னும் மிஞ்ச மாட்டேங்குது. இதுல பையன் பொறந்ததுக்கு அப்புறம் இன்னும் நெருக்கடியா இருக்கு. இந்த பட்டறை ஆரம்பிச்சு நல்லா போச்சுன்னா வாழ்க்கையே மாறிப் போயிரும்.

மணியைப் பாத்தான் அருண். பதினொன்னா?

இவ்வளவு நேரம் ஆச்சு, இந்த முத்து ஏன் இன்னும் வர்ல? என்னவோ சரியாப்படலையே.

மறுபடியும் முத்துவுக்கு போனைப் போட்டான்.

This number is either switched off or not reachable...

******


மணி மதியம் 12..

கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை தகர்ந்து, மனசு சிந்திக்காத நிலைக்கு கிட்ட்த்தட்ட வந்திருந்தது அருணுக்கு.

என்ன ஆகியிருக்கும் முத்துவுக்கு? 

முத்து மனசு மாறி இருப்பானா? அப்டின்னா எதுனால?  அப்டியே இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாமே? ஒரு வேளை சொல்ல சங்கடப்பட்டிருப்பானோ?

தொடர்ந்து சிந்தித்ததில் குழப்பந்தான் மிஞ்சியது. சுயதொழில் கனவு நொறுங்கிக் கொண்டிருப்பதை மனம் உணர்ந்து கொள்ளத் துவங்கி இருந்தது. எந்தக் கணத்திலும் கண்ணில் நீர் வந்துவிடத் தயாராய் இருந்தது.

டக்கென்று ஒரு மின்னல். ஏதாவது ஆக்சிடெண்ட்?

தன் பிரச்னை திடீரென மனசை விட்டு அகன்று முத்துவைப் பற்றிய கவலை பெரிதாகி நின்றது.

உடனே முத்துவின் மனைவிக்கு போன் அடித்தான். அதுவும் ஸ்விட்ச் ஆஃப்.

இனி யோசிப்பதில் பொருளில்லை. நேரில் போய் பார்த்து விடுவதே நல்லது எனத்தோன்றி விட, முத்துவின் வீட்டை நோக்கி வண்டியை விட்டான் அருண்.

******

"வாங்கண்ணா" சுருக்கமாய் வரவேற்றாள் மலர், முத்துவின் மனைவி.

"முத்து இருக்கானா?"

"அவரு அவசரமா வெளியூர் போயிருக்காருண்ணா" என்றவள் சற்று நிதானித்து, "அவங்க அக்காவுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்திக்கு போன் வந்துச்சு. அதான் பாத்துட்டு வர்லாம்னு போயிருக்காரு"

"சரிம்மா, சும்மாதான் பாக்கலாம்னு வந்தேன். முத்து வந்தான்னா சொல்லிரு"

முத்துவின் உதவி இனி இல்லையென்றாகி விட்டது. காரணம் எதுவாய் இருந்தால் என்ன?

மனசும் உடம்பும் சோர்ந்து போய் இருந்தது அருணுக்கு.

கயலுக்கு போன் போட்டான்.

"என்னாச்சு, வேலை முடிஞ்சுதா,  முத்தண்ணன் கையெழுத்து போட்டாரா"

"ஏன் வர்ல, எதுனா விசாரிச்சீங்களா?"

"இப்ப என்னங்க செய்றது? சரி, மொதல்ல வீட்டுக்கு வாங்க, சாப்டுட்டு அடுத்து என்னன்ன யோசிப்போம்"

"நான் எதுனா கடைல சாப்டுக்கறேன். நாம பட்டறைக்கு வாடகைக்கு எடம் பாத்திருந்தோம்ல, அந்த ஓனரைப் போய் பாத்துட்டு வந்துர்றேன். நாளைக்கு அட்வான்ஸ் தாறதா சொல்லிருந்தேன். இன்னும் ரெண்டு நாள் வாய்தா வாங்கிட்டு வாரேன்."

"சரி, தைரியமா இருங்க, இங்க எதுவும் சுளுவா கெடைச்சிராது, போராடித்தான் ஆவணும். புரியுதா, மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரோட்டப் பாத்து பத்திரமா வண்டிய ஓட்டுங்க"

******

"தம்பி, என்ன மொகமெல்லாம் சோர்வாத் தெரியுது?"

"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே, வண்டில வந்தது அப்டித் தெரியுது போல"

"என்ன சேதி தம்பி?"

"அட்வான்ஸ் நாளைக்கு தாரதா சொல்லிருந்தேன்ல, பணம் கொஞ்சம் டைட்டா இருக்கு இப்போ, அடுத்த வாரம் தர்லாமான்னு கேக்கலாம்னு வந்தேன்"

"ஒன்னு சொல்ட்டுமா தம்பி. அட்வான்சே இப்ப வேணாம். மொதல்ல தொழிலை ஆரம்பிங்க. நாலைஞ்சு மாசம் கழிச்சு குடுத்தா போதும். உங்கள மாதிரி நானும் கீழேருந்து மேல வந்தவந்தான். கவலைப் படாம கெளம்புங்க"

அருண் பதிலேதும் சொல்லவில்லை. கையெடுத்துக் கும்பிட்டான். 

ஒரு வாசல் மூடுனா மறு வாசல் திறக்குது. 

நம்பிக்கையுடன் வண்டியைக் கிளப்பினான் அருண்.

*******

தட்டில் சோறும் குழம்பும் போட்டது போட்டபடி இருக்க, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அருண்.

"சாப்பிடுங்க, பாத்துகிட்டேயிருந்தா எப்படி?"

"என்னால சாப்ட முடியல கயல்"

அருண் கண்களில் மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் வழிந்தது. 

"என்னதிது சின்னப்புள்ளையாட்டம்? இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி ஒடஞ்சி போறீங்க. உங்க உறுதியப் பாத்துதான் நான் தெம்பா நிக்கணும். கண்ணைத் தொடைங்க மொதல்ல"

அருண் எழுந்து சென்று மீண்டும் முகத்தைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அவன் சாப்பிட்டு முடியும் வரை இருவருக்குள்ளும் எந்த உரையாடலுமில்லை.

"கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம தூங்குங்க. மத்ததெல்லாம் அப்றமா பேசிக்கலாம்".

"இல்ல கயல், என்னால இப்ப தூங்க முடியாது. என்னவோ படபடப்பாவே இருக்கு"

"இப்படி ஒரு துரோகத்தை முத்து பண்ணுவான்னு நான் நெனைச்சுக்கூடப் பாக்கல"

"எதெ, துரோகமா? ஏன் மாமா பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்ற? தப்பு மாமா, தப்பு. இப்டில்லாம் யோசிக்காத"

"நம்ப வச்சுக் கழுத்தறுக்கிறது துரோகம்தானே. வெறெப்படி சொல்றது?"

"எனக்கு ஷ்யூரிட்டி போடுன்னு முத்தண்ணன்கிட்ட நீ கேட்டியா? இல்லியே. அவரேதான தானா வந்து நான் ஷ்யூரிட்டி போடறேன்னு நின்னாரு. அப்ப இனிச்சிது உனக்கு. இப்போ அவரு சூழ்நிலை என்னன்னு யாருக்குத் தெரியும்? உனக்கு காரியம் ஆகலைன்ன உடனே துரோகின்ற, மறுடியும் சொல்றேன், தப்பு மாமா, ரொம்பத் தப்பு நீ பேசறது"

"என் வலி எனக்குத்தான்டி தெரியும். உனக்கெப்படிப் புரியும்?

"என்னா பெருசா வலி அது இதுன்றே, இப்ப என்னாயிருச்சுன்னு இவ்ளோ அனத்துற? ஷ்யூரிட்டி போட இன்னொருத்தர் கெடைச்சா லோன் குடுக்கப்போறாங்க. கொஞ்சம் நிதானமா யோசி, இதை எப்படித் தாண்டி வர்லாம்னு"

"உனக்கு வலிக்கிற மாதிரி முத்தண்ணனுக்கு எவ்ளோ வலி இருக்குமோ, யாருக்குத் தெரியும்? அவசரப்பட்டு வார்த்தையை விடாத"

பதில் பேசாமல் அருண் மெளனமாய் இருந்தான். கயல் சொன்னதில் இருந்த நியாயம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

காலிங் பெல் ஒலிக்கும் சத்தம். கயல் எழுந்து போய் கதவைத் திறந்தாள். வந்தது கேசவன், கயலின் தம்பி, +2 படிக்கிறவன்.

"வாடா, ஸ்கூல் போகல இன்னிக்கு?"

"இல்லக்கா, ஸ்கூல் லீவு இன்னிக்கு"

"என்ன ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒன்னுமில்லடா"

அக்காவும் தம்பியுமாய் பேசிக் கொண்டே கொல்லைப்புறம் சென்றனர். அருண் ரூமுக்குப் போய் படுத்து தூங்க முயற்சித்தான்.

*******

மாலை 7 மணி.

அருணின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது கயலுக்கு. அருண் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

"ஏங்க போன் அடிக்குது, கேக்கலியா" என்றவாறு உள்ளே வந்தாள் கயல்.

அருண் எழுந்து உட்கார்ந்து போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"முழிச்சிட்டுத்தான் இருக்கீங்களா, யார் போன் அடிச்சா, ஏன் எடுக்கல?"

"முத்துதான் போன் பண்ணான்".....

********

சற்றும் யோசிக்காமல் கயல் முத்துவுக்கு போன் செய்தாள்.

"ஹலோ அருண், நாந்தாண்டா"

"அண்ணே, நான் கயல் பேசுறண்ணே"

"என்னம்மா, என் கூட பேச மாட்டானாமா, கோவமா இருக்கானா?"

"கோவமா, உங்க மேலயா, எப்டின்னே? அதெல்லாம் ஒன்னுமில்ல, இன்னிக்கு ரொம்ப அலைச்சல் இல்லியா, அதான் சாயந்தரமா படுத்தவர் இன்னும் எந்திரிக்கல. செல் சார்ஜ்ல போட்ருந்தார் ஹால்ல, அதான் நான் வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆயிருச்சு"

"சாரிம்மா, என் சூழ் நிலை சிக்கலாய்ருச்சு. அதான் என்னால ஷ்யூரிட்டி போட முடில. அருண் ரொம்ப அப்செட் ஆயிட்டானா?"

"ஆமாண்ணே, ரொம்பவும் அப்செட் ஆயிட்டாரு. ஆனா உங்க மேல துளி கூடக் கோவம் இல்லண்ண அவருக்கு. என்கிட்ட முடியாதுன்னு சொல்ல முடியாம முத்து எவளோ வருத்தப் படுறானோன்னு உங்களை நினைச்சுதான்ன கவலைப்பட்டாரு. மத்தபடி ஷ்யூரிட்டிக்கு இன்னொருத்தர் கிட்ட பேசிட்டிருக்கோம். ஒன்னும் பிரச்னை இல்லண்ணே"

"அப்பாடா, இப்பதாம்மா நிம்மதியாருக்கு, அருண் எப்டி எடுத்துப்பானோன்னு ரொம்ப கவலைப்பட்டேம்மா. ஆக்சுவலா என்னாச்சுன்னா..."

"அண்ணே, அண்ணே, வேணாம்னே, எதுவா இருந்தா என்ன, விடுங்க, பாத்துக்கலாம். நீங்க வருத்தப்படாதீங்க. கொஞ்சம் இருங்க, அவர எழுப்பி போனைத் தரேன்"

"வேணாம்மா, அவன் தூங்கட்டும், எழுப்பாத. நான் நாளைக்கு நேர்ல வந்து பேசிக்கறேன்."

"சரிண்ணே, வச்சிடறேன்"

அருண் கயலையே பாத்துகிட்ருந்தான்.

"எங்கடி கத்துகிட்ட இப்டில்லாம் பேச?"

"ஹூம், இதுக்கெல்லாம் ட்ரெய்னிங்கா தருவாங்க, அப்டியே பேச வேண்டியதுதான். அப்றம் நாளைக்கு முத்தண்ணன் வந்து பேசுனா முகத்தைக் காட்டாம, நான் சொன்ன மாதிரியே பேசணும், புரியுதா?"

"புரியுதுடி. நான் சமாளிச்சுகிறேன்"

நம்பிக்கைக் கீற்றுடன் துவங்கிய ஒரு நாள், சோர்வுடன் முடிந்தது.

*****


இன்னியோட மூணு நாள் ஆச்சு, பேங்க் வரைக்கும் போய் ஷ்யூரிட்டி வராம திரும்பி வந்து. அடுத்த நாள் லேருந்து அருண் வழக்கம் போல வேலை செய்ற பட்டரைக்குப் போய் வெல்டிங் அடிக்க ஆரம்பிச்சுட்டான்.

ஷ்யூரிட்டிக்கு வேற யாரையாவது முயற்சி பண்ணலாம்னு கயலும் அருணும் யோசிச்சு யோசிச்சு ஒருத்தரும் தேறல.

அருண் மட்டும்தான் சோர்ந்து போனானே தவிர, கயல் நம்பிக்கையோடுதான் இருந்தாள். 

"எனக்கு ஏதோ உள் மனசுல தோணிட்டே இருக்கு மாமா, இதுல நாம ஜெயிச்சிருவோம்னு.

அருண் வேலை செய்ற பட்டரை முதலாளிக்கு அவர் கவலை.

"என்னப்பா, எப்ப பட்டரை ஓப்பன் பண்றே. இந்த மாசம் பூரா வேலைக்கு வருவியா, எதுக்குக் கேக்கறேன்னா, எடுத்த வேலையெல்லாம் முடிக்கணும்ல." 

"இந்த மாசக் கடைசி வரைக்கும் வேலைக்கு வருவேண்ணே. பட்டரை வேலைல்லாம் அடுத்த மாசம்தான் ஆரம்பிக்கணும்."

எதிர்பாராத நேரத்தில் போன் ஒலித்தது.

"யாரு, அருண்குமார்தானே?"

"ஆமாம், நீங்க?"

"... பேங்க்லேருந்து பேசுறோம். நீங்க நேர்ல வந்து ஆதார் செக் பண்ணீட்டிங்கன்னா உங்க லோனை ப்ராசஸ் பண்ணிர்லாம். இப்ப வாரீங்களா?"

"மேடம், ஷ்யூரிட்டி போடறதுக்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கல. ஒரு ரெண்டு நாள் ல நானே போன் பண்ணிட்டு வரேன்"

"உங்க ஷ்யூரிட்டிதான் ஏற்கனவே வந்து கெயெழுத்து போட்டுட்டாரே சார். இப்ப உங்க ஆதார் செக் பண்றது மட்டுந்தான் பெண்டிங். உடனே கிளம்பி வாங்க"

"ச...ச...சரி மேடம். இப்பவே வரேன்"

அருணுக்கு குழப்பமாய் இருந்தது. முத்து மனசு மாறி நேரே போய் கையெழுத்து போட்டுட்டானா, அப்டின்னா கூட சொல்லிட்டுதான போயிருப்பான்.

முத்துவுக்கு போன் போட்டான்.

"சொல்லுடா. யார்னா ஷ்யூரிட்டிக்கு ஆள் கெடைச்சாங்களா?"

"இ..இ.இல்லைடா. தேடிட்ருக்கோம்."

"என்ன விஷயமா போன் பண்ணுன?"

"ஒரு சேதியும் இல்லடா. சும்மாதான் பண்ணேன். அப்றமா பேசுறேன்"

வேற யார் லோன் அக்கவுண்ட்னு நெனச்சு தப்பா நமக்கு போன் பண்ணிருப்பாங்களோ. சரி, எதுக்கும் நேர போய் பேங்க்லயே விசாரிப்போம். 

முதலாளியிடம் சொல்லிவிட்டு வங்கிக்குக் கிளம்பினான் அருண்.

*******

வங்கியில் வண்டியைப் பார்க் பண்ணும்போதே வாசலில் கேசவன் நிற்பது தெரிந்தது. இவன் எங்க இங்க வந்தான் என்று யோசித்துக்கொண்டே உள்ளே போனான் அருண்.

"நீ எங்கடா இங்க?"

"அத்தான், மத்ததெல்லாம் அப்றமா சொல்றேன். என் ஃபிரெண்டு யுவராஜ்னு சொல்லிருக்கேன்ல. அவங்க அண்ணன் உங்க லோனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்து போட வந்திருக்கார். மேனேஜர் ரூம்லதான் இருக்கார். வாங்க உள்ள போலாம்"

அருணுக்கு குழப்பமும், ஆச்சர்யமும், சற்றே எரிச்சலும் கூட வந்தது. இந்தப்பொடியன் நமக்கு லோன் ஷ்யூரிட்டி ஏற்பாடு பண்றதான்னு சின்னதா ஒரு பொறாமை மனசுக்குள்ள எட்டிப் பார்த்தது.

"சார், உங்களை மேனேஜர்  வந்து பாக்க சொன்னார்"ன்னு சொல்லிட்டு மேனேஜர் ரூமை சுட்டிக் காட்டினார் வங்கி ஊழியர்.

"வணக்கம் சார், நான் அருண், லோன் விஷயமா வந்திருக்கேன்"

"வாங்க அருண். குமார் சார்தான் உங்களுக்கு ஷ்யூரிட்டி போட்ருக்கார். நம்மளோட மேஜர் கஸ்டமர். உங்க நிலைமை புரிஞ்சு உதவிருக்கார். நல்லபடியா தொழில் பண்ணி சிக்கல் இல்லாம லோனை அடைக்கணும், சரிங்களா"

"நிச்சயமா சார். எந்தப் பிரச்னையும் வராம பாத்துக்கறேன் சார். சரியான நேரத்துக்குள்ள லோன் ட்யூலாம் கட்டிருவேன் சார்" னு மேனேஜர்கிட்ட சொல்லிட்டு, குமாரின் கைகளைப் பிடித்து "உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில சார். என்னை நேர்ல கூடப் பாத்ததில்லை நீங்க.  இப்டி ஒரு உதவி பண்றதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் சார். ரொம்ப நன்றி சார். வாழ் நாள் முழுசும் இந்த உதவியை மறக்க மாட்டேன் சார்" என்றான் உடைந்த குரலுடன்.

"அட, என்னங்க பெரிய வார்த்தைலாம் சொல்லிட்டு.. நல்லா உழைச்சு பெரிய ஆளா வாங்க சார்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தார் குமார்.

வெளியே வந்து ஆதார் ரேகை சரி பார்த்து முடித்தான் அருண்.

"இன்னும் ரெண்டு நாள்ல செக் ரெடியாய்ரும் சார். நானே உங்களுக்கு போன் பண்ணித் தகவல் சொல்றேன்"

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

எதிரில் உள்ள பங்க் கடையில் ஆளுக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு, குமாரை வழியனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள் அருணும், கேசவனும்.

**********


அருண், கயல், கேசவன் மூவரும் இணைந்து உணவருந்தியவாறே உரையாடிக் கொண்டிருந்தனர்.

"லோன் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா ஷ்யூரிட்டிக்கு நீ இவ்ளோ முயற்சி பண்ணிருக்க வேணாம்னு தோணுது கேசவா." அருண் ஆதங்கத்தோடு சொன்னான்.

"மாமா, நான் எதுவுமே செய்யலம் யுவராஜ்கிட்ட, உங்களுக்கு லோன் கிடைக்கறதுல பிரச்னை இருக்குன்னு சும்மா சொல்லிட்ருந்தேன். அவன், தானே போய் அவங்க அண்ணன்கிட்ட சொல்லி உதவி கேட்ருக்கான். இன்னிக்குக் காலைல யுவராஜ் போன் பண்ணி சொன்னபிறகுதான் எனக்கே தெரியும். 

அவங்க அண்ணனுக்கு பேங்க் மேனேஜர் பிரெண்டு போல. நேர பேங்குக்கு போயிட்டு மேனேஜர் கிட்ட பேசிட்டு ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டுட்டாரு. யுவராஜ் எனக்கு போன் பண்ணி பேங்குக்குப் போடான்னு சொன்னதாலதான் நான் அங்க வந்தேன் மாமா"

"உண்மைலயே ஆச்சரியமா இருக்குடா. ப்ரெண்ட்ஷிப்க்கு இவ்ளோ ஸ்ட்ரெங்க்த் இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு எனக்கு" என்றான் அருண்.

"நாந்தான் சொன்னேனே மாமா, ஏதாவது ஒரு வகைல நமக்கு உதவி கெடைக்கும்னு".

தன் பங்குக்கு கயலும் மகிழ்ச்சியைப் பகிர்கிறாள்.

"யுவராஜ் கேசவனுக்கு ஃப்ரெண்டு. எனக்கு முத்து ஃப்ரெண்டு" சொல்லிவிட்டு விரக்தியில் சிரித்தான் அருண்.

"என்ன மாமா, இன்னமும் அதையே பேசிட்ருக்க. அந்த பேச்சை விட மாட்டியா" என்றாள் கயல். 

"எப்டிடி விட முடியும். அது சரி, நீ என்ன சொல்ல வர்றே? முத்து தப்பே பண்லைன்றியா? ஏதோ ஒரு காரணம், அவன் பொண்டாட்டியோ, அப்பா அம்மாவோ யாரோ ஒருத்தர் தடுத்தாங்கன்னு கூட வச்சுக்குவோம். ஆனா என்னை பேங்க் வாசல்ல காக்க வச்சிட்டு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டுப் போனானே, எனக்குக் காலத்துக்கும் மறக்க முடியுமா அந்த வலியும் அவமானமும்?"

"ஒன்னை யாரு மறக்க சொன்னா? ஆனா அதையே நினைச்சு நினைச்சு தொணப்பிட்ருக்காத. இப்ப லோன் கிடைச்சிருச்சு. அடுத்து ஆக வேண்டியதுல கவனத்தை செலுத்து. முத்தண்ணன் பண்ணது துரோகம்னே இருந்தாலும், நீ ஜெயிக்கறதுதான் அதுக்கு கொடுக்கற பதிலடியா இருக்கணும். இன்னிக்கு ஒருத்தர் வந்து, நீ யாரு, எப்படி இருப்ப, நேர்மையான ஆளா, ஃப்ராடான்னு எதுவுமே தெரியாம, தம்பியோட ஃப்ரெண்டுங்கற ஒரு காரணத்துக்காகவே கையெழுத்து போட்டார்ல, அதை மறக்காம நினைச்சு நினைச்சுப் பாரு. எதிர்காலத்துல நாம வளந்தோன்ன, அப்டி யாராவது ஒருத்தரையாச்சும் தூக்கி விடணும்னு வாழ்க்கைல நினைச்சுக்கோ. அவ்ளோதான் நான் சொல்லுவேன். இந்த துரோக டாபிக்கை இதோட விடு. ஓகேவா" முத்தாய்ப்பாய் முடித்தாள் கயல், கதையோட சேர்த்து.

முற்றும்.

Sunday, September 22, 2024

சொல்ல மறந்த கதை

அப்பா, வாக்கிங் போறேன், நீயும் வாயேன்.

35 வயது மகன் 70 வயது அப்பாவை அழைக்கிறான்.

நீ போய்ட்டு வாப்பா, நான் சாயந்தரத்துல போய்க்கறேன்.

தனியா வாக்கிங் போக போரடிக்குதுன்னுதானே கூப்டுறேன், வாயேம்பா.

தந்தையும் மகனுமாக பார்க்கில் அரை மணி நேரம் சுற்றி வந்தார்கள்.

செத்த நேரம் உக்காராலாமா தம்பின்னு சொல்லிட்டு மகனின் ஒப்புதலுக்காய்ப் பார்த்தார் கருப்பையா.

சரிப்பான்னுட்டு பெஞ்ச்சுல சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தனர் அப்பனும் பிள்ளையுமாய்.

அம்மாவை ரொம்ப மிஸ் பண்றியாப்பா?

ஆமாம் தம்பி, இன்னும் கொஞ்ச நாள் அவ நம்மோட இருந்திருக்கலாம். சீக்கிரமா போயிட்டாப்பா.

ஆமாம்பா, அம்மா ரொம்ப சீக்கிரம் நம்மள விட்டுப் போயிருச்சு, ஆனா அம்மாவை நீ வருத்தப்பட விட்டதே இல்லையேப்பா - அப்பனுக்கு ஆறுதல் சொன்னான் மகன்.

கடைசி நேரத்துல மனசு விட்டுப்பேச ஒரு சந்தர்ப்பம் கொடுக்காம கொண்டு போய்ட்டானே. ஒரு பத்து நிமிசம் நெகா வந்திருந்தா சொல்லணும்னு நிறைய வச்சிருந்தேன். ஆனா மூணு நாள் நெகா இல்லாம இருந்து அப்டியே போயிட்டா மகராசி. 

கண்களில் கண்ணீர் முட்டுக் கட்டியது இருவருக்கும்.

*****

பகல் பொழுது பரபரப்பாக ஓடிருச்சு. புள்ளைங்கள ஸ்கூல்ல கொண்டு விடுறதுல ஆரம்பிச்சு, ஆபீஸ், மீட்டிங் அது இதுன்னு நிக்க நேரமில்லாம போனதுல அப்பாட்ட காலைல பேசிட்டிருந்தது ஞாபகத்துக்கே வரல. ராத்திரி சாப்பிடும்போது அப்பாவைப் பாத்ததும்தான் அதைப் பத்தின சிந்தனை மீண்டும் வருது.

ராத்திரி 10 மணிக்கு வீடே அடங்குனப்புறம் அப்பாவோட அறைக்குப் போனான் முருகன்.

யப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்.

என்ன தம்பி, என்ன பேசணும்.

அம்மாகிட்ட என்னவோ பேச முடியாம போயிருச்சுன்னல்ல, எங்கிட்ட சொல்லேன். உனக்கும் ஆறுதலா இருக்கும்ல. 

எதிர்புறம் கனத்த மெளனம்.

கட்டிலில் படுத்திருந்த கருப்பையா எழுந்து உட்கார்ந்தார், ஆழ்ந்த சிந்தனை.

சாரிப்பா, உனக்கு சொல்ல வேணாம்னு தோணுச்சுன்னா விட்ருப்பா, ஏதோ கேக்கணும்னு தோணுச்சு, அதான் கேட்டேன்.

அப்டில்லாம் ஒண்ணுமில்லப்பா, எம்புள்ளட்ட பேச எனக்கென்ன தயக்கம், எங்கருந்து ஆரம்பிக்கறதுன்னு யோசிக்கிறேன்.

கட்டிலிலிருந்து எழுந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தார், பிள்ளைக்கு முதுகைக் காட்டியவாறே.

லைட்டை ஆஃப் பண்ணிருப்பா.

இருட்டு மனசைத் திறப்பதற்கு வசதியான சூழல் போல.

***"""""

வேலைக்குப் போகாதவன், சுய சம்பாத்தியத்துக்கு வழியில்லாதவன்லாம் கல்யாணம் பண்ணிக்க கூடாதுப்பா.

கட்டுன பொண்டாட்டிக்கு சோத்துக்கும் துணிமணிக்கும் செலவு பண்ண வழியில்லாதவனுக்கு எதுக்கு கல்யாணம்?

என்னடா சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுறனேன்னு பாக்குறியா தம்பி?

அதெல்லாம் இல்லப்பா, நீ சொல்லு.

நான் எட்டாப்பு படிக்கிறப்பயே, எங்கப்பா, அதான் உங்க தாத்தா இறந்துட்டாங்க. வீடு நிர்வாகம்லாம் அம்மாதான் அப்றமா.

நீ எதுக்குடா வேலைக்கெல்லாம் போகணும், நம்ம நிலத்துல விவசாயம் பாத்தா போதாதான்னு சொல்லிருச்சு எங்கம்மா.

எனக்கும் அது வசதியா இருந்துச்சு. விவசாயம், பசங்க கூட ஊர் சுத்துறது, சினிமா ட்ராமான்னு ஜாலியா பொழுதைக் கழிச்சேன். உங்கம்மாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போ எனக்கு வேலை எதுவும் இல்லை. ஒரே புள்ள, குடும்ப சொத்து வயல் வாய்க்கால் இருக்குன்னு பொண்ணு குடுத்துட்டாங்க. எனக்கும் உங்க அம்மாவுக்கும் அவ்வளவு மனப் பொருத்தம்.

பிரச்னை என்னன்னா, உங்கம்மா யார்கிட்டயும் பணிஞ்சு அடங்கிப் பேசமாட்டா, அது அவ குணம். எங்கம்மாவுக்கு அது புடிக்கல. அவ தங்கிட்ட அடங்கி நடக்கணும், எல்லாம் தன்னைக் கேட்டே செய்யணும்னு  எங்கம்மா நினைச்சது நடக்கல. அது மட்டுமல்ல, சொல்லுக்கு சொல் எதிர்த்துப் பேசிருவா. அவ்ளோதான், மருமகள் எதிரியாய்ட்டா.

மருமகளைப் புடிக்காம போன உடனே, மகனும் எதிரியாயிட்டான்.

சிக்கல் எங்க ஆரம்பிச்சுதுன்னா, இருக்கற சொத்து பூராம், அம்மா வழி சொத்து, அம்மா பேர்லதான் நிலம் நீச்சு எல்லாமே.

பண நிர்வாகம் பூரா அம்மா கைலயே இருந்ததுனால, நாங்க ரெண்டு பேரும் அம்மா கிட்ட கையேந்த வேண்டிய நிலை.

சொன்னா வெக்கக்கேடு.  எனக்கு சோப்பு துணிமணிக்குக் கூட காசு தரல எங்கம்மா. எனக்கே இந்த கதின்னா, என் பொண்டாட்டிக்கு?

அவ பாதி நாள் பட்டினிதான். சமையல் கட்டு பக்கமே நானும் அவளும் போகக்கூடாது.

நீங்க எதுனா வேலைக்குப் போலாம்லன்னாஉங்கம்மா ஒரு நாள்.

எனக்கோ வயசு கிட்டத்தட்ட 30 ஆய்ருச்சு. அதுக்கப்புறம் என்ன  வேலைக்குப் போறது, எங்க போய் தேடுறது, ஒன்னுமே புரியல எனக்கு. 

கிட்டத்தட்ட நரக வாழ்க்கை.

அப்போதான் ஒரு நாள்...

******

அப்போதான் ஒரு நாள் உங்கம்மா, "என்னிக்கு நீங்க சுயமா நாலு காசு சம்பாதிச்சு எனக்கு கஞ்சியோ கூழோ ஊத்துற நிலைமைக்கு வாரிங்களோ, அன்னிக்கு நான் வந்து உங்களோட குடுத்தனம் பண்றேன்"னு   சொல்லிட்டு அவங்க அம்மா வீட்டுக்குக்  கெளம்பிப் போயிட்டா.

எங்கம்மாவுக்கு கொண்டாட்டமாப் போச்சு. பெத்த புள்ள பொண்டாட்டி கூடக் குடுத்தனம் பண்ணாம தனியா நிக்குறானேன்னு வருத்தம்லாம் இல்ல.

என்கிட்டயே வந்து, அவளைப் பத்தி நெதைக்கும் பொரணி பேசும். அவ குடும்பத்துக்கு ஆகாதவ, திமிரு புடிச்சவ, அவளால குடும்பம் வெளங்காது, அது இதுன்னு ஓதிகிட்டே இருக்கும். அம்மாவை எதுத்துப் பேசியே பழக்கமில்லாத எனக்கு அப்போவும் எதுக்க தைர்யமில்ல.

இப்டியே நாலைஞ்சு மாசம் ஓடுச்சு. திடீர்னு எங்கம்மா எனக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சுது.

மொதமொதல்ல அம்மாவை எதுத்துப் பேசுனேன். 

வேற கல்யாணம்லாம் ஒத்துவராது. இந்த சென்மத்துல அவதான் எனக்கு. கடைசி வரைக்கும் அவ அம்மா வீட்லயே இருந்தாலும் பரவால்ல. இன்னொரு கல்யாணம் நடக்காதுன்னு அடிச்சுப் பேசிட்டேன்.

அம்மா ஒன்னும் பேசுல. அமைதியா பாத்துகிட்டே இருந்துச்சு. என்னிக்கும் பேசாதவன் இன்னிக்கு எதுத்துப் பேசுறதை அம்மாவால தாங்கிக்க முடியல.

அடுத்து அம்மா என்ன செஞ்சதுன்னா....

*******

அடுத்து அம்மா என்ன செஞ்சதுன்னா, கதவை சாத்திகிட்டு உடம்பு பூரா மண்ணெண்ணைய ஊத்திகிட்டு கொளுத்திக்கப் போறேன்னு கத்துது. எனக்குப் பதறுது. இந்தப்பக்கம் நின்னு கதறுறேன். வேணாம்மா வேணாம்மான்னு கதவைத் தட்டுறேன். அக்கம்பக்கத்துல உள்ளவங்க வந்து கதவை உடைக்கறதுக்குள்ள அம்மா தீக்குச்சியைப் பத்த வைச்சிருச்சு. சாக்கு பெட்ஷீட்னு கெடச்சதை எல்லாம் எடுத்து அம்மா மேல போட்டு தீயை அணைச்சாலும், அம்மாவுக்கு தீக்காயம் உடம்பு பூராவும். தூக்கிட்டு ஓடுணோம் தர்மாஸ்பத்திரிக்கு. 

பத்து நாள் வரைக்கும் பொழைக்க வாய்ப்பில்லன்னுதான் டாக்டர்லாம் சொன்னாங்க. அம்மா துடியாய் துடிச்சுது ஒவ்வொரு நொடியும். அம்மாவோட ஓலம் ஆசுபத்திரி பூரா கேக்கும், ராவும் பகலும்.

 எனக்கு மனசு விட்டுப் போச்சு. என்னடா வாழ்க்கைனு தோண ஆரம்பிச்சிருச்சு.

ஆசுபத்திரிக்கு உங்க தாத்தா, அதான் என் மாமனாரு பாக்க வந்தாரு. நாந்தான் அம்மாவப் பாக்க வேணாம்னு திருப்பி அனுப்சிட்டேன்.

ஒன்னு தெளிவா புரிஞ்சு போச்சு எனக்கு அப்போ. அம்மாவைத் தாண்டி எதுவுமில்ல. இந்த உசிரும் ஒடம்பும் வாழ்க்கையும் அம்மா கொடுத்தது. ஆனா அம்மாவுக்கு என் பொண்டாட்டிய ஏத்துக்க முடில. வேற வழியில்ல, அம்மா வழியில போறது ஒன்னுதான் வழி. இல்லை, செத்துத் தொலையணும், அதுக்கு தைரியம் வர்ல.

உடம்பு கொஞ்சம் தேறுனதும் அம்மா மறுடியும் கல்யாணப் பேச்சை எடுத்துது. நான் இந்த முறை மறுத்துப் பேசல. பேசுனா என்னாகும்னு பாத்தாச்சு.

மாயரத்துக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு, போய் பாத்துட்டு வர்லாம்னு அம்மா கூப்டுகிட்டே இருந்தது. நான் மறுத்துப் பேசலையே தவிர, பிடி குடுத்துப் பேசாம நழுவிகிட்டே இருந்தேன். 

ஒரு கட்டத்துல அம்மா சொல்படி கேப்போம்னு முடிவு பண்ணிட்டேன். அந்த வயசுல என்னால அவ்ளோதான் யோசிக்க முடிஞ்சது.

பொண்ணு பாக்கறதுக்கு நாள் முடிவு பண்ணிட்டோம். 

அன்னிக்குக் காலைல பத்து மணி இருக்கும். நானும் அம்மாவும் இன்னும் ரெண்டுமூனு சொந்தகாரங்களும் கெளம்பிகிட்டிருக்கோம்.

அப்போ அதிரடியா தனியா வந்து நின்னா ஒங்கம்மா..

*******

ஒரு சூறாவளி மாதிரி இருந்துச்சு அன்னிக்கு ஒங்கம்மா வந்து ஆடுன ஆட்டம்.

என்ன, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? ஒரு பொண்டாட்டிக்கு சோறு போடவே வக்கில்ல, இதுல இரண்டாவது கேக்குதா உனக்கு?ன்னு கேட்டுகிட்டே நான் போட்டுகிட்டிருந்த சட்டையைப் புடிச்சுக் கிழிச்சி எறிஞ்சா.

என்னா கெழவி, நான் என்னா உன் புள்ளய லவ் பண்ணிக் கட்டிகிட்டனா? நீதான பாத்து கட்டிவச்ச? சீமெண்ணய ஊத்திகிட்டு கொளுத்திகிட்டியாமே, அப்டி நான் என்ன குடும்பத்துக்கு ஆகாதவளா, முறைதவறிப் போயிட்டேனா, என்ன தப்பு பண்ணேன் சொல்லு. உங்கால்ல உழுந்து கெடக்கல, அதான, அதுக்கு இவ்ளோ ஆங்காரமா உசுரை உடற அளவுக்கு? உம்புள்ள வாழ்க்கையை நீயே கெடுக்கறியே.

இப்ப சொல்றேன் உங்க ரெண்டு பேருக்கும், ஆத்தாளும் புள்ளயும் கேட்டுக்குங்க. இந்த இன்னொரு கல்யாணம்கறது இத்தோட உட்ருங்க. மீறி எதுனா பண்ணீங்க, நானே ராத்திர்ல சீமெண்ணைய ஊத்தி ரெண்டு பேத்தையும் கொளுத்தி வுட்ருவேன்.

அம்மாவும் கொஞ்சம் எகிறுச்சு.

என்னடி, வாய் நீளுது. டேசன்ல கம்ப்ளேண்ட் குடுத்து உள்ள தள்ளிருவேன் பாத்துக்க.

என்னது, உள்ள தள்ளிருவியா? ஏற்கனவே காலைல நேரா போய் திருடமூரு டேசன்ல கம்ப்ளைண்டு குடுத்துட்டுதான் இங்க வந்துருக்கேன், தெரியுமா? ஆண்டு அனுபவிச்சு வாழ்ந்து முடிச்ச உனக்கே இவ்ளோ ஆங்காரம் இருக்கும்னா, இன்னம் வாழவே ஆரம்பிக்காத எனக்கு இருக்காதா. இனி ஒன்னிய ரெண்டுல ஒன்னு பாத்துர்ற முடிவுலதான் வந்துருக்கேன். கூட வர்றேன்னு சொன்ன எங்கப்பாரை கூட வர வேணாம்னு சொல்லிட்டு ஒண்டியாத்தான் வந்திருக்கேன். 

இத பார், இனிமே உன் பப்பு எங்கிட்ட வேவாது. எப்ப நீ உசிரை விட்டாவது என் வாழ்க்கையை அழிக்கத் துணிஞ்சுட்டியோ, இனி எப்பாடு பட்டாவது நான் வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன், அதுவும் உன் கண்ணு முன்னாடியே.

நான் உங்கம்மாவோட இந்தப் பேயாட்டத்தைப் பாத்து பயந்து போய் நின்னுகிட்ருக்கேன், எங்க அம்மாவுக்கும் காலெல்லாம் வெடவெடன்னு ஆடுது.

என்னைப் பாத்து பேச ஆரம்பிச்சா உங்கம்மா

*******

இங்க பாரு, இனி மேலாவது நம்ப வாழ்க்கையை எப்டி வாழ்றதுன்னு நாமளே முடிவு பண்ணுவோம். யார்ட்டயும் கையேந்திகிட்டோ, பயந்தோ வாழ வேண்டாம். கஞ்சியோ கூழோ நம்ம ரெண்டு பேரும் உழைச்சு சாப்டுவோம். குடிசையோ ஒண்டுக் குடுத்தனமோ நம்ம காசுல வீடு பாத்து குடுத்தனம் பண்ணுவோம்.

எதுக்கு ஒங்கம்மாவைத் திரும்பிப் பாக்குற? நீ எக்கேடு கெட்டாலும் பரவால்லை, சாவுற வரைக்கும், "அய்யோ, எங்கம்மாவை சாவ வுட்டுட்டனே" ன்னு மனசைக் குத்திகிட்டு கெடந்தாலும் பரவால்ல, நாம கொளுத்திகிட்டு செத்து, நம்ம ஆங்காரத்தைக் காட்டுவோம்னு நெனச்ச ஆத்தாளை இன்னும் எத்தினி நாள்தான் பாத்துக்கிட்டிருப்ப. எல்லாரும் ஒரு நாள் சாவத்தான் போறோம், உங்காத்தாவையும் சேத்துத்தான் சொல்றேன். இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது. கெளம்பு, எங்கூடக் கெளம்பி வா. ஒன்னும் வேணாம், கட்டிருக்குற துணியோட வா.

அவ சொன்னது ஒவ்வொண்ணும் என்னை அவ்ளோ பாதிச்சது. இவ்ளோ நாள் மனப்போராட்டத்துக்கும் முடிவு வந்தமாதிரி தெளிவு வந்துச்சு.

ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளிய வந்தோம். 

வெளில நின்னுகிட்டு, எங்கம்மாவைப் பாத்து சொன்னா,

இதே ஊர்லதான் உழைச்சு வாழப்போறோம். இனி இந்த வீட்டுக்கும் எங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இல்லை.

உன் சொத்துல நயாபைசா எங்களுக்கு வேணாம். நீ யாருக்கு வேணா எழுதி வை. நாங்க வேணும்னா பத்திரம் எழுதிக் கையெழுத்து போட்டுத் தர்றோம். ஆனா உன்னால எங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்கக் கூடாது. சீக்கு, நோவுன்னு வந்து கெடந்தீன்னா நாங்க வந்து பாத்துகிறோம், உன்னியக் கை விட்டுற மாட்டோம். புரிஞ்சுதா.

எங்க போறோம்னு தெரியல, ஆனா விடுவிடுன்னு நடந்து கெளம்பிட்டோம்.

*******

அன்னைக்கு நடுரோட்ல ஆரம்பிச்சுது எங்க வாழ்க்கை. ராத்திரி அம்மன் கோயில் வாசல்ல படுத்துக் கெடந்தோம். அப்றம் ஒரு ஒண்டுக்குடுத்தனத்துல வாடகைக்கு. ஆடுதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு வெளில தள்ளுவண்டி வச்சு கையேந்தி பவன் ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல பெருசா ஓடலை. ஆனா உங்கம்மா விடாம செய்யணும்னு சொல்லி கரெக்டா 7 மணிக்கெல்லாம் போய் தொடர்ந்து கடையைப் போட்டோம். அப்றம் யாவாரம் சூடு புடிச்சு, கும்மோணம், மாயாரம் போறவங்க எல்லாம் வாங்கி சாப்ட ஆரம்பிச்சாங்க. நடுவுல தீவாளி சீட்டு புடிச்சோம். இது அதுதான்னு இல்ல, எதெல்லாம் நம்மால முடியுமோ, நேர்மையா உழைச்சா பலன் இருக்கும்னு உங்கம்மா எனக்குப் புரிய வச்சா.

மூணு வருசம் கழிச்சுத்தான் நீ பொறந்த. ஒரு புள்ள போதும்னு ஆஸ்பத்திரிலயே குடும்பக் கட்டுப்பாடு பண்ணிகிட்டா உங்கம்மா.

நடுவுல உன் பாட்டி அப்பப்போ எதுனா சீண்டும். இவ போய் வாசல்ல நின்னு சத்தம் போட்டுட்டு வருவா. ஊர்ல எங்களுக்கும் மரியாதை வந்துச்சு. பாக்குறவன்லாம், சினேகமா சிரிக்கறதும், நல்லது கெட்டதுக்கு கூப்டுறதுமுன்னு நாங்களும் மரியாதையா வாழ ஆரம்பிச்சோம். நீ அஞ்சாம்பு படிக்கும்போதுதான் நம்ம கிராமத்து வீட்டைக் கட்டுனோம். வீடு கட்டுன அடுத்த வருசம் பாட்டிக்கு உடம்பு முடியாம போய்ருச்சு. நான் போய் நம்ம வீட்டுக்குக் கூப்டேன். எங்கம்மாவுக்கு வர விருப்பமில்ல. அப்றம் இவ படியேறிப் போய் அம்மாகிட்ட தன்மையா பேசுனா. 

என்னால இங்க வந்து உங்களைப் பாத்துக்க முடியாது. இப்ப ஓட்டலையும் கவனிக்கணும், புள்ளையையும் கவனிக்கணும். எங்களோட வந்து இருங்க. ஒரு சுடுசொல் சொல்லமாட்டேன். ஆயிரம் இருந்தாலும், அது உங்க புள்ளையோட வீடு.  உங்ககுக்கில்லாத உரிமையான்னு பக்குவமா பேசுனோன்ன அம்மா ஒத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துச்சு. கடைசி பத்து நாள் பிரக்னை இல்லை, துணியோட மணியோட போக ஆரம்பிச்சுது. உங்கம்மாதான் எல்லாத்தையும் கவனிச்சுகிட்டா. அம்மா கண்ணிலேருந்து தண்ணி தண்ணியா வடியும். அது அழுததா கூட இருக்கலாம், யாரு கண்டா.

அம்மா செத்ததுக்கு அப்றம் அந்த வீடு நிலம் எல்லாத்தையும் கோயிலுக்கு எழுதிக் கொடுக்க சொல்லிட்டா உங்கம்மா, பேங்க்ல அம்மா அக்கவுண்ட்ல இருந்த பணம், அம்மாவோட நகை எல்லாத்தையும் சேத்து.

எப்பேர்ப்பட்ட தேவதை கூட வாழ்ந்திருக்கேன் தெரியுமா என்றவாறு ரெண்டு கையையும் உயர்த்தி கும்பிட்டது அந்த இருட்லயும் எனக்குத் தெரிஞ்சுது.

நேரமாயிருச்சு தம்பி, நீ போய் தூங்கு, நாளைக்குப் பகல்ல ஓடியாடணும்ல.

இல்லப்பா, நாளைக்கு ஆஃபீஸ் லீவுதான். அது சரிப்பா, அன்னிக்கு நீ பொண்ணு பாக்க கெளம்புறப்போ, அம்மா திடீர்னு வந்துச்சுன்னு சொன்னல்ல, அம்மாவுக்கு எப்டித் தெரியும் நீ பொண்ணு பாக்கப் போறது.

யாரோ மொட்டைக் கடுதாசி போட்ருக்காங்க போல தம்பி, இல்லைன்னா எப்டி அப்டி கரெக்டா வருவா?

சரிப்பா, இப்ப நீ சொன்னது பூரா அம்மாவுக்கும் தெரியும், அப்றம் எதை சொல்ல முடிலன்னு வருத்தப்பட்ட?

குறிப்பிட்ட எதுவும் பேணும்னு இல்ல, இந்த பஞ்சாயத்தைப் பத்தி அதுக்கப்புறம் நாங்க பேசிகிட்டதே இல்லை. அதான் ஒரு தரம் பேசியிருந்தா ஆறுதலா இருந்திருக்கும்னு...

ஏம்ப்பா பொய் சொல்ற?

பொய்யா?

ஆமாப்பா, அந்த மொட்டைக் கடுதாசியைப் போட்டது நீதான்னு அம்மாகிட்ட சொல்லணும்னுதான நெனைச்சிருந்த?

அப்பா எழுந்து லைட்டைப் போட்டார். கிட்டக்க வந்து கையைப் புடிச்சிகிட்டு, "எப்டி தம்பி சொல்ற ?"

அம்மாதாம்ப்பா சொல்லுச்சு, நீ சொன்ன அத்தனையையும் சொல்லுச்சு, அதோட அந்த மொட்டைக் கடுதாசி மேட்டரையும். 

 அந்த மொட்டைக் கடுதாசியைப் பாத்த ஒடனேயே எனக்குத் தெரிஞ்சு போச்சு இது உங்கப்பாவோட வேலைதான்னு. எங்க வீட்டு அட்ரஸ் அந்த ஊர்ல ஒர்த்தனுக்கும் தெரியாது, உங்கப்பாரைத் தவிர.

ஒத்தைப் புள்ளையா பொறந்து ஆத்தாளோட ஆட்டத்தை சமாளிக்க வழியில்லாம உங்கப்பா தவிச்சது எனக்குப் புரிஞ்சுது. அதே சமயம், அவரு எம்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அப்டி கடுதாசி போட்டுருப்பாரு. அந்த நம்பிக்கை தந்த வேகம்தான் அன்னிக்கு நான் வந்து சண்டை போட்டது, அதுக்கப்புறம் வாழ்ந்தது எல்லாத்துக்கும் காரணம்.

உங்கப்பா இன்னிவரைக்கும் அந்த மொட்டைக் கடுதாசி போட்டது தாந்தான்னு என்கிட்ட சொல்லல, நானும் எனக்குத் தெரிஞ்ச மேரி காட்டிக்கலை. 

இதைப் பத்திப் பேசாட்டி என்ன கொறைஞ்சு போச்சு, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழ்ந்து வாழ்க்கைல ஜெயிச்சிட்டோம்ல, அது போதாதா?

மகன் சொல்லிட்ருக்கும்போதே அப்பா போய் கட்டில்ல படுத்துட்டாரு. அவன் சொன்னதுக்கு பதில் எதுவும் சொல்லல. கொஞ்ச நேரம் கழிச்சு அவன் லைட்டை ஆஃப் பண்ணிட்டு எழுந்து வெளில வந்துட்டான். அவர்  மானசீகமா தன் மனைவியோட பேசிட்டிருக்கலாம், தான் சொல்லத் தவறிய, ஆனால் அவள் ஏற்கனவே அறிந்திருந்த கதையை....


முற்றும்

Sunday, March 30, 2014

'ஆசுமான், ஆசுமான், ஆசுமாஆஆன்!!!!'

எத்தனையோ மாலைப் பொழுதுகள் வந்து கடக்கின்றன. ஆனால் நினைவில் நின்று நம்மை நெகிழ வைப்பவை ஒரு சில மாலைப் பொழுதுகளே. 

அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிறு மாலை ஒரு மறக்கவியலாத சுகானுபவத்தை அளித்ததெனலாம்.

வி-எக்செலின் ப்ளூ ஸ்கை கச்சேரிக்கான எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே எங்களிடம் தொற்றிக் கொண்டு இருந்தது. 

நாங்கள் நான்கு பேரும் செல்வதாகத் திட்டமிட்டிருந்த போதும், கடைசி நேரத்தில் எதிர்பாரா விதமாய் கூடுதலாய் என் சகோதரி மகளும் இணைந்து கொண்டாள்.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த இடம், கிட்டத்தட்ட ஒரு கிராமத்துத் தோப்பை ஒத்து, இயற்கை தரு நிழலோடு ரம்மியமாக இருந்தது. நாங்கள் கீழே விரிக்கப் பட்டிருந்த பாயில் அமர்ந்து காத்திருந்தோம்.

குழந்தைகளும் குழந்தை மனம் படைத்த தேவதை ஆசிரியைகளும் கழுத்தைச் சுற்றி நீல வண்ண ஸ்கார்ப் அணிந்து நீல வானத்தை அந்த வனத்துக்குள் கணப் பொழுதுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர்.

என்றும் போல, அன்றும் கையில் கிடாருடன் நம் இளம் தேவதை நேகா முன் நடத்த, குழந்தைகளுடன் ஐக்கியமாகி புஜி அவர்களை ஒன்றிணைக்க, கோகுல கிருஷ்ணனுக்கு அடங்கும் ஆநிரைகளாய் குழந்தைகள் கட்டுண்டு இருந்த காட்சி, காணக் கண் கொள்ளாதது.
வெகு இயல்பாய் நிகழ்ச்சி துவங்கியது. எவ்வித கூச்சமோ, தயக்கமோ இன்றி குழந்தைகளும் தாளத்துக்கியைந்து பாட ஆரம்பித்தனர்.

நாற்காலிகளிலும் தரையிலுமாய் சேர்ந்துக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 50 பேரும் லயித்திருக்க, கைதட்டல் நிறைந்த பாராட்டுகளுடன் ஒவ்வொரு பாடலாய் வெகு இயல்பாய் மாறி மாறிக் குழந்தைகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இடையில் தமிழ்ப்பாடல்கள் இசைக்கப்பட்டது குதூகலத்தின் உச்சம்!
நிகழ்ச்சியின் உச்சகட்டம் சின்மயியின் பாடல் நிகழ்வுதான். சற்றே தயக்கத்துடனும், கூச்சத்துடனும் ஆரம்பித்தாலும் பாடிய விதத்தில் ஒரு அசாத்திய உறுதியான சுய வெளிப்பாடு தெறித்தது!

ஒரு சிறு குச்சியை மைக்குக்கு இணையாகப் பாவித்து, சின்மயி தன்னுடைய நாத லோகத்துக்கு விஜயம் செய்தபோதும், குறுகிய அளவு கண்களைத் திறந்து பார்வையாளர்களின் அங்கீகரிப்பினை ஏற்றுக் கொண்ட விதம், என் கண்களில் நீரை வரவழைத்தது.
'என்ன வளம் இல்லை இந்தக் குழந்தைகளிடம்' என்றெண்ண வைத்ததொரு performance அது!

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியாமல் நிகழ்ச்சி நிறைவுற்றதும் நாங்கள் புறப்படும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்த பாடல்,'ஆசுமான், ஆசுமான், ஆசுமாஆஆன்!!!!'

Sunday, February 2, 2014

கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம், அதென்ன, 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு!'ன்னு ஒரு பழமொழி?

கொல்ற பாவம் தின்னா எப்படிப் போகும்?

யோசிச்சுப் பாத்தா சூப்பரான அர்த்தம் இந்தப் பழமொழியில பொதிஞ்சிருக்கிறது தெரிஞ்சுது.

அதாகப்பட்டது, ஒரு சிங்கம் பசியில இருக்குது. அப்ப அங்க வர்ற ஒரு மானைக் கொன்னா அதுல என்ன தப்பு?

மாமிசம்தானே சிங்கத்தோட உணவு, அதுனால பசிக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்றதுல தப்பு இல்லையே!

ஆனா அதே சிங்கம், வயிறு புல்லா இருக்கும்போது, அந்த வழியா போற ஒரு மானை, ச்சும்மானா அடிச்சுக் கொல்லலாமா? அது தப்புதானே!

இதான் இந்தப் பழமொழியோட விளக்கம்.

ஸ்டாப், ஸ்டாப், மனுஷப் பயலுகளுக்குத்தானே இந்தப் பழமொழின்னு நெனச்சா, இதென்னய்யா மிருகத்துக்கு விளக்கம் கொடுக்கறேன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுதா? வெயிட்..வெயிட்..

மனுஷன் அசைவம்தான் சாப்பிடணும்னு இல்ல, தாராளமா சைவம் சாப்பிடலாம்ல.  அப்டினா, மிருகங்களைக் கொல்றது பாவம்தான?

ஆமாம், நிச்சயம் பாவம்தான். அப்றம் எப்டி இந்தப் பழமொழி சரியாப் பொருந்தும்?

அதாகப் பட்டது, சாப்பிடறது பாவம் தான். ஆனா, சாப்பிடற ஆள் இருக்கற வைக்கும், வெட்றதுக்கு ஒரு கறிக்கடை பாய் இருக்கத்தானே செய்வார்?

( Malthus ன் Theory of Demand and Supply க்கு பக்கமா வர்ற மாதிரித் தெரியுது)

அது அவரு தொழில் இல்லையா? அதுனால அவருக்கு எப்படிப் பாவம் கணக்குல ஏறும்?

திங்கவே ஆள் இல்லாம, ஒரு ஆட்டை வெட்டினாதான் அது பாவம்.ஏன்னா அதுக்கு என்ன அவசியம், அந்த ஆட்டை துன்புறுத்தணும்கிறது மட்டும்தான், இல்லையா?

ஆகவே (கறிக்கடை பாய்) கொன்னா பாவம், (வாங்கி யாராவது) தின்னா போச்சு,( வாங்கித் தின்னவனுக்கு போய் சேந்துடும்)!

பாய், நீங்க தாராளமா வெட்டுங்க, பாவம்லாம் திங்கற பயபுள்ளங்களுக்குத்தான்!



Tuesday, February 5, 2013

ஒரு வாழ்வியல் அனுபவம்.

இடம்: மதுரம் நாராயணன் மையம் (சிறப்புக் குழந்தைகளுக்கானது). 
தியாகராய நகர்

நாள் : 11-01-2013

நேரம்: காலை 10.05 மணி

பொதுவாகவே மன வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் தொடர்பான வாழ்வியல் அனுபவங்கள் அவ்வளவு சுவாரசியமாக அமைவதில்லை, சாதாரண மனிதர்களுக்கு. ஆகவே, கீழே நான் சொல்லப்போகும் அனுபவம் உங்களுக்கு சுவாரசியமாக இல்லாமல் போக நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்ள விழைகிறேன்.


மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக, மேலே குறிப்பிட்டுள்ள பள்ளி வளாகத்துக்கு காலை பத்து மணிக்கு வந்து சேருமாறு, மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து எங்களுக்கு நேற்று (10-01-2013) மதியம் 3 மணிக்கு அஞ்சலட்டையில் தகவல் வந்தது.

வழக்கம் போல, அடையாள அட்டை, ரேஷன் கார்ட், புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை ஆகியவற்றின் பிரதிகளும் தேவையென்று அறிவுறுத்தல்.

கடந்த அக்டோபர் 2012 லேயே இது போன்ற ஒரு கடிதம் வந்து, மிகப் பெரிய திட்டம் தீட்டி, என் பெரிய மகனுடன் நானும், இல்லாளும் சென்று இப்பொழுது கேட்கப்படும் அத்துனை ஆவணங்களும் சமர்ப்பித்து வந்தோம். Autism குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை (22 வயது ஆனாலும் குழந்தைதான்), இது போன்ற அரசு அலுவலகங்களுக்கு அழைத்து சென்று, எந்த இடம் என்று விசாரித்து அறிந்து, வரிசையில் நின்று, பொறுமையுடன் காத்து, அவர்கள் திடீரென்று கேட்கும்

ஆவணங்களைக் கொடுத்து வேலையை முடிப்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அதுவும் ‘உச்சா போக’ வேண்டிய தேவையோ, இன்ன பிறவோ குழந்தைகளுக்கு வந்துவிட்டால், நரக வேதனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

மீண்டும் இன்றைய அனுபவத்துக்கு வருகிறேன்.

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட டாகுமெண்ட்ஸ் என்றாலும், மீண்டும் கேட்கும் போது கொடுக்காவிட்டால், உதவி நிறுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயத்தில், இன்று காலை முதல் போர்க்கால நடவடிக்கைக்கான திட்டமிட்டு நிறைவேற்ற எத்தனித்தோம்.

காலை 8.30 க்கு எனது பெரிய மகனை பாலவாக்கத்தில் உள்ள அவனது பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு (அவனுக்கு காலை மற்றும் மதிய உணவை தயாரித்து, பேக் செய்து), பிறகு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் இளைய மகனை காரில் ஏற்றிக்கொண்டு, திருவான்மியூரிலிருந்து நந்தனம் YMCA வளாகம் சென்று 9.15 மணிக்கு அவர்களிருவரையும் V-Excel ன் Portraits of India நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக இறக்கிவிட்டுவிட்டு, தியாகராய நகரை நோக்கி காரைச்செலுத்தினேன். வழியிலேயே அலுவலக நண்பருக்கு தொலைபேசி, தி.நகர் கிரியப்பா தெருவுக்கு எப்படிச் செல்வதென்று குத்துமதிப்பாய் விசாரித்து, அவர் சொன்ன சொதப்பலான வழி காட்டுதலால் அங்கும் இங்கும் சுற்றி, ஒரு வழியாய், பாரதிராஜா மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ‘மதுரம் நாராயணன் மைய’த்தை அடைந்த போது மணி 10.05.

நெடிய வளாகம். கடைக் கோடியில் உள்ள கட்டடத்தில் குழந்தைகளின் நடமாட்டம் தெரிந்தது. கையில் இருந்த அஞ்சலட்டையை எல்லோருக்கும் தெரியுமாறு வைத்துக் கொண்டு, அங்கிருந்த காவலாளியிடம் விசாரிக்க நெருங்கினேன்.

‘சர்ட்டிபிகேட் வெரிஃபிகேஷனா’ என்றவர், ‘மேல போங்க சார், இன்னும் அவங்க வரல, வெயிட் பண்ணுங்க, வந்துருவாங்க’ என்று முதல் தளத்திற்கான படிக்கட்டைக் காட்டினார்.

மேலே சென்றால், ஏற்கனவே என்னைப் போல ஒரு ஜந்து (55 வயதிருக்கலாம்) கையில் அஞ்சலட்டையுடன் பரிதாபமாக அமர்ந்திருந்தது. ஒரு சிநேகப் புன்னகையுடன் பக்கத்தில் அமர்ந்தேன்.
மௌனமாய்க் கழிந்த சில கணங்களுக்குப் பின், மெல்ல பேச ஆரம்பித்தோம்.

‘எத்தனி மணிக்கு வருவாங்க தெரியுமா? கேட்டீங்களா’ என்றேன்.

‘கீழே செக்யூரிட்டி இங்க வெய்ட் பண்ண சொன்னார்’

‘எங்கிருந்து வர்றீங்க சார்?’

‘கோட்டூர்புரம், நீங்க?

‘நான் திருவான்மியூர்’

‘யாருக்கு? உங்க பையனுக்கா வெரிஃபிகேஷன்?’

‘இல்லைங்க, என் அண்ணன் பையனுக்கு’

மனம் ஒரு நிமிடத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அண்ணனின் மகனுக்கு உதவித்தொகைக்காக, இந்த வயதில் அலையும் மனிதர்களும் இருக்கிறார்களே என்று.

‘உங்க அண்ணன் வெளியூர் போயிருக்கிறாரா?’

‘மேல போயிட்டார்’ என்று ஆகாயத்தைக் காண்பித்தார். சுருக்கென்றது.

‘அண்ணி?’

‘மொதல்ல மேல போனது அவங்கதான். அண்ணன் அப்புறம்தான்’

ஒரு கணத்த மௌனம் சற்று நேரம்.

‘ஒங்க அண்ணன் பையனுக்கு என்ன வயசு?’

‘22’

‘அவன் கூடப் பொறந்தவங்க?’

‘ஒரு அக்காதான். அவளுக்கு ப்ரைன் ஃபீவர் வந்து 6 மாசத்துக்கு முன்னால செத்துப் போயிட்டா’

இப்படி ஒரு அதிர்ச்சிக் கதையை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு சொல்லொணா வேதனை. என்ன கொடுமை இது? இறைவனின் கணக்குதான் என்ன?

‘உங்க அண்ணன் ஏதாவது சொத்து வச்சிருக்கிறாரா இவனுக்கு?’

‘ஒரு வீடு இருக்கு. அதுலயிருந்து வாடகை கொஞ்சம் வருது.’

‘அந்த வீட்டை விக்க முடியுமா?’

‘தெரியல. கஷ்டம்தான். எங்க அண்ணி பேருக்கு உயில் எழுதி வச்சார். ஆனா அவருக்கு முன்னாடி அவங்க எறந்துட்டாங்க. இப்ப இவன் தான் வாரிசு. இவனோ மன வளர்ச்சி இல்லாத பையன். பாக்கனும். இன்னும் எத்தனை வருஷம் எங்களால பாத்துக்க முடியும் இவனை. ஒன்னும் புரியல சார்’

திக்குத் தெரியாத காட்டில் என்று புலம்பித் திரிவானே பாரதி, கிட்டத்தட்ட அதைப் போன்ற நிலை இந்தக் குடும்பத்துக்கு.

மணி 10.30. சில பெண்மணிகள் (பயிற்சியாளர்களாயிருக்கலாம்) குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கு சந்தேகம் வந்தது. தவறான இடத்தில் காத்திருக்கிறோமோ என்று. ஆனால் என்னோடு காத்திருப்பவர் ‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோமே’ என்றார்.

ஒரு கணவனும், மனைவியும் 2 வயதுக் குழந்தை ஒன்றுடன் வந்தனர். அந்தக் குழந்தையைப் பார்க்க இரண்டு கண் போதாது. கொழு கொழுவென்று கோதுமை நிறத்தில். ஆனால் சிறப்புக் குழந்தை என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.

குழந்தையின் தந்தையானவன் எனதருகில் அமர்ந்தான். தாயும் குழந்தையுமாக அறைக்குள் சென்றனர். இவன் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்தவுடன் என்னிடம் ‘ இன்னும் எவ்ளோ நாள் வரனும்’ என்று கேட்டான்.

‘நானும் ஒங்களைப் போலத்தான். இங்க வேல பாக்கிற ஆளில்லே’ என்றவுடன், ‘ஓ’ என்று சொல்லிவிட்டு மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

‘என்ன பிரச்னை உங்க பொண்ணுக்கு’ என்றேன்.

‘பேச்சு இன்னும் வரலை. நடக்க மாட்டேங்குறா’

‘என்ன டயக்னாஸ் பண்ணியிருக்காங்க? ஆட்டிஸமா? சிபியா’ என்றதற்கு

‘அப்படின்னா?’ என்றான்.

‘இதெல்லாம் குறைபட்டோட பேரு’ என்றேன்.

‘அப்படியெல்லாம் இல்ல இவளுக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல பேசிடுவா, நடப்பான்னு சொன்னாங்க’ என்றான்.

நான் பதில் சொல்லவில்லை. ஆனால் அவநம்பிக்கை தெரியும் விதமாகவும் முகத்தை வைத்துக் கொள்ளவில்லை.

20 வருடத்துக்கு முன் 1993ல் இதே மதுரம் நாராயணன் மையத்துக்கு (அப்போது பனகல் பூங்கா அருகில் இருந்தது) வந்த போது என்ன விழிப்புணர்வோடும், வாழ்வைப் பற்றிய இலகுவான நம்பிக்கையோடும் நான் இருந்தேனோ, அதே போல இவனும் இருப்பதாய் எனக்குப் பட்டது.

இவனுடைய இந்த உணர்வை, என் அனுபவத்தையும், இன்றைய பக்குவத்தையும் சொல்லி மாற்ற முயல எந்த அவசியமும் இல்லையென எனக்குப் பட்டது. ஒரு வகையில் அப்படி சொல்வது தவறோ என்று கூட்த் தோன்றியது.

பூ பூத்து, காயாகிக் கனிவதற்கும் ஒரு கால இடைவெளி வேண்டுமல்லவா? அதே போல, இவன் வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த நிகழ்வின் தீவிரத்தை காலமே இவனுக்கு மெல்ல மெல்ல உணர்த்தும். அதனை எதிர்கொள்ள, இவனும் மெல்ல மெல்லத் தயாராவான் என என்னால் உணர முடிந்தது.

அந்த நேரம், ஒரு பெண்மணி, சற்றே அதிகாரி போன்ற தோற்றத்துடன் மேலேறி வந்தார். எங்களைப் பார்த்தவுடன் ‘சர்ட்டிபிகேட் வெரிபிகேஷனா’ என்றார்.

நாங்கள் ‘ஆம்’ என்று தலையசைத்தவுடன், ‘கீழ ஒரு மேடம் இருக்காங்க. அங்க போங்க. இங்க எதுக்கு உக்காந்திருக்கீங்க?’ என்றவாறு எங்களை விரட்டினார்.

வேக வேகமாக கீழே இறங்கி வந்தால், பத்து, பதினைந்து பேர் இதற்காக அங்கே காத்திருந்தனர், கொளுத்தும் வெயிலில், வெட்ட வெளியில்.
அரசுத்துறையைச் சேர்ந்த அந்தப் பெண்மணியையும், கூட வந்திருக்கும் அந்த கனவானையும் நான் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். அக்டோபர் மாதம் DMS வளாகத்தில் இவர்களிடம்தான், நான் என் மகனின் சான்றிதழ்களின் பிரதியை சமர்ப்பித்து வந்திருந்தேன்.

சொல்லப் போனால், அந்தப் பெண்மணி மிகவும் கனிவுடன் பேசுபவராகவே இருந்தார்.

நான் அவரிடம் சென்று, 4 மாதம் முன்னரே, இதே ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்த்தை நினைவு கூர்ந்து, மறுபடியும் எதற்கு மீண்டும் கேட்கிறீர்கள் என்று வினவினேன்.

‘எங்க கையில ஒன்னும் இல்ல சார். எங்களுக்கு மேலே இருக்கிற மேடம் மறுபடியும் கேக்க சொன்னாங்க. கேட்டிருக்கோம்’ என கையறு நிலையாய் சொன்னார் அவர். நாம் கொடுக்கும் ஆவணங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கிஞ்சித்தும் தராத ஒரு பதில் மற்றும் சூழல்.

நான் என்னுடன் கொண்டு சென்றிருந்த ஆவணங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, 'எப்போலேருந்து பணம் பேங்க் அக்கவுண்ட்ல போடுவீங்க?' என்ற என்னின் கேள்விக்கு 'வீட்டுக்கு லெட்டர் போடுவோங்க' என்ற பதில் கிடைத்தது.

புறப்பட எத்தனித்த போது, எதிர்பாராத விதமாய் ஒரு முதியவர் என்னை அணுகினார்.

‘தம்பி, இவ என் பேத்தி. இவளுக்கு பணம் வந்துகிட்டிருக்கு. அது சம்பந்தமா கடுதாசி வந்துது. அதான் வந்திருக்கேன். இந்த ஃபாரம் பூர்த்தி பண்ணித் தர்றீங்களா? நான் எழுதப் படிக்கத் தெரியாதவன்’

அவர் உடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. யாருக்கோ, எதுவோ பிரச்னை எனும் பாவத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். வாயிலிருந்து எச்சில் வழிந்தவாறு இருந்த்து. அந்தப் பெண்ணின் பாட்டி, தன் புடவைத் தலைப்பால் அவள் வாயைத் துடைத்துவிட எத்தனித்தார்.

எனக்கு உடனே திரும்பி, மகனின் ஆண்டுவிழா நிகழ்வைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், இவருக்கு உதவாமல் செல்வது தவறென்று தோன்றவே, அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன்.

அந்த விண்ணப்பத்தில் பிறந்த நட்சத்திரம், ராசி தவிர எல்லா தகவல்களும் கேட்கப்பட்டிருந்தன. அந்த முதியவரிடம், அவளின் ‘ஊனமுற்றோர் அடையாள’த்துக்கான புத்தகத்தின் பிரதி இருந்தது. மஞ்சள் நிற அடையாள அட்டையின் பிரதி இல்லை. வங்கிக் கணக்கு அந்தக் குழந்தையின் பெயரில் துவங்கவேயில்லை.

இந்த நிலையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்று சொல்லி, வங்கி கணக்கு துவங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிச் சொன்னேன். அவரின் மகள் (அந்தப் பெண் குழந்தை மகள் வயிற்றுப் பேத்தியாம்) ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், விடுப்பு எடுக்கவியலா நிலை என்பதையும் கூறினார்.

அவர் உடனே தன் மகளுக்கு தொலைபேசினார். எதிர் முனையில் அவரின் பெண் அவரிடம் கடுமையாய் பேசியது தெரிந்தது.

தொலைபேசியை வைத்துவிட்டு என்னிடம் சண்டைக்கு வந்தார் அவர்.

‘திடீர்னு பேங்க் பாஸ் புக் கேட்டா என்ன சார் அர்த்தம்?’

‘ஐயா, நானும் உங்களைப் போல, என் மகனுக்காய் விண்ணப்பிக்க வந்தவன். என்னைக் கோபித்தால் நான் என்ன செய்ய முடியும்’ என்றேன். புலம்பியவாறே அவர் பெண் அதிகாரியை நோக்கி நகர்ந்தார்.

அதற்குள் என்னை சுற்றி 3 பேர், விண்ணப்பத்துடன் காத்திருந்தனர். இது நான் எதிர்பாராதது. ஒவ்வொருவருக்காய் பூர்த்தி செய்து கொடுக்க ஆரம்பித்தேன். இந்த நிகழ்வுகளில் துளியும் சம்பந்தப் படாமல் அந்த அதிகாரியும், அவரது உதவியாளரும், தத்தம் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

திரும்பத் திரும்ப அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், IFSC CODE, பிறந்த தேதி, முகவரி, அதற்கான சான்று என்று கேட்டு படுத்துவதன் காரணம்தான் என்ன?

ஒரு பெண் வழக்கம் போல் வங்கிக் கணக்கு துவக்காமல் வந்திருந்தார். அதன் அவசியம் பற்றி சொன்னவுடன், ‘ அரை மணி நேரம் வெயிட் பண்றீங்களா, பக்கத்துல ஏதாவது பேங்க் இருந்தா போயி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டு வந்துடறேன்’ என்று அப்பாவியாய் சொன்னதற்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன்.

ஒரு வழியாக என்னால் முடிந்த உதவிகளையும், வழி காட்டுதல்களையும் அங்கிருந்தோருக்கு சொல்லிவிட்டு, கனத்த மனத்துடன் நான் மீண்டும் நந்தனம் YMCAவை நோக்கி புறப்பட்ட போது மணி 11.15.

அரசாங்கத்தின் திட்டங்கள் எவ்வளவு அருமையாக இருந்தாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்களை சம்பந்தப் பட்டோருக்கு தெளிவாக சொல்லாமை, நடைமுறைப் படுத்துவதில் சிரத்தையின்றி செயல்படும் அதிகார இயந்திரத்தின் மெத்தனம் ஆகியவற்றால் துயருறுவது பெற்றோர்களே.

ஏற்கனவே வேதனைத் தீயில் ஒவ்வொரு கணமும் வெந்து கொண்டிருக்கும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.

மேலும், சில பெற்றோர்களின் அலட்சியமான அணுகுமுறையையும் கவலை தரத் தக்கது. இவ்வளவு அதிமுக்கியமான பிரச்னைக்கு தான் நேரடியாகப் போகாமல், வயதான தன் தாய் தந்தையரை அனுப்பும் பெண் எத்தகைய நெருக்குதலில் இருக்கிறாரோ? அப்படியே தவிர்க்க இயலாத சூழலென்றாலும், தேவையான ஆவணங்களைக் கொடுத்தனுப்ப வேண்டாமா? அந்த தாத்தாவும், பாட்டியும் ஏன் அப்படி தெருவில் நின்று திண்டாட வேண்டும்? அந்தப் பெண் குழந்தையின் தகப்பனின் பங்கு இதில் என்ன? புரியவில்லை.

பெரும்பாலான சிறப்புக் குழந்தைகளின் பள்ளி மற்றும் மருத்துவப் பரிசோதனை நேரங்களில் தாயின் பங்கு இருக்குமளவு, தந்தையின் பங்களிப்பு இருப்பதில்லை என்பது நிதர்சனம்.

‘நார்மல்’ குழந்தைகள் நன்கு படித்து, சாதிக்கும் போது ‘என் மகன் இப்படியெல்லாம் சாதிக்கிறான்’ என்று பெருமை பேசும் தந்தைக்குலங்கள், இப்படிப் பிரச்னையுள்ள குழந்தைகள் பிறந்தவுடன், விட்டேற்றியாக இருப்பது என்ன நியாயம்?

ஒரு வகையில் இவையும் பெண்களுக்கெதிரான சமுதாயத்தின் தாக்குதலே.

உயிருடன் இருக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றிய சிந்தனைகளுடன், நம்முடைய இறப்பிற்குப்பின் என்ன நிகழும்? அதற்கு என்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்ற சிந்தனை மீண்டும் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

National trust பற்றி மீண்டும் தகவல்களை சேகரிக்க வேண்டும், Guardianship பற்றி நன்கு ஆராய்ந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்ற
உத்வேகம் என்னுள் எழுந்தது. கார் சீராக ஓடிக் கொண்டிருந்தாலும் மனம் அங்ஙனம் இல்லை.

எல்லா அனுபவங்களில் இருந்தும் ஏதோ ஒரு படிப்பினை கிடைக்கவே செய்கிறது. இல்லையா?

நீண்ட நெடிய இந்தப் பதிவை, பொறுமையாக இறுதி வரை படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.