Monday, December 17, 2012

ஓடிப் போனவள்


ஓடிப் போனவள்

கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள்,
கிளி கொத்திப்போட்ட பழங்களை
பொறுக்கி காயவைத்தவள் அவள்.
சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள்.
மரம் மரமாய்ப் பொறுக்கி,
தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து
அலசி காயவைத்து சேகரித்தவள் அவள்.
பில்லறுத்துப் போட அவளின்றி
காய்ந்த வைக்கோலை அரை மனதுடன்
அரைத்து நிற்கிறது பசுங்கன்று.
அந்திமல்லி பறிக்க அவளின்றி
அங்கேயே உதிர்க்கிறது பூக்களை.
அரைத்துவந்த அரிசியும் தவிடும்
எட்டு போட்ட சித்திரமாய் பிரியாமல்
மூட்டையிலே கிடக்குதங்கே
அவளில்லாக் காரணத்தால்.
கல் கட்ட அவளில்லை,
மரவட்டையாய் சுருண்டு
தொங்குது புடலைப் பிஞ்சு.
தட்டாத சாணி நொதித்து நாற,
சுவற்றில் தட்டிய வரட்டி
பிய்த்தெடுக்க ஆளின்றி
பேர்ந்து நிற்குது.
எதையுமே பார்க்காமல்,
ஓடிப் போனவளை
திட்டுவதில் மட்டுமே
சிரத்தையாய் நிற்குது,
ஊரும், உறவும்.