Tuesday, January 31, 2012

உண்மை ...





கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கும் முதல் நாள்.

காலையில் ப்ரேயர் முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் உரையாற்றும் போது, எல்லா மாணவர்களையும், கடந்த வருடம் ஆண்டுத் தேர்வின் போது அமர்ந்து இருந்த அறையில், அதே இருக்கையில் அமருமாறு பணித்தார்.

எதற்காக இந்த உத்தரவு என்று புரியாமல் எல்லா மாணவர்களும், குழப்பத்தோடு அவரவர் இடத்தை தேடி சென்றனர்.

”தட்டுத் தடுமாறி போன வருசம் பாஸ் பண்ணிட்டோம். மறுபடியும் எல்லாப் பரீட்சையும் எழுத வைப்பாங்களோ” எல்லோர் வயிற்றையும் கலக்கினான் எட்டாம் வகுப்புக்குள் நுழையும் பாஸ்கர்

“கணக்குத் பேப்பர் மட்டும் திரும்ப எழுதனுமாண்டோய்” என்று ஒருபுது கதையை எடுத்து விட்டான், ஏழாம் வகுப்பு செல்வம். அவன் கணக்கில் கொஞ்சம் மந்தம். அவன் பயம் அவனுக்கு.

சற்று நேரத்தில், தலைமை ஆசிரியர், முதலில் தென்பட்ட ஒரு வகுப்பில் நுழைந்து “ சென்ற வருடம் தேர்வின் போது நிறைய பேர், தங்கள், மேசையிலும், அருகிலுள்ள சுவற்றிலும், நிறைய பதில்களை எழுதி வைத்திருந்து, தேர்வின் போது, அவற்றைப் பார்த்து எழுதி இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும், 10 நிமிடம் அவகாசம் தருகிறேன். நீங்களாகவே முன் வந்து உங்கள் தவறை ஒத்துக்கொண்டால், எச்சரிக்கையோடு தப்பிக்கலாம். நீங்கள் இந்த தவறை செய்யாமல், உங்கள் அருகிலுள்ள வேறு மாணவர் யாராவது செய்வதை நீங்கள் பார்த்து இருந்தாலும் , அதையும் சொல்லி விடுங்கள். தானாக ஒத்துக் கொள்ளாமல், பிடி படுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.” என்று சொல்லிவிட்டு இதே வசனத்தை மறுபடியும் சொல்வதற்கு, அடுத்த வகுப்பை நோக்கி நடந்தார்.

எல்லோர் முகத்திலும் கலவரம்.

தவறு செய்தவர்கள், என்ன செய்வது என்று புரியாமல், தவித்தனர். முகத்தில் தெரியும் பீதியை எப்படி மறைப்பது என்று பயிற்சி எடுக்க ஆரம்பித்தனர்.

தவறு செய்யாதவர்கள், பிறரைக் காட்டிக்கொடுப்பது சரியா? செய்யலாமா? என்று சிந்தனை செய்ய ஆரம்பித்தனர்.

“ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?” வழக்கம் போல தன்னுடைய நகைச்சுவையை அவிழ்த்து விட்டான் பத்தாம் வகுப்பு சரவணண்.

இப்படி ஒரு சூழ்நிலையை கனவிலும் நினையாத மாணவர்கள், செய்வதறியாது நின்ற போது, முத்துவுக்கு மட்டும் மனதுக்குள் பரபரப்பு.

முத்து இந்த வருடம் ஏழாம் வகுப்பில் நுழையும் மாணவன். சென்ற வருடத் தேர்வின் போது, அவன் பக்கத்தில் அமர்ந்து தேர்வெழுதியது எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுரேஷ்.

முதல் தேர்வு நாள் அன்றே, தேர்வுக்கு சற்று முன்பு, சுரேஷ் சுவற்றிலும், மேசையிலும் நுணுக்கி நுணுக்கி எழுத ஆரம்பித்தான்.

முத்துவுக்கு அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சி.

“இது தப்பில்லையா அண்ணா? “ என்று சுரேஷிடம் கேட்ட முத்துவுக்கு “உன் வேலையை பாருடா வெண்ண!” என்ற பதில்தான் கிடைத்தது.

வேறு வழியின்றி தினமும் சுரேஷ் செய்யும் இந்த அசிங்கத்தை முத்து வேடிக்கை பார்த்து வந்தான். கிட்டத்தட்ட, ஒரு ஹீரோ போல இந்த வேலையை எல்லாத் தேர்வன்றும் சுரேஷ் செய்து வந்தான்.

படித்து தன்னுடைய திறமையை நிரூபிக்கத் தான் தேர்வுகள் என்றெண்ணியிருந்த முத்துவுக்கு சுரேஷின் இந்த செய்கை அருவருப்பாயிருந்தது.

ஆனால், இவ்வளவு விரைவில், இப்படி ஒரு வாய்ப்பு வருமென்று முத்து எதிர் பார்க்கவில்லை.

இப்போது முத்துவுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாய் தெரிந்தது. அமைதியாய் உட்கார்ந்து இருந்தான்.

10 நிமிடம் கழித்து, மறுபடியும், தலைமை ஆசிரியர் வகுப்புக்குள் வந்தார்.

“சொல்லுங்கப்பா, ஒவ்வொருத்தரா எழுந்து நின்னு” தலைமையாசிரியரின் ஆணை தீர்க்கமாக வந்தது.

மாணவர்களுக்கிடையே சலனமே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் எல்லோரும் மௌன அஞ்சலி போல அமைதி காத்தனர்.

சுரேஷ் எல்லோரையும் விட அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

பொறுமை இழந்த தலைமையாசிரியர், “சரிப்பா, ஒவ்வொரு மேசையா என்ன எழுதியிருக்கு? யார் எழுதினாங்கன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கலாம். கையெழுத்து எப்படி இருக்குன்னு பார்த்து முடிவு செய்யலாம்” என்றவாறு முதல் மேசையை நோக்கி நடந்தார்.

அப்போதுதான் யாரும் எதிர்பாராதவண்ணம், முத்து கையைத் தூக்கியவாறு எழுந்து நின்றான்.

“என்னப்பா நீ காப்பி அடிச்சியா?”

“இல்ல சார், சுரேஷ் அண்ணண்தான் இந்த டேபிள்ல எழுதி காப்பி அடிச்சாரு”

“நீ அவன் எழுதினதைப் பார்த்தியா?”

“ஆமாம் சார், அப்பவே அப்படி செய்யுறது தப்புனு சொன்னேன் சார்”

அடுத்த ஒரு மணி நேரம், சுரேஷின் பெயர் அந்த பள்ளியில் எல்லோராலும் பேசப்பட்டது.

மயில்வாகனன் சார் (பள்ளியின் PT மாஸ்டர்), மாணவர்களை தண்டிப்பதில் பெயர் போனவர். அவர் எப்படியும் இன்று சுரேஷை த்வம்சம் செய்து விடுவார் என்று எல்லோரும் எதிர் பார்த்த வேளையில், சுரேஷ் எவ்வித அடியும் படாமல் உலவிக் கொண்டிருந்தான்.



பனிரெண்டு மணி வாக்கில், தலைமையாசிரியர் சுரேஷிடம், அவன் செய்த தவறுக்கு தண்டனையாக, கடந்த வருடம் எழுதிய தேர்வை ரத்து செய்வதென்றும், அவனை பள்ளியை விட்டு வெளியே அனுப்பி விடுவதென்றும் அறிவித்து, மறு நாள் அவன் அப்பாவை அழைத்து வந்து டிசி வாங்கி செல்லுமாறும் கூறி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.



இப்போதுதான் முத்துவுக்கு ஆரம்பித்தது தலைவலி.

மற்ற சக மாணவர்கள் அவனை ஒரு கருங்காலி ரேஞ்சுக்கு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மாணவர் ஒற்றுமை குலைந்ததாக ஒரு கூட்டம் சாடையில் பேச ஆரம்பிததது. கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனை விட முத்து மோசமாக சித்தரிக்கப்பட்டான்.

அன்று, மதிய உணவைக் கூட தனியாகத் தான் அமர்ந்து சாப்பிட்டான்.

அவனுடைய ஊர் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தள்ளி உள்ள கிராமம். மாலையில் நடந்துதான் செல்ல வேண்டும். இடையில் இரண்டு ஆறுகளை வேறு கடந்து செல்ல வேண்டும்.

மாலைக்குள் வெவேறு கதைகள் அவனிடம் நண்பர்களால் சொல்லப்பட்டன., சுரேஷ் இன்று மாலை முத்துவை வெண்ணாற்றுப் பாலத்தில் வைத்து உதைக்கப் போவதாக ஒரு தகவல்.

சுரேஷின் அப்பா மிகப்பெரிய ரவுடி என்றும் இன்று இரவு முத்துவை அவர் வீடு புகுந்து அடிக்கப் போவதாக இன்னுமொரு வட்டாரம் தகவல் தந்தது. அப்படி நடந்தால், முத்து வீட்டில் எல்லோருக்கும் பாதிப்பு என்று இணைத் தகவல் வேறு.

மாலை நெருங்க முத்துவுக்கு திக் திக் என்று இருந்தது. எல்லாரும் அமைதியாய் இருந்தது போல் தானும் இருந்திருக்கலாமோ என்று முதல் முறையாக எண்ணிணான். ஆனால், இப்போது நிலைமை எல்லை மீறிப் போய் விட்டதோ என்று கலங்கினான்.

அதே சமயம், பயத்தை வெளிக் காட்டிக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

வழக்கமாக பள்ளி முடிந்த பின் ஊர் வரை கூட வரும் நண்பர்கள் ஒருவர் கூட அன்று அவன் கூட வரத் தயாரில்லை.

மனதுக்குள் தோன்றும் தெய்வங்களையெல்லாம் வேண்டத் தொடங்கினான்.

மாற்றான் வலிமை அறியாத தன் பேதமையை எண்ணி முத்துவுக்கு ஆற்றாமையாக இருந்த்து.

சுரேஷ் மாலையில் அடிக்க வந்தால், என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதுக்குள் பேசிப் பார்த்துக் கொண்டான். காலில் விழுந்து விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் அப்படிச் செய்ய மனம் ஒத்துக்கொள்ளவில்லை. சூழ் நிலை மிகவும் மோசமானால், அப்படி நடப்பது ஒன்றும் தவறில்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

இவனுடைய உற்ற நண்பன் ராஜப்பா. பள்ளி இருக்கும் தெருவிலேயே அவன் வீடு. அவன் மட்டும் தான் இவன் பள்ளியை விட்டு கிளம்பும் வரை கூட இருந்தான்.

“உனக்கு பயமா இருந்தா சொல்லுடா.. நான் வேணா கூட வரவா உங்க ஊர் வரைக்கும்”

“வேணாம்டா, எனக்கென்ன பயம், நான் தனியாவே போய்டுவேன்” என்று வீறாப்பாக ராஜப்பாவிடம் சொல்லிவிட்டு தனியொரு வீரனாய் வீடு நோக்கிக் கிளம்பினான் முத்து.

சாலையில் மனிதர்கள் நடமாட்ட்த்தை உத்தேசித்து, தன்னுடைய நடை வேகத்தை நிர்ணயித்து, முடிந்தவரை தனியாய் மாட்டிக் கொள்ளாதவாறு சென்று கொண்டிருந்தான்.

ஆற்றுப்பாலத்தில் போகும் போது சுரேஷோ அவனது தொண்டர் படையோ, கண்ணில் தென்படவில்லை. அப்பாடா என்றிருந்தது இவனுக்கு. ஒரு வழியாய் எந்த வித சேதாரமுமின்றி வீடு வந்து சேர்ந்தான் முத்து.

****************************

முத்துவின் நிலையை விட சுரேஷின் நிலை வேறு விதமாய் இருந்தது.

வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பது என்பது ஒரு பெரிய பிரச்னையாக அவனுக்கு தெரியவில்லை.ஆனால், பள்ளியை விட்டுத் துரத்தப்படுவது அவன் தன்மானத்தை சீண்டியது.

அப்பாவிடம் சொல்லி முத்துவை பழி தீர்ப்பது என்று ஒரே குறியாய் இருந்தான்.

முத்துவை பழி வாங்கினால் மட்டுமே தான் இழந்த மானம் மரியாதையை மீட்டெடுக்க முடியும் என்று தீர்மானமாக நம்பினான்.

எப்படியோ எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டோம் என்று இருந்தவனை, மறுபடியும் வேறு ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பை படிக்க வைத்து விட்டானே என்று முத்துவை கருவிக் கொண்டிருந்தான்.

சுரேஷின் அப்பா பெயர் சுகுமார். படிப்பு ஐந்தாம் வகுப்பு வரை தான். கடந்த இருபது வருடமாக இந்த வட்டாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி செல்வாக்காக இருக்கிறார். ஒரு கொலை வழக்கில் கைதாகி இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

பெரிய ரௌடியாகப் பேர் எடுத்து இருந்தாலும் கொஞ்ச நாளாய் அவருக்கு ஒரு கவலை. இந்த நிச்சயமில்லாத வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது. நிம்மதியாக தூங்கி பல நாட்களாகி விட்டது. எந்த நேரத்தில், எவன் நம்மை தாக்க வருவானோ என்று பயந்தே வாழ வேண்டியிருக்கிறது. வெளியிலே பந்தாவாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் இப்படி வாழ்வது அவருக்கே அருவருப்பாக இருந்தது.

“என் பொழப்பு தான் இப்படி இருக்குதுன்னா, இந்த பயலும் ஒழுங்கா படிக்காம திரியுறானே. அடுத்த தலைமுறையாவது நிம்மதியா வாழட்டுமேனு நல்ல பள்ளிக் கூடத்துல சேத்து இருக்கேன். ட்யூஷன் வச்சு இருக்கேன். இருந்தும் இப்படி பொறுப்பு இல்லாம இருக்கானே” என்று மனைவியிடம் நொந்து கொள்கிறார், சமீப காலமாய்.

இந்த அழகில் இந்தப் பிரச்னை அவர் காதில் விழுந்தவுடன், சொல்லொணாக் கோபத்துக்கு ஆளானார்.

கோபத்துடன் வீட்டுக்கு வந்தவருக்கு, சுரேஷின் விளக்கம் எதுவும் காதில் விழவில்லை. இடுப்பு பெல்ட்டை அவிழ்த்து விளாசு விளாசென்று விளாசி விட்டுத்தான் ஓய்ந்தார்.

எல்லா அடியையும் வாங்கிக் கொண்ட பின்னரும், சுரேஷ் தன் முயற்சியில், சற்றும் மனம் தளராமல், முத்து தனக்கு செய்த அநியாயத்தை அப்பாவிடம் எடுத்துச் சொல்ல முயன்றான்.

“தப்பு பண்ணது நீ. அவனை ஏண்டா கொற சொல்ற?” என்று அடுத்த ரவுண்டுக்கு தயாரான அவரை அவர் மனைவி இடையில் புகுந்து தடுத்து சுரேஷை காப்பாற்றினார்.

“அந்தப் பையன் கிட்ட ஏதாவது வம்பு பண்ணிணேண்ணு தெரிஞ்சது, படவா, உன் தோல உரிச்சு உப்பு கண்டம் போட்ருவேன். புரியுதா? இந்த அழகுல, இவனுக்கு இப்பொ வேற ஸ்கூல் தேடியாகனும்.”

தன் திட்டம் இப்படி தோல்வி அடையும் என்று கனவிலும் நினைக்காத சுரேஷ், வாங்கிய அடியின் வேதனையோடு படுக்கப் போனான்.



முத்துவின் குடும்பத்துக்கு இது எதிர்பாராத பெரிய பிரச்னையாகத் தெரிந்தது.

இது தேவை இல்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கியதாக நினைத்தார் முத்துவின் அப்பா ராகவன்.

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில், சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒரு கணக்கர்.

சாதாரண நடுத்தரக் குடும்பம். கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வருமானச் சூழல். இதில் இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்ற குழப்பம், இப்படியொரு பிரச்னையைக் கொண்டு வந்த முத்துவின் மேல் கோபமாய் வெடித்தது.

“ஸ்கூல்ல எத்தனை பசங்க படிக்கிறாங்க. நீ மட்டும் தான் உத்தம புத்திரனா?, எல்லாரப் போலயும் வாய மூடிட்டு இருக்க வேண்டியது தானே?” என்றவாறு, முத்துவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் அவன் அப்பா.

முத்துவுக்கும் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. தான் இந்த பிரச்னையை கொண்டு வந்தது தவறு என்று உணர்ந்து வருந்தினான். அவரின் வேதனை புரிந்ததால், அப்பாவின் அடி அவனுக்கு வலிக்கவில்லை.

சுரேஷின் அப்பா வந்து தகராறு செய்தால் முத்துவை மன்னிப்பு கேட்க சொல்லாம் என்றும், அப்படி அவர் திருப்தி அடையா விட்டால், தானே காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிப்பதாகவும் முத்துவின் அப்பா தீர்மானம் நிறைவேற்றினார்.

“நாளைக்கு அந்த பையன் மறுபடியும் வம்புக்கு வந்தா, நீ அடங்கிப் போ. நீயும் பதிலுக்கு பதில் பேசி பிரச்னையை பெருசாக்கிடாத, புரிஞ்சுதா”

பதிலுக்கு மௌனமாகத் தலையாட்டி விட்டு படுக்கப் போனான்.

கன்னத்திலும், முதுகிலும் வாங்கிய அடிக்கு மருந்து போடும் தாயின் ஸ்பரிசத்தோடு தூங்கிப் போனான் முத்து.

டுத்த நாள்.

சுரேஷின் அப்பா தலைமையாசிரியரை சந்தித்து காலில் விழாத குறையாகக் கெஞ்சியதின் பலன், தண்டனை பாதி ரத்து செய்யப்பட்டு, சுரேஷ் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்க அனுமதிக்கப் பட்டான்.

மறுபடியும், ஏதாவது பிரச்னை வந்தால், பள்ளியை விட்டே அனுப்பிவிட நேருமென்று கடும் எச்சரிக்கை செய்யப்படடான் சுரேஷ்.

இது இப்படி இருக்க, பள்ளி முழுவதும், வேறு ஒரு பேச்சு உலவ ஆரம்பித்தது.

வெண்ணாற்றங்கரையில், முத்துவும், சுரேஷும், முதல் நாள் மாலை கட்டிப் புரண்டு சண்டை போட்டதாகவும், இருவருக்குமே பலத்த அடியென்றும் மாணவர்களிடையே பேச்சு.

அப்படி வந்த வதந்தி, அவர்கள் இருவருக்குமே மகிழ்ச்சியை அளித்தது.

தங்களுடைய தன்மானம் இப்படிப் பட்டதொரு வதந்தியால் ஓரளவுக்காவது காப்பாற்றப் பட்டதால், பிரச்னை முடிந்த சந்தோஷத்துடன் இருவருமே அன்று ஹீரோவாய் வலம் வந்தனர்.

சுரேஷின் அப்பா ஒரு ரவுடி எனத் தெரியாமல் அவன் மேல் நடவடிக்கை எடுத்து விட்டோமே என நேற்று இரவு பூராவும் நொந்து கிடந்த தலைமையாசிரியரும் ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டது மட்டும் யாருக்கும் தெரியவில்லை.