டி.என். இளங்கோவன்
“என்ன செய்யப் போறேனோ தெரியல.. இந்த வருஷம் என் பையன் +2 முடிக்கப் போறான்.. அவன் படிக்கறதப் பாத்தா பணம் கொடுத்துத்தான் எஞ்சினியரிங் சீட் வாங்கனும் போல இருக்கு. இருக்கிற சேமிப்பு இதிலியே போயிடுச்சுன்னா,அடுத்த வருஷம் என் மூத்தப் பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப் போறேன்.. ஒன்னும் புரியல.. ஒரே கவலையா இருக்கு..”
“என்னமோ பிஸினஸ் சரியாவே போகலை. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடுமோ? பயமா இருக்கு”
இதைப் போல புலம்பும் கூட்டத்துள் ஒருவரா நீங்கள்? அப்படியென்றால், நீங்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும் குறைவின்றிக் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வசதி படைத்தவர்.. நன்கு உழைப்பவர். குடும்பத்தினர் நலனையே குறியாய்க் கொண்டு எந்நாளும் உழைப்பவர்.
அப்படி இருக்கையில், உங்கள் மகனோ, மகளோ, “என்ன செய்யப் போகிறோமோ தெரியல. நாளைக்குச் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ.. இந்த மாதம் காலேஜ் பீஸ் கட்ட முடியுமா?” என்றெல்லாம் கவலைப் பட்டால், தந்தையாகிய உங்களுக்கு அவர்கள் மேல் கோபம் வருமா? வராதா?
நான் எவ்வளவு கஷ்டப் பட்டாலும், உங்களுக்கு வேண்டிய அத்தனை வசதியையும் செய்து கொடுக்கிறேனே.. உங்களுக்கு என்ன குறை வைத்தேன்? என்று பதிலுக்கு உங்கள் மகனையோ, மகளையோ கேட்பீர்கள் அல்லவா?
அவர்கள் கவலைப்படுவது, உங்களை அவமானப்படுத்துவதாக எண்ணுவீர்கள் அல்லவா?
கிட்டத்தட்ட இதே போன்ற கோபம் உங்கள் மேல் கடவுளுக்கு வராதா? உங்கள் புலம்பலைக் கேட்கும் போது !
நீங்கள் வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் அனைத்தும்,உங்கள் முயற்சியில் மட்டுமே விளைந்தவை என்று நீங்கள் நம்புகிறீர்களா?
கடவுள் அருள் இன்றி உங்களால் எதையுமே சாதிக்க இயலாது என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை? அங்ஙனம் உணர்ந்திருந்தால், நீங்கள் வாழ்க்கையில் புலம்பவே மாட்டீர்கள்.
புலம்புதல், அங்கலாய்த்தல், இவையெல்லாம், கடவுளை உண்மையிலேயே நம்பாததன் அடையாளம். அதற்கும் மேலாய், கடவுளை அவமதிக்கும் செயல்.
கடவுளை நம்பும் அல்லது நம்பாத மனிதன் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டிய செயல், கவலை கொள்ளுதல்.. அதனால் புலம்புதல்..
கடவுளை நம்புகிறவன் புலம்பினால் அது கடவுளை அவமானப்படுத்துவதாகும்.
கடவுளை நம்பாதவன் புலம்பினால், அது அவனையே அவமானப்படுத்திக்கொள்வதாகும்.
இவை எவ்வகையிலும் நன்மை பயக்காது.. மேலும் தீமையையே விளைவிக்கும்.
நம்மைச் சுற்றி உள்ளோரிடம், நம்பிக்கையின்மையை விளைவித்து, ஒட்டு மொத்த அழிவுக்கு வழி கோலும்.
வாழ்க்கையில், எதிர்மறைச் சூழல்களைப் பற்றிய கவனமும், அறிவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவற்றை எதிர் கொள்ள முடியும். அங்ஙனம் சிந்திப்பது கவலை கொள்வதாகாது. ஆனால், எவ்விதத் திட்டமுமின்றி, கவலை கொள்ளுதலையே தொழிலாய்க் கொண்டு அலைவோரிடம் இருந்து நாம் சற்று விலகியிருத்தல் நலம்.
ஏனென்றால், ஒரு வகையில், அவர்களும், துஷ்டர்களே.. அவர்களிடமிருந்து விலகித் தூர இருத்தல் நல்லதுதானே?