Saturday, July 21, 2012

பேசு....



தி.ந.இளங்கோவன்

பேசு, ஏதாவது பேசு.
பேசாமலேயே ஒரு மனது
கொல்கிறது என்னை!
ஊதாமலேயே ஒரு நெருப்பு
கனல்கிறது இங்கே!

பேசு, ஏதாவது பேசு.
இம்மௌனம் நீ என் மேலியற்றும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் !
மோசமான ஒரு வசைபாடலைவிட
மோசமானது உன் மௌனம் !

பேசு, ஏதாவது பேசு.
உன் மௌனம் தொடரத் தொடர
என் பேச்சும் நீள்கிறது,
அஸ்தமனத்தில் நீளும்
கட்டிட நிழல் போல !
தொடர்ந்து நம்மை காரிருள்
வந்து கவியுமோவென
கலங்கி நிற்கிறேன் நான்.

பேசு, ஏதாவது பேசு.
உன் மௌனம்
சம்மதத்துக்கான சமிக்ஞை அல்ல,
மிகப்பெரிய எதிர்ப்புக் குரலின்
தொடர் ரீங்காரம்.
சப்தம் இல்லாமலேயே
எனை சாய்க்கும் குரூரம்.

பேசு, ஏதாவது பேசு.
நாளை ஒன்றே இல்லையென்பது போல்
நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன்.
நான் என்ற ஒருவனே
இல்லாதிருப்பது போல்
நீ மௌனமாயிருக்கிறாய்.
நான் உண்மையிலேயே இல்லாது போனாலும்
நீ இப்படித்தான் இருப்பாயா என்றறிய
நானிருக்க மாட்டேன், நல்ல வேளை.

பேசு, ஏதாவது பேசு.
என்னில் வடிந்த குருதி
போதுமென்று தணிந்தால்
பேசிக் கலைத்து விடு
இந்த குரூர மௌனத்தை !
நெருப்பின்றி மன உலையை
கொதிக்க வைத்தது போதும் !
என் முழு நானும்
வெந்து அவிவதற்குள்
பேசு, ஏதாவது பேசு !

புகைப்படத்துக்கு நன்றி:

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..