தினம் உன்னைத் தொழுகிறேன்,
தீயதெதும் செய்வதில்லை,
உனை வேண்டி நிற்பதெல்லாம்
என் காலம் முடியுங்கால்
என் விருப்பம் போலேயெனை
நரகத்திலே சேர்த்து விடு,
புண்ணியம் செய்தேனென்று
சொர்க்கத்தில் தள்ளி விடாதே
புண்ணியமாய் போகும் உனக்கு!
ஈதென்ன விந்தை,
பூலோக வாழ்வதனில்
பொன் தேடி, புகழ் தேடி
களைத்த மாந்தர் இறந்த பின்னர்
சோர்வு நீக்கும் சொர்க்கமதை
வேண்டி நிற்றல்
நான் அறிந்த ஒன்று,
ஈதென்ன விந்தை
நரகத்தை நோக்குமொரு
நங்கையிவள் சிந்தையிலென்ன
உண்டென வியந்தாள்
ஆண்டவனை தொழுது உடன்
அருகில் நின்ற ஒருத்தி!
ஒன்று பெற்றேன் அதுவும்
நஞ்சைப் பெற்றேன்.
நித்தமொரு பொய்,
சித்தமெலாம் வஞ்சனை
பித்தலாட்டம் திருட்டென
மொத்தக் குத்தகையாய்
அத்துனையும் செய்கின்றான்
திருத்தவோ, வெறுக்கவோ
இயலவில்லை என்னால்
தாயாய் அவனை சீராட்டி வளர்த்தேன்
இக்கணமும் அவனென் பிள்ளை
நெஞ்சிலே சுமக்கின்றேன்..
நாளையவன் செத்த பின்னர்
நிச்சயமாய் நரகந்தான்.
தண்டனைக் காலந்தனில்
தனியாய் விடலாமா
தாயாய் அங்கவனை அனுதினமும்
காத்து நின்று, புண்ணுக்கு மருந்திட்டு
அவன் புலம்புங்கால் தோள் சாய்த்து
ஆதரிக்க நான் வேண்டும்,
அவனை அவதரித்த தாய் வேண்டும்
ஆதலினால் வேண்டி நின்றேன்
பிறர் அஞ்சுகின்ற நரகந்தனை!
கண்ணிரண்டில் நீர் கரைய கரம்
குவித்து நின்றாள் பெண்ணவளே!
மூலம் : ஆங்கிலத்தில்: உமா பாபு
தமிழில் மொழியாக்கம்: தி.ந. இளங்கோவன்
No comments:
Post a Comment
படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..