இடம்: மதுரம் நாராயணன் மையம் (சிறப்புக் குழந்தைகளுக்கானது).
தியாகராய நகர்
நாள் : 11-01-2013
நேரம்: காலை 10.05 மணி
பொதுவாகவே மன வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் தொடர்பான வாழ்வியல் அனுபவங்கள் அவ்வளவு சுவாரசியமாக அமைவதில்லை, சாதாரண மனிதர்களுக்கு. ஆகவே, கீழே நான் சொல்லப்போகும் அனுபவம் உங்களுக்கு சுவாரசியமாக இல்லாமல் போக நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக, மேலே குறிப்பிட்டுள்ள பள்ளி வளாகத்துக்கு காலை பத்து மணிக்கு வந்து சேருமாறு, மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து எங்களுக்கு நேற்று (10-01-2013) மதியம் 3 மணிக்கு அஞ்சலட்டையில் தகவல் வந்தது.
வழக்கம் போல, அடையாள அட்டை, ரேஷன் கார்ட், புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை ஆகியவற்றின் பிரதிகளும் தேவையென்று அறிவுறுத்தல்.
கடந்த அக்டோபர் 2012 லேயே இது போன்ற ஒரு கடிதம் வந்து, மிகப் பெரிய திட்டம் தீட்டி, என் பெரிய மகனுடன் நானும், இல்லாளும் சென்று இப்பொழுது கேட்கப்படும் அத்துனை ஆவணங்களும் சமர்ப்பித்து வந்தோம். Autism குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை (22 வயது ஆனாலும் குழந்தைதான்), இது போன்ற அரசு அலுவலகங்களுக்கு அழைத்து சென்று, எந்த இடம் என்று விசாரித்து அறிந்து, வரிசையில் நின்று, பொறுமையுடன் காத்து, அவர்கள் திடீரென்று கேட்கும்
ஆவணங்களைக் கொடுத்து வேலையை முடிப்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அதுவும் ‘உச்சா போக’ வேண்டிய தேவையோ, இன்ன பிறவோ குழந்தைகளுக்கு வந்துவிட்டால், நரக வேதனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
மீண்டும் இன்றைய அனுபவத்துக்கு வருகிறேன்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட டாகுமெண்ட்ஸ் என்றாலும், மீண்டும் கேட்கும் போது கொடுக்காவிட்டால், உதவி நிறுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயத்தில், இன்று காலை முதல் போர்க்கால நடவடிக்கைக்கான திட்டமிட்டு நிறைவேற்ற எத்தனித்தோம்.
காலை 8.30 க்கு எனது பெரிய மகனை பாலவாக்கத்தில் உள்ள அவனது பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு (அவனுக்கு காலை மற்றும் மதிய உணவை தயாரித்து, பேக் செய்து), பிறகு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் இளைய மகனை காரில் ஏற்றிக்கொண்டு, திருவான்மியூரிலிருந்து நந்தனம் YMCA வளாகம் சென்று 9.15 மணிக்கு அவர்களிருவரையும் V-Excel ன் Portraits of India நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக இறக்கிவிட்டுவிட்டு, தியாகராய நகரை நோக்கி காரைச்செலுத்தினேன். வழியிலேயே அலுவலக நண்பருக்கு தொலைபேசி, தி.நகர் கிரியப்பா தெருவுக்கு எப்படிச் செல்வதென்று குத்துமதிப்பாய் விசாரித்து, அவர் சொன்ன சொதப்பலான வழி காட்டுதலால் அங்கும் இங்கும் சுற்றி, ஒரு வழியாய், பாரதிராஜா மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ‘மதுரம் நாராயணன் மைய’த்தை அடைந்த போது மணி 10.05.
நெடிய வளாகம். கடைக் கோடியில் உள்ள கட்டடத்தில் குழந்தைகளின் நடமாட்டம் தெரிந்தது. கையில் இருந்த அஞ்சலட்டையை எல்லோருக்கும் தெரியுமாறு வைத்துக் கொண்டு, அங்கிருந்த காவலாளியிடம் விசாரிக்க நெருங்கினேன்.
‘சர்ட்டிபிகேட் வெரிஃபிகேஷனா’ என்றவர், ‘மேல போங்க சார், இன்னும் அவங்க வரல, வெயிட் பண்ணுங்க, வந்துருவாங்க’ என்று முதல் தளத்திற்கான படிக்கட்டைக் காட்டினார்.
மேலே சென்றால், ஏற்கனவே என்னைப் போல ஒரு ஜந்து (55 வயதிருக்கலாம்) கையில் அஞ்சலட்டையுடன் பரிதாபமாக அமர்ந்திருந்தது. ஒரு சிநேகப் புன்னகையுடன் பக்கத்தில் அமர்ந்தேன்.
மௌனமாய்க் கழிந்த சில கணங்களுக்குப் பின், மெல்ல பேச ஆரம்பித்தோம்.
‘எத்தனி மணிக்கு வருவாங்க தெரியுமா? கேட்டீங்களா’ என்றேன்.
‘கீழே செக்யூரிட்டி இங்க வெய்ட் பண்ண சொன்னார்’
‘எங்கிருந்து வர்றீங்க சார்?’
‘கோட்டூர்புரம், நீங்க?
‘நான் திருவான்மியூர்’
‘யாருக்கு? உங்க பையனுக்கா வெரிஃபிகேஷன்?’
‘இல்லைங்க, என் அண்ணன் பையனுக்கு’
மனம் ஒரு நிமிடத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அண்ணனின் மகனுக்கு உதவித்தொகைக்காக, இந்த வயதில் அலையும் மனிதர்களும் இருக்கிறார்களே என்று.
‘உங்க அண்ணன் வெளியூர் போயிருக்கிறாரா?’
‘மேல போயிட்டார்’ என்று ஆகாயத்தைக் காண்பித்தார். சுருக்கென்றது.
‘அண்ணி?’
‘மொதல்ல மேல போனது அவங்கதான். அண்ணன் அப்புறம்தான்’
ஒரு கணத்த மௌனம் சற்று நேரம்.
‘ஒங்க அண்ணன் பையனுக்கு என்ன வயசு?’
‘22’
‘அவன் கூடப் பொறந்தவங்க?’
‘ஒரு அக்காதான். அவளுக்கு ப்ரைன் ஃபீவர் வந்து 6 மாசத்துக்கு முன்னால செத்துப் போயிட்டா’
இப்படி ஒரு அதிர்ச்சிக் கதையை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு சொல்லொணா வேதனை. என்ன கொடுமை இது? இறைவனின் கணக்குதான் என்ன?
‘உங்க அண்ணன் ஏதாவது சொத்து வச்சிருக்கிறாரா இவனுக்கு?’
‘ஒரு வீடு இருக்கு. அதுலயிருந்து வாடகை கொஞ்சம் வருது.’
‘அந்த வீட்டை விக்க முடியுமா?’
‘தெரியல. கஷ்டம்தான். எங்க அண்ணி பேருக்கு உயில் எழுதி வச்சார். ஆனா அவருக்கு முன்னாடி அவங்க எறந்துட்டாங்க. இப்ப இவன் தான் வாரிசு. இவனோ மன வளர்ச்சி இல்லாத பையன். பாக்கனும். இன்னும் எத்தனை வருஷம் எங்களால பாத்துக்க முடியும் இவனை. ஒன்னும் புரியல சார்’
திக்குத் தெரியாத காட்டில் என்று புலம்பித் திரிவானே பாரதி, கிட்டத்தட்ட அதைப் போன்ற நிலை இந்தக் குடும்பத்துக்கு.
மணி 10.30. சில பெண்மணிகள் (பயிற்சியாளர்களாயிருக்கலாம்) குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கு சந்தேகம் வந்தது. தவறான இடத்தில் காத்திருக்கிறோமோ என்று. ஆனால் என்னோடு காத்திருப்பவர் ‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோமே’ என்றார்.
ஒரு கணவனும், மனைவியும் 2 வயதுக் குழந்தை ஒன்றுடன் வந்தனர். அந்தக் குழந்தையைப் பார்க்க இரண்டு கண் போதாது. கொழு கொழுவென்று கோதுமை நிறத்தில். ஆனால் சிறப்புக் குழந்தை என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.
குழந்தையின் தந்தையானவன் எனதருகில் அமர்ந்தான். தாயும் குழந்தையுமாக அறைக்குள் சென்றனர். இவன் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்தவுடன் என்னிடம் ‘ இன்னும் எவ்ளோ நாள் வரனும்’ என்று கேட்டான்.
‘நானும் ஒங்களைப் போலத்தான். இங்க வேல பாக்கிற ஆளில்லே’ என்றவுடன், ‘ஓ’ என்று சொல்லிவிட்டு மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
‘என்ன பிரச்னை உங்க பொண்ணுக்கு’ என்றேன்.
‘பேச்சு இன்னும் வரலை. நடக்க மாட்டேங்குறா’
‘என்ன டயக்னாஸ் பண்ணியிருக்காங்க? ஆட்டிஸமா? சிபியா’ என்றதற்கு
‘அப்படின்னா?’ என்றான்.
‘இதெல்லாம் குறைபட்டோட பேரு’ என்றேன்.
‘அப்படியெல்லாம் இல்ல இவளுக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல பேசிடுவா, நடப்பான்னு சொன்னாங்க’ என்றான்.
நான் பதில் சொல்லவில்லை. ஆனால் அவநம்பிக்கை தெரியும் விதமாகவும் முகத்தை வைத்துக் கொள்ளவில்லை.
20 வருடத்துக்கு முன் 1993ல் இதே மதுரம் நாராயணன் மையத்துக்கு (அப்போது பனகல் பூங்கா அருகில் இருந்தது) வந்த போது என்ன விழிப்புணர்வோடும், வாழ்வைப் பற்றிய இலகுவான நம்பிக்கையோடும் நான் இருந்தேனோ, அதே போல இவனும் இருப்பதாய் எனக்குப் பட்டது.
இவனுடைய இந்த உணர்வை, என் அனுபவத்தையும், இன்றைய பக்குவத்தையும் சொல்லி மாற்ற முயல எந்த அவசியமும் இல்லையென எனக்குப் பட்டது. ஒரு வகையில் அப்படி சொல்வது தவறோ என்று கூட்த் தோன்றியது.
பூ பூத்து, காயாகிக் கனிவதற்கும் ஒரு கால இடைவெளி வேண்டுமல்லவா? அதே போல, இவன் வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த நிகழ்வின் தீவிரத்தை காலமே இவனுக்கு மெல்ல மெல்ல உணர்த்தும். அதனை எதிர்கொள்ள, இவனும் மெல்ல மெல்லத் தயாராவான் என என்னால் உணர முடிந்தது.
அந்த நேரம், ஒரு பெண்மணி, சற்றே அதிகாரி போன்ற தோற்றத்துடன் மேலேறி வந்தார். எங்களைப் பார்த்தவுடன் ‘சர்ட்டிபிகேட் வெரிபிகேஷனா’ என்றார்.
நாங்கள் ‘ஆம்’ என்று தலையசைத்தவுடன், ‘கீழ ஒரு மேடம் இருக்காங்க. அங்க போங்க. இங்க எதுக்கு உக்காந்திருக்கீங்க?’ என்றவாறு எங்களை விரட்டினார்.
வேக வேகமாக கீழே இறங்கி வந்தால், பத்து, பதினைந்து பேர் இதற்காக அங்கே காத்திருந்தனர், கொளுத்தும் வெயிலில், வெட்ட வெளியில்.
அரசுத்துறையைச் சேர்ந்த அந்தப் பெண்மணியையும், கூட வந்திருக்கும் அந்த கனவானையும் நான் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். அக்டோபர் மாதம் DMS வளாகத்தில் இவர்களிடம்தான், நான் என் மகனின் சான்றிதழ்களின் பிரதியை சமர்ப்பித்து வந்திருந்தேன்.
சொல்லப் போனால், அந்தப் பெண்மணி மிகவும் கனிவுடன் பேசுபவராகவே இருந்தார்.
நான் அவரிடம் சென்று, 4 மாதம் முன்னரே, இதே ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்த்தை நினைவு கூர்ந்து, மறுபடியும் எதற்கு மீண்டும் கேட்கிறீர்கள் என்று வினவினேன்.
‘எங்க கையில ஒன்னும் இல்ல சார். எங்களுக்கு மேலே இருக்கிற மேடம் மறுபடியும் கேக்க சொன்னாங்க. கேட்டிருக்கோம்’ என கையறு நிலையாய் சொன்னார் அவர். நாம் கொடுக்கும் ஆவணங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கிஞ்சித்தும் தராத ஒரு பதில் மற்றும் சூழல்.
நான் என்னுடன் கொண்டு சென்றிருந்த ஆவணங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, 'எப்போலேருந்து பணம் பேங்க் அக்கவுண்ட்ல போடுவீங்க?' என்ற என்னின் கேள்விக்கு 'வீட்டுக்கு லெட்டர் போடுவோங்க' என்ற பதில் கிடைத்தது.
புறப்பட எத்தனித்த போது, எதிர்பாராத விதமாய் ஒரு முதியவர் என்னை அணுகினார்.
‘தம்பி, இவ என் பேத்தி. இவளுக்கு பணம் வந்துகிட்டிருக்கு. அது சம்பந்தமா கடுதாசி வந்துது. அதான் வந்திருக்கேன். இந்த ஃபாரம் பூர்த்தி பண்ணித் தர்றீங்களா? நான் எழுதப் படிக்கத் தெரியாதவன்’
அவர் உடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. யாருக்கோ, எதுவோ பிரச்னை எனும் பாவத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். வாயிலிருந்து எச்சில் வழிந்தவாறு இருந்த்து. அந்தப் பெண்ணின் பாட்டி, தன் புடவைத் தலைப்பால் அவள் வாயைத் துடைத்துவிட எத்தனித்தார்.
எனக்கு உடனே திரும்பி, மகனின் ஆண்டுவிழா நிகழ்வைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், இவருக்கு உதவாமல் செல்வது தவறென்று தோன்றவே, அங்கிருந்த மர நிழலில் அமர்ந்து அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன்.
அந்த விண்ணப்பத்தில் பிறந்த நட்சத்திரம், ராசி தவிர எல்லா தகவல்களும் கேட்கப்பட்டிருந்தன. அந்த முதியவரிடம், அவளின் ‘ஊனமுற்றோர் அடையாள’த்துக்கான புத்தகத்தின் பிரதி இருந்தது. மஞ்சள் நிற அடையாள அட்டையின் பிரதி இல்லை. வங்கிக் கணக்கு அந்தக் குழந்தையின் பெயரில் துவங்கவேயில்லை.
இந்த நிலையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்று சொல்லி, வங்கி கணக்கு துவங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிச் சொன்னேன். அவரின் மகள் (அந்தப் பெண் குழந்தை மகள் வயிற்றுப் பேத்தியாம்) ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், விடுப்பு எடுக்கவியலா நிலை என்பதையும் கூறினார்.
அவர் உடனே தன் மகளுக்கு தொலைபேசினார். எதிர் முனையில் அவரின் பெண் அவரிடம் கடுமையாய் பேசியது தெரிந்தது.
தொலைபேசியை வைத்துவிட்டு என்னிடம் சண்டைக்கு வந்தார் அவர்.
‘திடீர்னு பேங்க் பாஸ் புக் கேட்டா என்ன சார் அர்த்தம்?’
‘ஐயா, நானும் உங்களைப் போல, என் மகனுக்காய் விண்ணப்பிக்க வந்தவன். என்னைக் கோபித்தால் நான் என்ன செய்ய முடியும்’ என்றேன். புலம்பியவாறே அவர் பெண் அதிகாரியை நோக்கி நகர்ந்தார்.
அதற்குள் என்னை சுற்றி 3 பேர், விண்ணப்பத்துடன் காத்திருந்தனர். இது நான் எதிர்பாராதது. ஒவ்வொருவருக்காய் பூர்த்தி செய்து கொடுக்க ஆரம்பித்தேன். இந்த நிகழ்வுகளில் துளியும் சம்பந்தப் படாமல் அந்த அதிகாரியும், அவரது உதவியாளரும், தத்தம் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
திரும்பத் திரும்ப அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், IFSC CODE, பிறந்த தேதி, முகவரி, அதற்கான சான்று என்று கேட்டு படுத்துவதன் காரணம்தான் என்ன?
ஒரு பெண் வழக்கம் போல் வங்கிக் கணக்கு துவக்காமல் வந்திருந்தார். அதன் அவசியம் பற்றி சொன்னவுடன், ‘ அரை மணி நேரம் வெயிட் பண்றீங்களா, பக்கத்துல ஏதாவது பேங்க் இருந்தா போயி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டு வந்துடறேன்’ என்று அப்பாவியாய் சொன்னதற்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தேன்.
ஒரு வழியாக என்னால் முடிந்த உதவிகளையும், வழி காட்டுதல்களையும் அங்கிருந்தோருக்கு சொல்லிவிட்டு, கனத்த மனத்துடன் நான் மீண்டும் நந்தனம் YMCAவை நோக்கி புறப்பட்ட போது மணி 11.15.
அரசாங்கத்தின் திட்டங்கள் எவ்வளவு அருமையாக இருந்தாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்களை சம்பந்தப் பட்டோருக்கு தெளிவாக சொல்லாமை, நடைமுறைப் படுத்துவதில் சிரத்தையின்றி செயல்படும் அதிகார இயந்திரத்தின் மெத்தனம் ஆகியவற்றால் துயருறுவது பெற்றோர்களே.
ஏற்கனவே வேதனைத் தீயில் ஒவ்வொரு கணமும் வெந்து கொண்டிருக்கும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.
மேலும், சில பெற்றோர்களின் அலட்சியமான அணுகுமுறையையும் கவலை தரத் தக்கது. இவ்வளவு அதிமுக்கியமான பிரச்னைக்கு தான் நேரடியாகப் போகாமல், வயதான தன் தாய் தந்தையரை அனுப்பும் பெண் எத்தகைய நெருக்குதலில் இருக்கிறாரோ? அப்படியே தவிர்க்க இயலாத சூழலென்றாலும், தேவையான ஆவணங்களைக் கொடுத்தனுப்ப வேண்டாமா? அந்த தாத்தாவும், பாட்டியும் ஏன் அப்படி தெருவில் நின்று திண்டாட வேண்டும்? அந்தப் பெண் குழந்தையின் தகப்பனின் பங்கு இதில் என்ன? புரியவில்லை.
பெரும்பாலான சிறப்புக் குழந்தைகளின் பள்ளி மற்றும் மருத்துவப் பரிசோதனை நேரங்களில் தாயின் பங்கு இருக்குமளவு, தந்தையின் பங்களிப்பு இருப்பதில்லை என்பது நிதர்சனம்.
‘நார்மல்’ குழந்தைகள் நன்கு படித்து, சாதிக்கும் போது ‘என் மகன் இப்படியெல்லாம் சாதிக்கிறான்’ என்று பெருமை பேசும் தந்தைக்குலங்கள், இப்படிப் பிரச்னையுள்ள குழந்தைகள் பிறந்தவுடன், விட்டேற்றியாக இருப்பது என்ன நியாயம்?
ஒரு வகையில் இவையும் பெண்களுக்கெதிரான சமுதாயத்தின் தாக்குதலே.
உயிருடன் இருக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றிய சிந்தனைகளுடன், நம்முடைய இறப்பிற்குப்பின் என்ன நிகழும்? அதற்கு என்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்ற சிந்தனை மீண்டும் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
National trust பற்றி மீண்டும் தகவல்களை சேகரிக்க வேண்டும், Guardianship பற்றி நன்கு ஆராய்ந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்ற
உத்வேகம் என்னுள் எழுந்தது. கார் சீராக ஓடிக் கொண்டிருந்தாலும் மனம் அங்ஙனம் இல்லை.
எல்லா அனுபவங்களில் இருந்தும் ஏதோ ஒரு படிப்பினை கிடைக்கவே செய்கிறது. இல்லையா?
நீண்ட நெடிய இந்தப் பதிவை, பொறுமையாக இறுதி வரை படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
அன்புச்ச்கோ. திரு. இளங்கோ,
ReplyDeleteஅற்புதமான பதிவு. நெஞ்சம் நெகிழச் செய்த உண்மைகள். சுடத்தான் செய்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். பலருக்கும் பயன்படக்கூடிய பதிவு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவள சங்கரி
நண்பரே
ReplyDeleteநலமா?
எப்படி இருக்கீங்க?
நாம் ஒரு நாள் நேரில் சந்திப்போம்.
அன்புடன்
அன்வர்
நிச்சயமாய் நண்பரே, தொடர்பு கொள்ளுங்கள்.
Delete