இன்று (11-01-2013) எனது இளையமகன் படிக்கும் 'V-Excel" சிறப்புப்பள்ளியின் 'Portraits of India' என்ற கலை நிகழ்ச்சி (ஆண்டுவிழா போன்றதொரு நிகழ்ச்சி, ஆனால் ஆண்டுவிழாவென்று குறிப்பிடவில்லை) க்கு சென்றிருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் இது போன்ற கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன்.
ஏற்கனவே மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேலும் சிரமப்படுத்துகிற நிகழ்வாகவே இத்தகு நிகழ்ச்சிகளை நான் எண்ணிக்கொன்டிருந்தேன். அந்த எண்ணத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததில் V-Excel பள்ளிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
பங்கு பெறும் குழந்தைகளில் பல, தாம் என்ன செய்கிறோம், யார் யார் இந்த நிகழ்வைக் கண்டு ரசிக்கிறார்கள் என்ற உணர்வின்றி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவது போல் தோன்றினாலும், மிக முக்கியமான சில நல்ல விஷயங்கள் நடந்தேறுவதை என்னால் உணர முடிந்தது இன்று.
பல குழந்தைகள் ஆசிரியர் உதவியுடன்தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். இருந்த போதிலும், அவர்களின் முகத்தில் கணப்போதில் வந்து போகும் அந்தப் பெருமிதம்.. அதற்கு என்ன விலை கொடுப்பது?
பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் அசத்தினார்கள். உடல் பருவப்பெண்ணாய் இருந்தாலும், அந்த கள்ளங்கபடமற்ற குழந்தை முகம், ஆஹா..பாராட்டை எதிர் நோக்கி, பயம் தவிர்த்து பார்வையாளர்களை நோக்கி கையசைத்த போது என்னுள் பரவசம்.
சென்னை அரசு இசைக் கல்லூரியினரின் மயிலாட்டம், கரகாட்டம் சூப்பர். அதிலும் குறிப்பாக ஒரு இளைஞன் செய்த சாகசங்கள் அருமை. அவர்களின் தப்பாட்டத்தின் போது, ஐந்தாறு சிறப்புக்குழந்தைகள் தாங்களாகவே எழுந்து ஆடியது கண்கொள்ளாக்காட்சி.
என் உறவுக்காரரின் பெண்குழந்தையும் அதில் பங்கு கொண்டாள். நிகழ்ச்சியின் போது அவள் தன் தாயைப் பார்த்து, வெற்றிக்குறி ( Thumbs up) காட்டினாள். என் கண்கள் பனித்தது. இந்த புரிதலையும், கூச்சம் போக்குதலையும் இவளுக்குக் கொண்டுவர எத்துனை பேரின் உழைப்பு பின்னணியில் இருந்திருக்க வேண்டும்?
மேடையேறி பங்கேற்று, அங்கீகாரமும், பாராட்டும் பெறுவது, அந்தக் கணத்தோடு மறைந்து போகும் நிகழ்வல்ல. அந்த குழந்தையின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் ஒரு பதிவு.
கிட்டத்தட்ட, ஒரு சினிமா நட்சத்திரம் போல அழகாய் சேலை உடுத்தி வலம் வந்த பெண்ணொருத்தியைப் பார்க்கையில் என் மனம் கசிந்தது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஹாலில் அங்குமிங்கும் அவள் நடந்து தன் இருப்பை தானே ரசித்த விதம் எனக்கு அவ்வளவு ஆனந்தத்தைத் தந்தது.
நிறைய வாசகங்கள் எழுதித் தொங்கவிட்டிருந்தார்கள். சிறப்புக் குழந்தைகளின் உறவினர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது போல் நிறைய வாசகங்கள் இருந்தாலும், அவற்றை பெற்றோராகிய பெரும்பான்மையினரே படித்து நெகிழ்ந்தோம்.
என் அலுவலக நண்பர்கள் (என்னை விட வயதில் இளையோர்) சிலர் வந்திருந்து இத்தகைய குறைபாடுகளைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கண்டு கொண்டனர்.
கிட்டத்தட்ட 50 ஃஸ்டால்கள் விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்வாபிமான், தீபம், ஸ்வபோதினி, ராஸா போன்ற சிறப்புப் பள்ளிகளின் ஸ்டால்களும் இடம் பெற்றிருந்தன.
ஸ்வாபிமான் பள்ளியில்தான் என் மூத்தமகன் கற்று வருகிறான். ஆகவே அந்த ஸ்டாலில் இயல்பாகவே எங்களுக்கு நிரம்ப ஆர்வம் இருந்தது. எனது மகன் செய்த ஒரு சில கைவினைப் பொருட்கள் விற்பனையில் இருந்தன. நான்கள் சிலவற்றை வாங்கி வந்தோம்.
வீட்டுக்கு வந்து அந்தப் பொருட்களைப் ஆர்த்ததும் என் மகன் 'இது யார் செஞ்சது? நான் செஞ்சது' என்று சொன்னபோது அகமிக மகிழ்ந்தோம்.
இந்த அனுபவத்துக்கு நேர்மறையாய் இன்னுமொரு அனுபவம், இன்று காலையில்..வேறு ஒரு இடத்தில்..தூக்கம் கண்ணை சுழற்றுவதால் ஓரிரு தினங்களில் அந்த நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிரேன். நல்லிரவு நண்பர்களே..
No comments:
Post a Comment
படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..