Tuesday, December 24, 2024

துரோகம்

"மாமா, இன்னைக்கே பேங்க்ல லோன் செக் கொடுத்துருவாங்களா?"

"இல்ல கயல், இன்னிக்கு முத்து வந்து  ஷ்யூரிட்டி கையெழுத்து போட்ட உடனே, லோன் சேங்க்‌ஷன் ஆயிரும். இரண்டு நாள்ல செக் வந்துரும்னு நெனைக்கிறேன்."

மனைவிக்கு பதில் சொல்லியவாறே நண்பன் முத்துவுக்கு போன் செய்தான் அருண்.

"மச்சான், கரெக்டா 11 மணிக்கு பேங்க்குக்கு வந்துருடா.  நான் முன்னாடியே போய் மத்ததெல்லாம் ரெடி பண்ணிர்றேன்."

எதிர்முனையில் முத்து ஆமோதித்திருக்க வேண்டும். "சர்ரா, சர்ரா" என்றவாறே போனைத் துண்டித்தான் அருண். 

எட்டு வருடக்கனவு. வெல்டராக சம்பளத்துக்கு வேலை பார்ப்பவனுக்கு, தானே வெல்டிங் பட்டறை போடுவதெல்லாம் நினைச்சுப் பாக்க முடியாதது. 

ஆனால் கயல்தான் விடாப்பிடியாக பட்டறை போடணும்னு இவனைத் தூண்டி விட்டவள்.

"எத்தினி வருடம் இப்படி சம்பளத்துக்கு வேலை பாத்து சாவுறது. பகலும் ராவுமா இந்த வெல்டிங் சூட்டுல கண்ணெரிஞ்சு இப்டி உழைக்குற. கையில் 15000 ரூவா கூட கெடைக்க மாட்டேங்குது. உன் உழைப்பால, உன் மொதலாளி குடும்பம்தான் கொழிக்குது. நாம இப்டியே கெடக்கணுமா"ன்னு அவனைத் தொணப்பி எடுத்து, இந்த மாதிரி செய்லாம்னு நம்பிக்கை வரவச்சது அவதான்.

அருண்தான் வீட்டுக்கு மூத்தவன். கூடப்பொறந்த 2 தங்கச்சிகளுக்கும் இருக்குற பரம்பரை சொத்தெல்லாம் வித்து, நல்ல மாப்பிள்ளைகளாப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு அப்பா. 

குடும்ப சொத்துன்னு எதுவும் நிக்கல அதுக்கப்புறம். அப்பாவோட மளிகைக்கடை வருமானம் அப்பா அம்மாவோட வாழ்க்கையை ஓட்றதுக்கு மட்டுந்தான் தேறுது.

அருணுக்கு படிப்பு சரியா ஏறல. பத்தாம்பு பெயிலு. அப்டி இப்டின்னு அலைஞ்சு இந்த வெல்டிங் வேலையை கத்துகிட்டதுதான் இன்னிக்கு பொண்டாட்டி புள்ளைக்குக் கஞ்சி ஊத்த உதவுது.

"மாமா, நானும் உங்கூட வர்றேன். போற வழில என்னை அங்காளம்மன் கோயில்ல எறக்கி வுட்ரு. ஒரு வெளக்கு போட்டுட்டு,  இன்னியோட நம்ப கஷ்டம்லாம் தீர்த்துடுன்னு ஆத்தாகிட்ட வேண்டிகிட்டு திரும்ப நடந்து வந்துர்றேன்."

"அப்டின்னா சீக்கிரம் கெளம்பு கயல்".

வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் சத்தம் கேக்குது. "அப்பா பை, அம்மா பை"ன்னு சொல்லிட்டு புள்ள ஸ்கூலுக்கு ஓடுது. 

கயல் பரபரன்னு வேலை செய்றா. அருண் குளிச்சு ட்ரெஸ் பண்ணிட்டு, லோன் பேப்பர்லாம் அடுக்கி எடுத்து பேக்ல வச்சிகிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்றான்.

"கயல், ரெடியா, சீக்கிரம் வா, டைம் ஆகுது பாரு".

"தோ வந்துட்டேன்". ஓடி வந்து பைக்கில் ஏறுகிறாள் கயல்.

வண்டி நகர்கிறது.

********

பேன் கார்டு பின் பக்கம் செராக்ஸ் எடுத்துட்டு வாங்க. நீங்களும் ஷ்யூரிட்டியும் ஆதார் செக் பண்ணிறலாம்.

மேடம், ஷ்யூரிட்டி வந்துகிட்ருக்கார். இன்னும் 10 நிமிசத்துல வந்துருவார்.

நோ ப்ராப்ளம். அவரு வந்தோன்ன வாங்க. 

முத்துவுக்கு போன் போட்டான். முழுசா ரிங் போச்சு, எடுக்கல. ஓகே, அப்டின்னா பைக்ல வந்துட்ருக்கான்னு நம்பிக்கையோட அருண் வெளில வழியையே பாத்துகிட்ருந்தான். 

எவ்வளவு அவமானம் இது வரைக்கும் வாழ்க்கைல. பெத்த அப்பனே தன்னை மதிக்கல, அரவணைக்கல என்பதெல்லாம் அருணுக்கு காலத்துக்கும் ஆறாதது. படிப்பு ஏறலைன்ற ஒன்னு மட்டுமே, ஒருத்தனை இந்த சமூகம் குப்பையாய்க் கசக்கிப் போட போதுமானதா இருக்கு.

"இந்தப் பொட்டிக் கடையை கொஞ்சம் விரிவாக்கி, செல்ஃப் சர்வீஸ் கடை ஆக்கலாம்" என்ற தன் யோசனையை அப்பா கேலி செய்தது இவனை நொறுங்கச் செய்தது. 

"40 வருசமா கடை நடத்தறேன். இந்தப் பெரிய மனுசன் ஐடியா குடுப்பாருன்னுதான் காத்திட்ருக்கேன்"னு அம்மாகிட்ட நையாண்டி செஞ்சார்.

அது மட்டுமில்ல, வீட்டு மாப்பிள்ளைங்களுக்கு நேரா மட்டந்தட்டுறது, தங்கச்சிங்க அதை ரசிக்கறதுன்னு, நோகடிச்சது நிறைய.

புள்ள சரியா செட்டில் ஆகலைங்கறத அப்பா ரசிக்கிறாரோன்னு சந்தேகமே உண்டு அருணுக்கு.

மளிகைக் கடைலேருந்துதான் வீட்டுக்கு மாச சாமான் வரும். இவனுக்குக் கல்யாணம் ஆன பிறகு, இவன் சம்பளத்தை அம்மாகிட்டதான் கொடுத்தான். வீடு அம்மாவோட நிர்வாகந்தான். கலயாணத்துக்குப் பிறகு அந்த ரெண்டு வருசம் ஒரே வீட்டுல இருந்தது, அடுத்த சென்மத்துல கூட மறக்காது.

சில்லு சில்லா தேஞ்ச சோப்பைத்தான் கயலுக்குன்னு அம்மா கொடுக்கும். அதாவது அவங்க குளிச்சு தேஞ்சு தூக்கி எறியறதெல்லாம் ஒட்டி மருமகளுக்கு வைக்கும். 

துணிமணி, உள்ளாடை, நாப்கின் எல்லாத்துக்கும் அம்மா எதுனா இடிச்சு காட்டிட்டுதான் காசு அவுக்கும். இவ வந்து அருண்கிட்ட அழுவா. ஒரு ஆம்பளை நொறுங்கிப் போறதுன்னா பொண்டாட்டி முன்னாடி கையாலாகாம நின்னு அவ அழறதைப் பாக்கும்போதுதான்.

தனிக் குடுத்தனம் போகணும்னா வாங்குற சம்பளம் போதாதுன்னு நல்லாவே தெரியும். அதுனால எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருந்தான் அப்போ.

எதுக்கோ ஒரு நாள், "ஏம்மா இப்படிப் பண்ற" னு அம்மாகிட்ட கேட்டதுக்கு அப்பாவுக்குக் கோவம் வந்து, காட்டுக் கத்தலா கத்துனார்.

"தொரைக்குக் கோவம் வேற வருதோ. கல்யாணம் பண்ணிகிட்டா போதுமா? குடும்பத்தை தனியா நின்னு நடத்திப்பாரு. அப்ப வலி புரியும். இதுல கோவ மயிரு ஒன்னுதான் கொறைச்சல்"

அடுத்த நாளே வாடகைக்கு வீடு பாத்து தனிக்குடுத்தனம் ஆரம்பிச்சாச்சு. கால் வயிறோ, அரை வயிறோ, அவமானப்படாம வாழ முடியுது. என்ன ஒன்னு, கையில் ஒன்னும் மிஞ்ச மாட்டேங்குது. இதுல பையன் பொறந்ததுக்கு அப்புறம் இன்னும் நெருக்கடியா இருக்கு. இந்த பட்டறை ஆரம்பிச்சு நல்லா போச்சுன்னா வாழ்க்கையே மாறிப் போயிரும்.

மணியைப் பாத்தான் அருண். பதினொன்னா?

இவ்வளவு நேரம் ஆச்சு, இந்த முத்து ஏன் இன்னும் வர்ல? என்னவோ சரியாப்படலையே.

மறுபடியும் முத்துவுக்கு போனைப் போட்டான்.

This number is either switched off or not reachable...

******


மணி மதியம் 12..

கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை தகர்ந்து, மனசு சிந்திக்காத நிலைக்கு கிட்ட்த்தட்ட வந்திருந்தது அருணுக்கு.

என்ன ஆகியிருக்கும் முத்துவுக்கு? 

முத்து மனசு மாறி இருப்பானா? அப்டின்னா எதுனால?  அப்டியே இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாமே? ஒரு வேளை சொல்ல சங்கடப்பட்டிருப்பானோ?

தொடர்ந்து சிந்தித்ததில் குழப்பந்தான் மிஞ்சியது. சுயதொழில் கனவு நொறுங்கிக் கொண்டிருப்பதை மனம் உணர்ந்து கொள்ளத் துவங்கி இருந்தது. எந்தக் கணத்திலும் கண்ணில் நீர் வந்துவிடத் தயாராய் இருந்தது.

டக்கென்று ஒரு மின்னல். ஏதாவது ஆக்சிடெண்ட்?

தன் பிரச்னை திடீரென மனசை விட்டு அகன்று முத்துவைப் பற்றிய கவலை பெரிதாகி நின்றது.

உடனே முத்துவின் மனைவிக்கு போன் அடித்தான். அதுவும் ஸ்விட்ச் ஆஃப்.

இனி யோசிப்பதில் பொருளில்லை. நேரில் போய் பார்த்து விடுவதே நல்லது எனத்தோன்றி விட, முத்துவின் வீட்டை நோக்கி வண்டியை விட்டான் அருண்.

******

"வாங்கண்ணா" சுருக்கமாய் வரவேற்றாள் மலர், முத்துவின் மனைவி.

"முத்து இருக்கானா?"

"அவரு அவசரமா வெளியூர் போயிருக்காருண்ணா" என்றவள் சற்று நிதானித்து, "அவங்க அக்காவுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்திக்கு போன் வந்துச்சு. அதான் பாத்துட்டு வர்லாம்னு போயிருக்காரு"

"சரிம்மா, சும்மாதான் பாக்கலாம்னு வந்தேன். முத்து வந்தான்னா சொல்லிரு"

முத்துவின் உதவி இனி இல்லையென்றாகி விட்டது. காரணம் எதுவாய் இருந்தால் என்ன?

மனசும் உடம்பும் சோர்ந்து போய் இருந்தது அருணுக்கு.

கயலுக்கு போன் போட்டான்.

"என்னாச்சு, வேலை முடிஞ்சுதா,  முத்தண்ணன் கையெழுத்து போட்டாரா"

"ஏன் வர்ல, எதுனா விசாரிச்சீங்களா?"

"இப்ப என்னங்க செய்றது? சரி, மொதல்ல வீட்டுக்கு வாங்க, சாப்டுட்டு அடுத்து என்னன்ன யோசிப்போம்"

"நான் எதுனா கடைல சாப்டுக்கறேன். நாம பட்டறைக்கு வாடகைக்கு எடம் பாத்திருந்தோம்ல, அந்த ஓனரைப் போய் பாத்துட்டு வந்துர்றேன். நாளைக்கு அட்வான்ஸ் தாறதா சொல்லிருந்தேன். இன்னும் ரெண்டு நாள் வாய்தா வாங்கிட்டு வாரேன்."

"சரி, தைரியமா இருங்க, இங்க எதுவும் சுளுவா கெடைச்சிராது, போராடித்தான் ஆவணும். புரியுதா, மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரோட்டப் பாத்து பத்திரமா வண்டிய ஓட்டுங்க"

******

"தம்பி, என்ன மொகமெல்லாம் சோர்வாத் தெரியுது?"

"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே, வண்டில வந்தது அப்டித் தெரியுது போல"

"என்ன சேதி தம்பி?"

"அட்வான்ஸ் நாளைக்கு தாரதா சொல்லிருந்தேன்ல, பணம் கொஞ்சம் டைட்டா இருக்கு இப்போ, அடுத்த வாரம் தர்லாமான்னு கேக்கலாம்னு வந்தேன்"

"ஒன்னு சொல்ட்டுமா தம்பி. அட்வான்சே இப்ப வேணாம். மொதல்ல தொழிலை ஆரம்பிங்க. நாலைஞ்சு மாசம் கழிச்சு குடுத்தா போதும். உங்கள மாதிரி நானும் கீழேருந்து மேல வந்தவந்தான். கவலைப் படாம கெளம்புங்க"

அருண் பதிலேதும் சொல்லவில்லை. கையெடுத்துக் கும்பிட்டான். 

ஒரு வாசல் மூடுனா மறு வாசல் திறக்குது. 

நம்பிக்கையுடன் வண்டியைக் கிளப்பினான் அருண்.

*******

தட்டில் சோறும் குழம்பும் போட்டது போட்டபடி இருக்க, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அருண்.

"சாப்பிடுங்க, பாத்துகிட்டேயிருந்தா எப்படி?"

"என்னால சாப்ட முடியல கயல்"

அருண் கண்களில் மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் வழிந்தது. 

"என்னதிது சின்னப்புள்ளையாட்டம்? இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி ஒடஞ்சி போறீங்க. உங்க உறுதியப் பாத்துதான் நான் தெம்பா நிக்கணும். கண்ணைத் தொடைங்க மொதல்ல"

அருண் எழுந்து சென்று மீண்டும் முகத்தைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அவன் சாப்பிட்டு முடியும் வரை இருவருக்குள்ளும் எந்த உரையாடலுமில்லை.

"கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம தூங்குங்க. மத்ததெல்லாம் அப்றமா பேசிக்கலாம்".

"இல்ல கயல், என்னால இப்ப தூங்க முடியாது. என்னவோ படபடப்பாவே இருக்கு"

"இப்படி ஒரு துரோகத்தை முத்து பண்ணுவான்னு நான் நெனைச்சுக்கூடப் பாக்கல"

"எதெ, துரோகமா? ஏன் மாமா பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்ற? தப்பு மாமா, தப்பு. இப்டில்லாம் யோசிக்காத"

"நம்ப வச்சுக் கழுத்தறுக்கிறது துரோகம்தானே. வெறெப்படி சொல்றது?"

"எனக்கு ஷ்யூரிட்டி போடுன்னு முத்தண்ணன்கிட்ட நீ கேட்டியா? இல்லியே. அவரேதான தானா வந்து நான் ஷ்யூரிட்டி போடறேன்னு நின்னாரு. அப்ப இனிச்சிது உனக்கு. இப்போ அவரு சூழ்நிலை என்னன்னு யாருக்குத் தெரியும்? உனக்கு காரியம் ஆகலைன்ன உடனே துரோகின்ற, மறுடியும் சொல்றேன், தப்பு மாமா, ரொம்பத் தப்பு நீ பேசறது"

"என் வலி எனக்குத்தான்டி தெரியும். உனக்கெப்படிப் புரியும்?

"என்னா பெருசா வலி அது இதுன்றே, இப்ப என்னாயிருச்சுன்னு இவ்ளோ அனத்துற? ஷ்யூரிட்டி போட இன்னொருத்தர் கெடைச்சா லோன் குடுக்கப்போறாங்க. கொஞ்சம் நிதானமா யோசி, இதை எப்படித் தாண்டி வர்லாம்னு"

"உனக்கு வலிக்கிற மாதிரி முத்தண்ணனுக்கு எவ்ளோ வலி இருக்குமோ, யாருக்குத் தெரியும்? அவசரப்பட்டு வார்த்தையை விடாத"

பதில் பேசாமல் அருண் மெளனமாய் இருந்தான். கயல் சொன்னதில் இருந்த நியாயம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

காலிங் பெல் ஒலிக்கும் சத்தம். கயல் எழுந்து போய் கதவைத் திறந்தாள். வந்தது கேசவன், கயலின் தம்பி, +2 படிக்கிறவன்.

"வாடா, ஸ்கூல் போகல இன்னிக்கு?"

"இல்லக்கா, ஸ்கூல் லீவு இன்னிக்கு"

"என்ன ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒன்னுமில்லடா"

அக்காவும் தம்பியுமாய் பேசிக் கொண்டே கொல்லைப்புறம் சென்றனர். அருண் ரூமுக்குப் போய் படுத்து தூங்க முயற்சித்தான்.

*******

மாலை 7 மணி.

அருணின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது கயலுக்கு. அருண் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

"ஏங்க போன் அடிக்குது, கேக்கலியா" என்றவாறு உள்ளே வந்தாள் கயல்.

அருண் எழுந்து உட்கார்ந்து போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"முழிச்சிட்டுத்தான் இருக்கீங்களா, யார் போன் அடிச்சா, ஏன் எடுக்கல?"

"முத்துதான் போன் பண்ணான்".....

********

சற்றும் யோசிக்காமல் கயல் முத்துவுக்கு போன் செய்தாள்.

"ஹலோ அருண், நாந்தாண்டா"

"அண்ணே, நான் கயல் பேசுறண்ணே"

"என்னம்மா, என் கூட பேச மாட்டானாமா, கோவமா இருக்கானா?"

"கோவமா, உங்க மேலயா, எப்டின்னே? அதெல்லாம் ஒன்னுமில்ல, இன்னிக்கு ரொம்ப அலைச்சல் இல்லியா, அதான் சாயந்தரமா படுத்தவர் இன்னும் எந்திரிக்கல. செல் சார்ஜ்ல போட்ருந்தார் ஹால்ல, அதான் நான் வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆயிருச்சு"

"சாரிம்மா, என் சூழ் நிலை சிக்கலாய்ருச்சு. அதான் என்னால ஷ்யூரிட்டி போட முடில. அருண் ரொம்ப அப்செட் ஆயிட்டானா?"

"ஆமாண்ணே, ரொம்பவும் அப்செட் ஆயிட்டாரு. ஆனா உங்க மேல துளி கூடக் கோவம் இல்லண்ண அவருக்கு. என்கிட்ட முடியாதுன்னு சொல்ல முடியாம முத்து எவளோ வருத்தப் படுறானோன்னு உங்களை நினைச்சுதான்ன கவலைப்பட்டாரு. மத்தபடி ஷ்யூரிட்டிக்கு இன்னொருத்தர் கிட்ட பேசிட்டிருக்கோம். ஒன்னும் பிரச்னை இல்லண்ணே"

"அப்பாடா, இப்பதாம்மா நிம்மதியாருக்கு, அருண் எப்டி எடுத்துப்பானோன்னு ரொம்ப கவலைப்பட்டேம்மா. ஆக்சுவலா என்னாச்சுன்னா..."

"அண்ணே, அண்ணே, வேணாம்னே, எதுவா இருந்தா என்ன, விடுங்க, பாத்துக்கலாம். நீங்க வருத்தப்படாதீங்க. கொஞ்சம் இருங்க, அவர எழுப்பி போனைத் தரேன்"

"வேணாம்மா, அவன் தூங்கட்டும், எழுப்பாத. நான் நாளைக்கு நேர்ல வந்து பேசிக்கறேன்."

"சரிண்ணே, வச்சிடறேன்"

அருண் கயலையே பாத்துகிட்ருந்தான்.

"எங்கடி கத்துகிட்ட இப்டில்லாம் பேச?"

"ஹூம், இதுக்கெல்லாம் ட்ரெய்னிங்கா தருவாங்க, அப்டியே பேச வேண்டியதுதான். அப்றம் நாளைக்கு முத்தண்ணன் வந்து பேசுனா முகத்தைக் காட்டாம, நான் சொன்ன மாதிரியே பேசணும், புரியுதா?"

"புரியுதுடி. நான் சமாளிச்சுகிறேன்"

நம்பிக்கைக் கீற்றுடன் துவங்கிய ஒரு நாள், சோர்வுடன் முடிந்தது.

*****


இன்னியோட மூணு நாள் ஆச்சு, பேங்க் வரைக்கும் போய் ஷ்யூரிட்டி வராம திரும்பி வந்து. அடுத்த நாள் லேருந்து அருண் வழக்கம் போல வேலை செய்ற பட்டரைக்குப் போய் வெல்டிங் அடிக்க ஆரம்பிச்சுட்டான்.

ஷ்யூரிட்டிக்கு வேற யாரையாவது முயற்சி பண்ணலாம்னு கயலும் அருணும் யோசிச்சு யோசிச்சு ஒருத்தரும் தேறல.

அருண் மட்டும்தான் சோர்ந்து போனானே தவிர, கயல் நம்பிக்கையோடுதான் இருந்தாள். 

"எனக்கு ஏதோ உள் மனசுல தோணிட்டே இருக்கு மாமா, இதுல நாம ஜெயிச்சிருவோம்னு.

அருண் வேலை செய்ற பட்டரை முதலாளிக்கு அவர் கவலை.

"என்னப்பா, எப்ப பட்டரை ஓப்பன் பண்றே. இந்த மாசம் பூரா வேலைக்கு வருவியா, எதுக்குக் கேக்கறேன்னா, எடுத்த வேலையெல்லாம் முடிக்கணும்ல." 

"இந்த மாசக் கடைசி வரைக்கும் வேலைக்கு வருவேண்ணே. பட்டரை வேலைல்லாம் அடுத்த மாசம்தான் ஆரம்பிக்கணும்."

எதிர்பாராத நேரத்தில் போன் ஒலித்தது.

"யாரு, அருண்குமார்தானே?"

"ஆமாம், நீங்க?"

"... பேங்க்லேருந்து பேசுறோம். நீங்க நேர்ல வந்து ஆதார் செக் பண்ணீட்டிங்கன்னா உங்க லோனை ப்ராசஸ் பண்ணிர்லாம். இப்ப வாரீங்களா?"

"மேடம், ஷ்யூரிட்டி போடறதுக்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கல. ஒரு ரெண்டு நாள் ல நானே போன் பண்ணிட்டு வரேன்"

"உங்க ஷ்யூரிட்டிதான் ஏற்கனவே வந்து கெயெழுத்து போட்டுட்டாரே சார். இப்ப உங்க ஆதார் செக் பண்றது மட்டுந்தான் பெண்டிங். உடனே கிளம்பி வாங்க"

"ச...ச...சரி மேடம். இப்பவே வரேன்"

அருணுக்கு குழப்பமாய் இருந்தது. முத்து மனசு மாறி நேரே போய் கையெழுத்து போட்டுட்டானா, அப்டின்னா கூட சொல்லிட்டுதான போயிருப்பான்.

முத்துவுக்கு போன் போட்டான்.

"சொல்லுடா. யார்னா ஷ்யூரிட்டிக்கு ஆள் கெடைச்சாங்களா?"

"இ..இ.இல்லைடா. தேடிட்ருக்கோம்."

"என்ன விஷயமா போன் பண்ணுன?"

"ஒரு சேதியும் இல்லடா. சும்மாதான் பண்ணேன். அப்றமா பேசுறேன்"

வேற யார் லோன் அக்கவுண்ட்னு நெனச்சு தப்பா நமக்கு போன் பண்ணிருப்பாங்களோ. சரி, எதுக்கும் நேர போய் பேங்க்லயே விசாரிப்போம். 

முதலாளியிடம் சொல்லிவிட்டு வங்கிக்குக் கிளம்பினான் அருண்.

*******

வங்கியில் வண்டியைப் பார்க் பண்ணும்போதே வாசலில் கேசவன் நிற்பது தெரிந்தது. இவன் எங்க இங்க வந்தான் என்று யோசித்துக்கொண்டே உள்ளே போனான் அருண்.

"நீ எங்கடா இங்க?"

"அத்தான், மத்ததெல்லாம் அப்றமா சொல்றேன். என் ஃபிரெண்டு யுவராஜ்னு சொல்லிருக்கேன்ல. அவங்க அண்ணன் உங்க லோனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்து போட வந்திருக்கார். மேனேஜர் ரூம்லதான் இருக்கார். வாங்க உள்ள போலாம்"

அருணுக்கு குழப்பமும், ஆச்சர்யமும், சற்றே எரிச்சலும் கூட வந்தது. இந்தப்பொடியன் நமக்கு லோன் ஷ்யூரிட்டி ஏற்பாடு பண்றதான்னு சின்னதா ஒரு பொறாமை மனசுக்குள்ள எட்டிப் பார்த்தது.

"சார், உங்களை மேனேஜர்  வந்து பாக்க சொன்னார்"ன்னு சொல்லிட்டு மேனேஜர் ரூமை சுட்டிக் காட்டினார் வங்கி ஊழியர்.

"வணக்கம் சார், நான் அருண், லோன் விஷயமா வந்திருக்கேன்"

"வாங்க அருண். குமார் சார்தான் உங்களுக்கு ஷ்யூரிட்டி போட்ருக்கார். நம்மளோட மேஜர் கஸ்டமர். உங்க நிலைமை புரிஞ்சு உதவிருக்கார். நல்லபடியா தொழில் பண்ணி சிக்கல் இல்லாம லோனை அடைக்கணும், சரிங்களா"

"நிச்சயமா சார். எந்தப் பிரச்னையும் வராம பாத்துக்கறேன் சார். சரியான நேரத்துக்குள்ள லோன் ட்யூலாம் கட்டிருவேன் சார்" னு மேனேஜர்கிட்ட சொல்லிட்டு, குமாரின் கைகளைப் பிடித்து "உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில சார். என்னை நேர்ல கூடப் பாத்ததில்லை நீங்க.  இப்டி ஒரு உதவி பண்றதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் சார். ரொம்ப நன்றி சார். வாழ் நாள் முழுசும் இந்த உதவியை மறக்க மாட்டேன் சார்" என்றான் உடைந்த குரலுடன்.

"அட, என்னங்க பெரிய வார்த்தைலாம் சொல்லிட்டு.. நல்லா உழைச்சு பெரிய ஆளா வாங்க சார்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தார் குமார்.

வெளியே வந்து ஆதார் ரேகை சரி பார்த்து முடித்தான் அருண்.

"இன்னும் ரெண்டு நாள்ல செக் ரெடியாய்ரும் சார். நானே உங்களுக்கு போன் பண்ணித் தகவல் சொல்றேன்"

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

எதிரில் உள்ள பங்க் கடையில் ஆளுக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு, குமாரை வழியனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள் அருணும், கேசவனும்.

**********


அருண், கயல், கேசவன் மூவரும் இணைந்து உணவருந்தியவாறே உரையாடிக் கொண்டிருந்தனர்.

"லோன் கிடைச்சது சந்தோஷம்தான். ஆனா ஷ்யூரிட்டிக்கு நீ இவ்ளோ முயற்சி பண்ணிருக்க வேணாம்னு தோணுது கேசவா." அருண் ஆதங்கத்தோடு சொன்னான்.

"மாமா, நான் எதுவுமே செய்யலம் யுவராஜ்கிட்ட, உங்களுக்கு லோன் கிடைக்கறதுல பிரச்னை இருக்குன்னு சும்மா சொல்லிட்ருந்தேன். அவன், தானே போய் அவங்க அண்ணன்கிட்ட சொல்லி உதவி கேட்ருக்கான். இன்னிக்குக் காலைல யுவராஜ் போன் பண்ணி சொன்னபிறகுதான் எனக்கே தெரியும். 

அவங்க அண்ணனுக்கு பேங்க் மேனேஜர் பிரெண்டு போல. நேர பேங்குக்கு போயிட்டு மேனேஜர் கிட்ட பேசிட்டு ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டுட்டாரு. யுவராஜ் எனக்கு போன் பண்ணி பேங்குக்குப் போடான்னு சொன்னதாலதான் நான் அங்க வந்தேன் மாமா"

"உண்மைலயே ஆச்சரியமா இருக்குடா. ப்ரெண்ட்ஷிப்க்கு இவ்ளோ ஸ்ட்ரெங்க்த் இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு எனக்கு" என்றான் அருண்.

"நாந்தான் சொன்னேனே மாமா, ஏதாவது ஒரு வகைல நமக்கு உதவி கெடைக்கும்னு".

தன் பங்குக்கு கயலும் மகிழ்ச்சியைப் பகிர்கிறாள்.

"யுவராஜ் கேசவனுக்கு ஃப்ரெண்டு. எனக்கு முத்து ஃப்ரெண்டு" சொல்லிவிட்டு விரக்தியில் சிரித்தான் அருண்.

"என்ன மாமா, இன்னமும் அதையே பேசிட்ருக்க. அந்த பேச்சை விட மாட்டியா" என்றாள் கயல். 

"எப்டிடி விட முடியும். அது சரி, நீ என்ன சொல்ல வர்றே? முத்து தப்பே பண்லைன்றியா? ஏதோ ஒரு காரணம், அவன் பொண்டாட்டியோ, அப்பா அம்மாவோ யாரோ ஒருத்தர் தடுத்தாங்கன்னு கூட வச்சுக்குவோம். ஆனா என்னை பேங்க் வாசல்ல காக்க வச்சிட்டு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டுப் போனானே, எனக்குக் காலத்துக்கும் மறக்க முடியுமா அந்த வலியும் அவமானமும்?"

"ஒன்னை யாரு மறக்க சொன்னா? ஆனா அதையே நினைச்சு நினைச்சு தொணப்பிட்ருக்காத. இப்ப லோன் கிடைச்சிருச்சு. அடுத்து ஆக வேண்டியதுல கவனத்தை செலுத்து. முத்தண்ணன் பண்ணது துரோகம்னே இருந்தாலும், நீ ஜெயிக்கறதுதான் அதுக்கு கொடுக்கற பதிலடியா இருக்கணும். இன்னிக்கு ஒருத்தர் வந்து, நீ யாரு, எப்படி இருப்ப, நேர்மையான ஆளா, ஃப்ராடான்னு எதுவுமே தெரியாம, தம்பியோட ஃப்ரெண்டுங்கற ஒரு காரணத்துக்காகவே கையெழுத்து போட்டார்ல, அதை மறக்காம நினைச்சு நினைச்சுப் பாரு. எதிர்காலத்துல நாம வளந்தோன்ன, அப்டி யாராவது ஒருத்தரையாச்சும் தூக்கி விடணும்னு வாழ்க்கைல நினைச்சுக்கோ. அவ்ளோதான் நான் சொல்லுவேன். இந்த துரோக டாபிக்கை இதோட விடு. ஓகேவா" முத்தாய்ப்பாய் முடித்தாள் கயல், கதையோட சேர்த்து.

முற்றும்.

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..