அப்பா, வாக்கிங் போறேன், நீயும் வாயேன்.
35 வயது மகன் 70 வயது அப்பாவை அழைக்கிறான்.
நீ போய்ட்டு வாப்பா, நான் சாயந்தரத்துல போய்க்கறேன்.
தனியா வாக்கிங் போக போரடிக்குதுன்னுதானே கூப்டுறேன், வாயேம்பா.
தந்தையும் மகனுமாக பார்க்கில் அரை மணி நேரம் சுற்றி வந்தார்கள்.
செத்த நேரம் உக்காராலாமா தம்பின்னு சொல்லிட்டு மகனின் ஒப்புதலுக்காய்ப் பார்த்தார் கருப்பையா.
சரிப்பான்னுட்டு பெஞ்ச்சுல சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தனர் அப்பனும் பிள்ளையுமாய்.
அம்மாவை ரொம்ப மிஸ் பண்றியாப்பா?
ஆமாம் தம்பி, இன்னும் கொஞ்ச நாள் அவ நம்மோட இருந்திருக்கலாம். சீக்கிரமா போயிட்டாப்பா.
ஆமாம்பா, அம்மா ரொம்ப சீக்கிரம் நம்மள விட்டுப் போயிருச்சு, ஆனா அம்மாவை நீ வருத்தப்பட விட்டதே இல்லையேப்பா - அப்பனுக்கு ஆறுதல் சொன்னான் மகன்.
கடைசி நேரத்துல மனசு விட்டுப்பேச ஒரு சந்தர்ப்பம் கொடுக்காம கொண்டு போய்ட்டானே. ஒரு பத்து நிமிசம் நெகா வந்திருந்தா சொல்லணும்னு நிறைய வச்சிருந்தேன். ஆனா மூணு நாள் நெகா இல்லாம இருந்து அப்டியே போயிட்டா மகராசி.
கண்களில் கண்ணீர் முட்டுக் கட்டியது இருவருக்கும்.
*****
பகல் பொழுது பரபரப்பாக ஓடிருச்சு. புள்ளைங்கள ஸ்கூல்ல கொண்டு விடுறதுல ஆரம்பிச்சு, ஆபீஸ், மீட்டிங் அது இதுன்னு நிக்க நேரமில்லாம போனதுல அப்பாட்ட காலைல பேசிட்டிருந்தது ஞாபகத்துக்கே வரல. ராத்திரி சாப்பிடும்போது அப்பாவைப் பாத்ததும்தான் அதைப் பத்தின சிந்தனை மீண்டும் வருது.
ராத்திரி 10 மணிக்கு வீடே அடங்குனப்புறம் அப்பாவோட அறைக்குப் போனான் முருகன்.
யப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்.
என்ன தம்பி, என்ன பேசணும்.
அம்மாகிட்ட என்னவோ பேச முடியாம போயிருச்சுன்னல்ல, எங்கிட்ட சொல்லேன். உனக்கும் ஆறுதலா இருக்கும்ல.
எதிர்புறம் கனத்த மெளனம்.
கட்டிலில் படுத்திருந்த கருப்பையா எழுந்து உட்கார்ந்தார், ஆழ்ந்த சிந்தனை.
சாரிப்பா, உனக்கு சொல்ல வேணாம்னு தோணுச்சுன்னா விட்ருப்பா, ஏதோ கேக்கணும்னு தோணுச்சு, அதான் கேட்டேன்.
அப்டில்லாம் ஒண்ணுமில்லப்பா, எம்புள்ளட்ட பேச எனக்கென்ன தயக்கம், எங்கருந்து ஆரம்பிக்கறதுன்னு யோசிக்கிறேன்.
கட்டிலிலிருந்து எழுந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தார், பிள்ளைக்கு முதுகைக் காட்டியவாறே.
லைட்டை ஆஃப் பண்ணிருப்பா.
இருட்டு மனசைத் திறப்பதற்கு வசதியான சூழல் போல.
***"""""
வேலைக்குப் போகாதவன், சுய சம்பாத்தியத்துக்கு வழியில்லாதவன்லாம் கல்யாணம் பண்ணிக்க கூடாதுப்பா.
கட்டுன பொண்டாட்டிக்கு சோத்துக்கும் துணிமணிக்கும் செலவு பண்ண வழியில்லாதவனுக்கு எதுக்கு கல்யாணம்?
என்னடா சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுறனேன்னு பாக்குறியா தம்பி?
அதெல்லாம் இல்லப்பா, நீ சொல்லு.
நான் எட்டாப்பு படிக்கிறப்பயே, எங்கப்பா, அதான் உங்க தாத்தா இறந்துட்டாங்க. வீடு நிர்வாகம்லாம் அம்மாதான் அப்றமா.
நீ எதுக்குடா வேலைக்கெல்லாம் போகணும், நம்ம நிலத்துல விவசாயம் பாத்தா போதாதான்னு சொல்லிருச்சு எங்கம்மா.
எனக்கும் அது வசதியா இருந்துச்சு. விவசாயம், பசங்க கூட ஊர் சுத்துறது, சினிமா ட்ராமான்னு ஜாலியா பொழுதைக் கழிச்சேன். உங்கம்மாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போ எனக்கு வேலை எதுவும் இல்லை. ஒரே புள்ள, குடும்ப சொத்து வயல் வாய்க்கால் இருக்குன்னு பொண்ணு குடுத்துட்டாங்க. எனக்கும் உங்க அம்மாவுக்கும் அவ்வளவு மனப் பொருத்தம்.
பிரச்னை என்னன்னா, உங்கம்மா யார்கிட்டயும் பணிஞ்சு அடங்கிப் பேசமாட்டா, அது அவ குணம். எங்கம்மாவுக்கு அது புடிக்கல. அவ தங்கிட்ட அடங்கி நடக்கணும், எல்லாம் தன்னைக் கேட்டே செய்யணும்னு எங்கம்மா நினைச்சது நடக்கல. அது மட்டுமல்ல, சொல்லுக்கு சொல் எதிர்த்துப் பேசிருவா. அவ்ளோதான், மருமகள் எதிரியாய்ட்டா.
மருமகளைப் புடிக்காம போன உடனே, மகனும் எதிரியாயிட்டான்.
சிக்கல் எங்க ஆரம்பிச்சுதுன்னா, இருக்கற சொத்து பூராம், அம்மா வழி சொத்து, அம்மா பேர்லதான் நிலம் நீச்சு எல்லாமே.
பண நிர்வாகம் பூரா அம்மா கைலயே இருந்ததுனால, நாங்க ரெண்டு பேரும் அம்மா கிட்ட கையேந்த வேண்டிய நிலை.
சொன்னா வெக்கக்கேடு. எனக்கு சோப்பு துணிமணிக்குக் கூட காசு தரல எங்கம்மா. எனக்கே இந்த கதின்னா, என் பொண்டாட்டிக்கு?
அவ பாதி நாள் பட்டினிதான். சமையல் கட்டு பக்கமே நானும் அவளும் போகக்கூடாது.
நீங்க எதுனா வேலைக்குப் போலாம்லன்னாஉங்கம்மா ஒரு நாள்.
எனக்கோ வயசு கிட்டத்தட்ட 30 ஆய்ருச்சு. அதுக்கப்புறம் என்ன வேலைக்குப் போறது, எங்க போய் தேடுறது, ஒன்னுமே புரியல எனக்கு.
கிட்டத்தட்ட நரக வாழ்க்கை.
அப்போதான் ஒரு நாள்...
******
அப்போதான் ஒரு நாள் உங்கம்மா, "என்னிக்கு நீங்க சுயமா நாலு காசு சம்பாதிச்சு எனக்கு கஞ்சியோ கூழோ ஊத்துற நிலைமைக்கு வாரிங்களோ, அன்னிக்கு நான் வந்து உங்களோட குடுத்தனம் பண்றேன்"னு சொல்லிட்டு அவங்க அம்மா வீட்டுக்குக் கெளம்பிப் போயிட்டா.
எங்கம்மாவுக்கு கொண்டாட்டமாப் போச்சு. பெத்த புள்ள பொண்டாட்டி கூடக் குடுத்தனம் பண்ணாம தனியா நிக்குறானேன்னு வருத்தம்லாம் இல்ல.
என்கிட்டயே வந்து, அவளைப் பத்தி நெதைக்கும் பொரணி பேசும். அவ குடும்பத்துக்கு ஆகாதவ, திமிரு புடிச்சவ, அவளால குடும்பம் வெளங்காது, அது இதுன்னு ஓதிகிட்டே இருக்கும். அம்மாவை எதுத்துப் பேசியே பழக்கமில்லாத எனக்கு அப்போவும் எதுக்க தைர்யமில்ல.
இப்டியே நாலைஞ்சு மாசம் ஓடுச்சு. திடீர்னு எங்கம்மா எனக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சுது.
மொதமொதல்ல அம்மாவை எதுத்துப் பேசுனேன்.
வேற கல்யாணம்லாம் ஒத்துவராது. இந்த சென்மத்துல அவதான் எனக்கு. கடைசி வரைக்கும் அவ அம்மா வீட்லயே இருந்தாலும் பரவால்ல. இன்னொரு கல்யாணம் நடக்காதுன்னு அடிச்சுப் பேசிட்டேன்.
அம்மா ஒன்னும் பேசுல. அமைதியா பாத்துகிட்டே இருந்துச்சு. என்னிக்கும் பேசாதவன் இன்னிக்கு எதுத்துப் பேசுறதை அம்மாவால தாங்கிக்க முடியல.
அடுத்து அம்மா என்ன செஞ்சதுன்னா....
*******
அடுத்து அம்மா என்ன செஞ்சதுன்னா, கதவை சாத்திகிட்டு உடம்பு பூரா மண்ணெண்ணைய ஊத்திகிட்டு கொளுத்திக்கப் போறேன்னு கத்துது. எனக்குப் பதறுது. இந்தப்பக்கம் நின்னு கதறுறேன். வேணாம்மா வேணாம்மான்னு கதவைத் தட்டுறேன். அக்கம்பக்கத்துல உள்ளவங்க வந்து கதவை உடைக்கறதுக்குள்ள அம்மா தீக்குச்சியைப் பத்த வைச்சிருச்சு. சாக்கு பெட்ஷீட்னு கெடச்சதை எல்லாம் எடுத்து அம்மா மேல போட்டு தீயை அணைச்சாலும், அம்மாவுக்கு தீக்காயம் உடம்பு பூராவும். தூக்கிட்டு ஓடுணோம் தர்மாஸ்பத்திரிக்கு.
பத்து நாள் வரைக்கும் பொழைக்க வாய்ப்பில்லன்னுதான் டாக்டர்லாம் சொன்னாங்க. அம்மா துடியாய் துடிச்சுது ஒவ்வொரு நொடியும். அம்மாவோட ஓலம் ஆசுபத்திரி பூரா கேக்கும், ராவும் பகலும்.
எனக்கு மனசு விட்டுப் போச்சு. என்னடா வாழ்க்கைனு தோண ஆரம்பிச்சிருச்சு.
ஆசுபத்திரிக்கு உங்க தாத்தா, அதான் என் மாமனாரு பாக்க வந்தாரு. நாந்தான் அம்மாவப் பாக்க வேணாம்னு திருப்பி அனுப்சிட்டேன்.
ஒன்னு தெளிவா புரிஞ்சு போச்சு எனக்கு அப்போ. அம்மாவைத் தாண்டி எதுவுமில்ல. இந்த உசிரும் ஒடம்பும் வாழ்க்கையும் அம்மா கொடுத்தது. ஆனா அம்மாவுக்கு என் பொண்டாட்டிய ஏத்துக்க முடில. வேற வழியில்ல, அம்மா வழியில போறது ஒன்னுதான் வழி. இல்லை, செத்துத் தொலையணும், அதுக்கு தைரியம் வர்ல.
உடம்பு கொஞ்சம் தேறுனதும் அம்மா மறுடியும் கல்யாணப் பேச்சை எடுத்துது. நான் இந்த முறை மறுத்துப் பேசல. பேசுனா என்னாகும்னு பாத்தாச்சு.
மாயரத்துக்குப் பக்கத்துல ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு, போய் பாத்துட்டு வர்லாம்னு அம்மா கூப்டுகிட்டே இருந்தது. நான் மறுத்துப் பேசலையே தவிர, பிடி குடுத்துப் பேசாம நழுவிகிட்டே இருந்தேன்.
ஒரு கட்டத்துல அம்மா சொல்படி கேப்போம்னு முடிவு பண்ணிட்டேன். அந்த வயசுல என்னால அவ்ளோதான் யோசிக்க முடிஞ்சது.
பொண்ணு பாக்கறதுக்கு நாள் முடிவு பண்ணிட்டோம்.
அன்னிக்குக் காலைல பத்து மணி இருக்கும். நானும் அம்மாவும் இன்னும் ரெண்டுமூனு சொந்தகாரங்களும் கெளம்பிகிட்டிருக்கோம்.
அப்போ அதிரடியா தனியா வந்து நின்னா ஒங்கம்மா..
*******
ஒரு சூறாவளி மாதிரி இருந்துச்சு அன்னிக்கு ஒங்கம்மா வந்து ஆடுன ஆட்டம்.
என்ன, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? ஒரு பொண்டாட்டிக்கு சோறு போடவே வக்கில்ல, இதுல இரண்டாவது கேக்குதா உனக்கு?ன்னு கேட்டுகிட்டே நான் போட்டுகிட்டிருந்த சட்டையைப் புடிச்சுக் கிழிச்சி எறிஞ்சா.
என்னா கெழவி, நான் என்னா உன் புள்ளய லவ் பண்ணிக் கட்டிகிட்டனா? நீதான பாத்து கட்டிவச்ச? சீமெண்ணய ஊத்திகிட்டு கொளுத்திகிட்டியாமே, அப்டி நான் என்ன குடும்பத்துக்கு ஆகாதவளா, முறைதவறிப் போயிட்டேனா, என்ன தப்பு பண்ணேன் சொல்லு. உங்கால்ல உழுந்து கெடக்கல, அதான, அதுக்கு இவ்ளோ ஆங்காரமா உசுரை உடற அளவுக்கு? உம்புள்ள வாழ்க்கையை நீயே கெடுக்கறியே.
இப்ப சொல்றேன் உங்க ரெண்டு பேருக்கும், ஆத்தாளும் புள்ளயும் கேட்டுக்குங்க. இந்த இன்னொரு கல்யாணம்கறது இத்தோட உட்ருங்க. மீறி எதுனா பண்ணீங்க, நானே ராத்திர்ல சீமெண்ணைய ஊத்தி ரெண்டு பேத்தையும் கொளுத்தி வுட்ருவேன்.
அம்மாவும் கொஞ்சம் எகிறுச்சு.
என்னடி, வாய் நீளுது. டேசன்ல கம்ப்ளேண்ட் குடுத்து உள்ள தள்ளிருவேன் பாத்துக்க.
என்னது, உள்ள தள்ளிருவியா? ஏற்கனவே காலைல நேரா போய் திருடமூரு டேசன்ல கம்ப்ளைண்டு குடுத்துட்டுதான் இங்க வந்துருக்கேன், தெரியுமா? ஆண்டு அனுபவிச்சு வாழ்ந்து முடிச்ச உனக்கே இவ்ளோ ஆங்காரம் இருக்கும்னா, இன்னம் வாழவே ஆரம்பிக்காத எனக்கு இருக்காதா. இனி ஒன்னிய ரெண்டுல ஒன்னு பாத்துர்ற முடிவுலதான் வந்துருக்கேன். கூட வர்றேன்னு சொன்ன எங்கப்பாரை கூட வர வேணாம்னு சொல்லிட்டு ஒண்டியாத்தான் வந்திருக்கேன்.
இத பார், இனிமே உன் பப்பு எங்கிட்ட வேவாது. எப்ப நீ உசிரை விட்டாவது என் வாழ்க்கையை அழிக்கத் துணிஞ்சுட்டியோ, இனி எப்பாடு பட்டாவது நான் வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன், அதுவும் உன் கண்ணு முன்னாடியே.
நான் உங்கம்மாவோட இந்தப் பேயாட்டத்தைப் பாத்து பயந்து போய் நின்னுகிட்ருக்கேன், எங்க அம்மாவுக்கும் காலெல்லாம் வெடவெடன்னு ஆடுது.
என்னைப் பாத்து பேச ஆரம்பிச்சா உங்கம்மா
*******
இங்க பாரு, இனி மேலாவது நம்ப வாழ்க்கையை எப்டி வாழ்றதுன்னு நாமளே முடிவு பண்ணுவோம். யார்ட்டயும் கையேந்திகிட்டோ, பயந்தோ வாழ வேண்டாம். கஞ்சியோ கூழோ நம்ம ரெண்டு பேரும் உழைச்சு சாப்டுவோம். குடிசையோ ஒண்டுக் குடுத்தனமோ நம்ம காசுல வீடு பாத்து குடுத்தனம் பண்ணுவோம்.
எதுக்கு ஒங்கம்மாவைத் திரும்பிப் பாக்குற? நீ எக்கேடு கெட்டாலும் பரவால்லை, சாவுற வரைக்கும், "அய்யோ, எங்கம்மாவை சாவ வுட்டுட்டனே" ன்னு மனசைக் குத்திகிட்டு கெடந்தாலும் பரவால்ல, நாம கொளுத்திகிட்டு செத்து, நம்ம ஆங்காரத்தைக் காட்டுவோம்னு நெனச்ச ஆத்தாளை இன்னும் எத்தினி நாள்தான் பாத்துக்கிட்டிருப்ப. எல்லாரும் ஒரு நாள் சாவத்தான் போறோம், உங்காத்தாவையும் சேத்துத்தான் சொல்றேன். இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது. கெளம்பு, எங்கூடக் கெளம்பி வா. ஒன்னும் வேணாம், கட்டிருக்குற துணியோட வா.
அவ சொன்னது ஒவ்வொண்ணும் என்னை அவ்ளோ பாதிச்சது. இவ்ளோ நாள் மனப்போராட்டத்துக்கும் முடிவு வந்தமாதிரி தெளிவு வந்துச்சு.
ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளிய வந்தோம்.
வெளில நின்னுகிட்டு, எங்கம்மாவைப் பாத்து சொன்னா,
இதே ஊர்லதான் உழைச்சு வாழப்போறோம். இனி இந்த வீட்டுக்கும் எங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இல்லை.
உன் சொத்துல நயாபைசா எங்களுக்கு வேணாம். நீ யாருக்கு வேணா எழுதி வை. நாங்க வேணும்னா பத்திரம் எழுதிக் கையெழுத்து போட்டுத் தர்றோம். ஆனா உன்னால எங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்கக் கூடாது. சீக்கு, நோவுன்னு வந்து கெடந்தீன்னா நாங்க வந்து பாத்துகிறோம், உன்னியக் கை விட்டுற மாட்டோம். புரிஞ்சுதா.
எங்க போறோம்னு தெரியல, ஆனா விடுவிடுன்னு நடந்து கெளம்பிட்டோம்.
*******
அன்னைக்கு நடுரோட்ல ஆரம்பிச்சுது எங்க வாழ்க்கை. ராத்திரி அம்மன் கோயில் வாசல்ல படுத்துக் கெடந்தோம். அப்றம் ஒரு ஒண்டுக்குடுத்தனத்துல வாடகைக்கு. ஆடுதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு வெளில தள்ளுவண்டி வச்சு கையேந்தி பவன் ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல பெருசா ஓடலை. ஆனா உங்கம்மா விடாம செய்யணும்னு சொல்லி கரெக்டா 7 மணிக்கெல்லாம் போய் தொடர்ந்து கடையைப் போட்டோம். அப்றம் யாவாரம் சூடு புடிச்சு, கும்மோணம், மாயாரம் போறவங்க எல்லாம் வாங்கி சாப்ட ஆரம்பிச்சாங்க. நடுவுல தீவாளி சீட்டு புடிச்சோம். இது அதுதான்னு இல்ல, எதெல்லாம் நம்மால முடியுமோ, நேர்மையா உழைச்சா பலன் இருக்கும்னு உங்கம்மா எனக்குப் புரிய வச்சா.
மூணு வருசம் கழிச்சுத்தான் நீ பொறந்த. ஒரு புள்ள போதும்னு ஆஸ்பத்திரிலயே குடும்பக் கட்டுப்பாடு பண்ணிகிட்டா உங்கம்மா.
நடுவுல உன் பாட்டி அப்பப்போ எதுனா சீண்டும். இவ போய் வாசல்ல நின்னு சத்தம் போட்டுட்டு வருவா. ஊர்ல எங்களுக்கும் மரியாதை வந்துச்சு. பாக்குறவன்லாம், சினேகமா சிரிக்கறதும், நல்லது கெட்டதுக்கு கூப்டுறதுமுன்னு நாங்களும் மரியாதையா வாழ ஆரம்பிச்சோம். நீ அஞ்சாம்பு படிக்கும்போதுதான் நம்ம கிராமத்து வீட்டைக் கட்டுனோம். வீடு கட்டுன அடுத்த வருசம் பாட்டிக்கு உடம்பு முடியாம போய்ருச்சு. நான் போய் நம்ம வீட்டுக்குக் கூப்டேன். எங்கம்மாவுக்கு வர விருப்பமில்ல. அப்றம் இவ படியேறிப் போய் அம்மாகிட்ட தன்மையா பேசுனா.
என்னால இங்க வந்து உங்களைப் பாத்துக்க முடியாது. இப்ப ஓட்டலையும் கவனிக்கணும், புள்ளையையும் கவனிக்கணும். எங்களோட வந்து இருங்க. ஒரு சுடுசொல் சொல்லமாட்டேன். ஆயிரம் இருந்தாலும், அது உங்க புள்ளையோட வீடு. உங்ககுக்கில்லாத உரிமையான்னு பக்குவமா பேசுனோன்ன அம்மா ஒத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துச்சு. கடைசி பத்து நாள் பிரக்னை இல்லை, துணியோட மணியோட போக ஆரம்பிச்சுது. உங்கம்மாதான் எல்லாத்தையும் கவனிச்சுகிட்டா. அம்மா கண்ணிலேருந்து தண்ணி தண்ணியா வடியும். அது அழுததா கூட இருக்கலாம், யாரு கண்டா.
அம்மா செத்ததுக்கு அப்றம் அந்த வீடு நிலம் எல்லாத்தையும் கோயிலுக்கு எழுதிக் கொடுக்க சொல்லிட்டா உங்கம்மா, பேங்க்ல அம்மா அக்கவுண்ட்ல இருந்த பணம், அம்மாவோட நகை எல்லாத்தையும் சேத்து.
எப்பேர்ப்பட்ட தேவதை கூட வாழ்ந்திருக்கேன் தெரியுமா என்றவாறு ரெண்டு கையையும் உயர்த்தி கும்பிட்டது அந்த இருட்லயும் எனக்குத் தெரிஞ்சுது.
நேரமாயிருச்சு தம்பி, நீ போய் தூங்கு, நாளைக்குப் பகல்ல ஓடியாடணும்ல.
இல்லப்பா, நாளைக்கு ஆஃபீஸ் லீவுதான். அது சரிப்பா, அன்னிக்கு நீ பொண்ணு பாக்க கெளம்புறப்போ, அம்மா திடீர்னு வந்துச்சுன்னு சொன்னல்ல, அம்மாவுக்கு எப்டித் தெரியும் நீ பொண்ணு பாக்கப் போறது.
யாரோ மொட்டைக் கடுதாசி போட்ருக்காங்க போல தம்பி, இல்லைன்னா எப்டி அப்டி கரெக்டா வருவா?
சரிப்பா, இப்ப நீ சொன்னது பூரா அம்மாவுக்கும் தெரியும், அப்றம் எதை சொல்ல முடிலன்னு வருத்தப்பட்ட?
குறிப்பிட்ட எதுவும் பேணும்னு இல்ல, இந்த பஞ்சாயத்தைப் பத்தி அதுக்கப்புறம் நாங்க பேசிகிட்டதே இல்லை. அதான் ஒரு தரம் பேசியிருந்தா ஆறுதலா இருந்திருக்கும்னு...
ஏம்ப்பா பொய் சொல்ற?
பொய்யா?
ஆமாப்பா, அந்த மொட்டைக் கடுதாசியைப் போட்டது நீதான்னு அம்மாகிட்ட சொல்லணும்னுதான நெனைச்சிருந்த?
அப்பா எழுந்து லைட்டைப் போட்டார். கிட்டக்க வந்து கையைப் புடிச்சிகிட்டு, "எப்டி தம்பி சொல்ற ?"
அம்மாதாம்ப்பா சொல்லுச்சு, நீ சொன்ன அத்தனையையும் சொல்லுச்சு, அதோட அந்த மொட்டைக் கடுதாசி மேட்டரையும்.
அந்த மொட்டைக் கடுதாசியைப் பாத்த ஒடனேயே எனக்குத் தெரிஞ்சு போச்சு இது உங்கப்பாவோட வேலைதான்னு. எங்க வீட்டு அட்ரஸ் அந்த ஊர்ல ஒர்த்தனுக்கும் தெரியாது, உங்கப்பாரைத் தவிர.
ஒத்தைப் புள்ளையா பொறந்து ஆத்தாளோட ஆட்டத்தை சமாளிக்க வழியில்லாம உங்கப்பா தவிச்சது எனக்குப் புரிஞ்சுது. அதே சமயம், அவரு எம்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அப்டி கடுதாசி போட்டுருப்பாரு. அந்த நம்பிக்கை தந்த வேகம்தான் அன்னிக்கு நான் வந்து சண்டை போட்டது, அதுக்கப்புறம் வாழ்ந்தது எல்லாத்துக்கும் காரணம்.
உங்கப்பா இன்னிவரைக்கும் அந்த மொட்டைக் கடுதாசி போட்டது தாந்தான்னு என்கிட்ட சொல்லல, நானும் எனக்குத் தெரிஞ்ச மேரி காட்டிக்கலை.
இதைப் பத்திப் பேசாட்டி என்ன கொறைஞ்சு போச்சு, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழ்ந்து வாழ்க்கைல ஜெயிச்சிட்டோம்ல, அது போதாதா?
மகன் சொல்லிட்ருக்கும்போதே அப்பா போய் கட்டில்ல படுத்துட்டாரு. அவன் சொன்னதுக்கு பதில் எதுவும் சொல்லல. கொஞ்ச நேரம் கழிச்சு அவன் லைட்டை ஆஃப் பண்ணிட்டு எழுந்து வெளில வந்துட்டான். அவர் மானசீகமா தன் மனைவியோட பேசிட்டிருக்கலாம், தான் சொல்லத் தவறிய, ஆனால் அவள் ஏற்கனவே அறிந்திருந்த கதையை....
முற்றும்
நல்ல சிந்தனை. நல்ல கதை நடை.
ReplyDeleteநன்றி! 🙏
Deleteஅருமை, அருமை இளங்கோ!
ReplyDeleteநன்றி ராஜா! 👍
DeleteArumaiyana story Elango
ReplyDeleteநன்றி! 🙏
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி!
Deletearumai
ReplyDeleteநன்றி
Deleteமனசு கனத்து விட்டது. ரவிசந்திரன், க்ளாப்ஸ்
ReplyDeleteநன்றி சார்.
Deleteஅருமை. இத்தனை நாள் இந்த எழுத்தாளர் எங்கு இருந்தார்?
Deleteதொடரட்டும் ...
வாழ்க!வளர்க!
நன்றி!
Delete