ஆறாம்ப்புலயோ,
ஏழாம்ப்புலயோ படிச்சது இந்தப் பாட்டு. மனப்பாடப்பகுதியில இருந்திருக்கலாம். அப்படி
இல்லாட்டியும் கூட மனசில தங்கிபோன பாட்டு. எத்தனை வருஷம் ஆனாலும் குளிர் காலம்
வந்தா, அதுவும் ராத்திரியில இந்தப் பாட்டு நிச்சயம் நினைவுக்கு வரும்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.....
என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்.
அப்படியே காட்சியைக் கண் முன்னே கொண்டு வரும் லாவகம்.
‘படுக்கப் பாயில்லை,
போர்த்திக்கொள்ள போர்வையில்லை, நிறையக் குளிர்கிறது. என்னால் தூங்க்க் கூட
இயலவில்லை. ஏதோ உயிரோட இருக்கேன்’ என்று புலம்ப வேண்டிய ஒரு நிகழ்வை,
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
என்று அந்த சூழலை ஒரு கணத்தில்
விவரித்து உணர்த்தும் பாங்கு.
யாராவது குளிரில் உடலைக்
குறுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், இந்த வரிகளின் தத்ரூபம் எனக்கு மறுபடியும் உணர்த்தப்படும்.
இந்த வரிகளின் பொருளை நான் எப்படி ரசிக்கிறேன் என்று விவரித்தால், பொருள் சொல்வது போல் ஆகிவிடுமோ
என்வெண்ணி, சொல்லாமல் விடுகிறேன். அவ்வளவு எளிமையான, கவிதைநயம் மிகுந்த சொற்கள்.
அதே போல, தன் வீட்டை வர்ணிக்கும் போது..ஆஹா..எவ்வளவு யதார்த்தம்..
பாடு பார்த்திருக்கு மென் மனைவி..கணவனின்றி, வாழ்விற்கு, உணவுக்கு சிரமப்படும் பெண் எப்படி தன் உழைப்பை நம்பி நிற்பாளோ, அந்தக் காட்சி கண்முன்னர் விரிகிறது..
நனைசுவர்க்கூரை, கணைகுரற்பல்லி..சூழல் எவ்வளவு இறுக்கமாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு என்று
கணவன் கற்பனை செய்யும் காட்சி..அற்புதம்..
இதில் சொல்லப்பட்டிருக்கும்
வரிகள், அதன் பொருளைவிட சொல்லாமல் விடப்பட்டிருக்கும் அர்த்தங்கள் என்னை மிகவும்
பாதித்தவை. வாழ்வில் அனுபவம் பெறப்பெற, நிறைய அர்த்தங்கள் புரிந்தன.
மனைவியின் மேல் கொண்ட அன்பு,
எந்த நிலையிலும் இல்லாளுக்கு தகவல் தர வேண்டும் என்ற உணர்வு, குடும்பத்திற்காக
எவ்வளவு வசதிக்குறைவையும் தாங்கும் குணம்..
யாரிடம் உதவி கேட்கிறோமோ,
அவர்களின் சிறப்பை முதலில் சொல்லி, பிறகு நம் உதவியைக் கேட்பது (நாரையைப் புகழ்வது...) Diplomacy ?
உதவி கேட்கும் போது உங்கள்
வேலையை முடித்துவிட்டு, பிறகு உங்களால் முடிந்தபோது செய்யுங்கள் என்று சொல்லும்
பாங்கு (தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்)....
ஏழ்மையிலும்,
சிரமத்தினிடையிலும், வாழ்வை நோக்கும் விதம். அந்த நேரத்திலேயும் ரசிக்கும் பாங்கு. ரசிப்பவனால் மட்டுமே கவிதை
எழுதவியலும், இல்லையா?
இன்னும் நிறைய.. யோசிக்க
யோசிக்க வரும்..
வாழ்க சத்திமுற்றத்துப்
புலவரின் புகழ் எந்நாளும் !
அருமை, அருமை. காலங்கள் பல ஓடினாலும், உன் கவிதை திறனும், உனக்குள் இருக்கும் கவிஙனும் இன்னும் மாறவில்லை. நன்றி நண்பா! தொடரட்டும் உன் எழுத்துப்பணி....
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பனே..
ReplyDelete