Wednesday, October 24, 2012

குக்கரில் அரிசி எப்படி வேகிறது?


ப்ரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை தற்காலத்தில். எல்லா வீடுகளிலும், வெவ்வேறு அளவுகளில் இரண்டு மூன்று குக்கர்கள் உள்ளன. குக்கரை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை எல்லோரும் அறிவோம். இருந்தாலும், அரிசி எப்படி மிக்ச் சீக்கிரம் குக்கரில் வேகிறது என்று விளக்கும் ஒரு முயற்சிதான் இது.

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்தால்தான் கார் ஓட்ட வேண்டுமா என்று கேட்கும் வகையை நீங்கள் சேர்ந்தவரென்றால் இதைப் படிக்க வேண்டிய அவசியமில்லை.

வளிமண்டல அழுத்தத்தில் (அதாவது சாதாரண சூழலில்) தண்ணீர் 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் கொதித்து ஆவியாகிவிடும் தன்மை கொண்டது. அதாவது தண்ணீர் அதன் நிலையில் 100 டிகிரி வரையில்தான் இருக்க முடியும். அதற்கு மேல் சூடேற்றினால் ஆவியாகிவிடும்.

நாம் அரிசியை பாரம்பரியமான முறையில், அதாவது திறந்த பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து பின்னர் அரிசியைப் போட்டு வேக வைத்து வடிப்போமே, அந்த முறையில் அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பம் மட்டுமே நம்மால் அரிசிக்குத் தர இயலும். அதறகு மேலே தரப்படும் வெப்பம் விரயமாகும், நீரை ஆவியாக்கிவிட்டு.
அதே போல, 100 டிகிரி வெப்பம் கொடுத்தால் அரிசி ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் வேக முடியும். இந்தக் கால அளவை துரிதப் படுத்த வேண்டுமானால், நீரை 100 டிகிரியை விட அதிகமாகக் கொதிக்க வைக்க வேண்டும். அது அந்த் வெப்பத்திலும் நீராகவே இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அரிசி இன்னும் சீக்கிரம் வேக இயலும்.
உதாரணமாக 100 டிகிரி வெப்பம் உள்ள நீரில் அரிசி 30 நிமிட்த்தில் வேகிறது என்றால், 120 டிகிரி வெப்பம் உள்ள நீரில் 15 நிமிடத்தில் வேக முடியும். இது ஒரு உதாரணமே தவிர, கணக்குக்கு உட்ப்டுத்தப்பட்ட குறியீடு இல்லை.

தண்ணீரின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க அதன் கொதிநிலையும் அதிகரிக்கும் என்பது இயல்பு. இதை அடிப்படையாக வைத்துத்தான், தற்கால பிரஷர் குக்கர்கள் வடிவமைக்கப் படுகின்றன.
குக்கரில் நேரிடையாக பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறோம் அல்லவா? அதற்கு அப்புறம், இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரும் அரிசியும் வைக்கிறோம். சில நேரம் நேரடியாக குக்கரிலேயே  அரிசியையும் தண்ணீரையும் சேர்த்துப் போடுவதும் உண்டு (தனியாக உள்ளே பாத்திரம் எதுவும் வைக்காமல்). முதலில் அடுப்பைத் தூண்டி, குக்கர் பாத்திரம் சூடாக ஆரம்பிக்கும் போது, குக்கர் உள்புறம் வளிமண்டல அழுத்தத்தில்தான் இருக்கும். அதனால் 100 டிகிரி வெப்பம் அடைந்தவுடன் குக்கரில் ஊற்றப்பட்ட நீர் ஆவியாக ஆரம்பிக்கும். ஆவியாகி அந்த குக்கரின் பூராவும் பரவிப் பரிணமிக்கும். மேலும் மேலும் சூடேற்ற, அதிக நீர் ஆவியாகி குக்கரின் உள் நிறையும். குக்கரின் கொள்ளளவோ மாறாதது. நீராவியின் அளவோ அதிகரித்துக் கொண்டே போகிறது. நீரைவிட நீராவி பல மடங்கு பருமன் அதிகமானது என்பதை நாம் அறிவோம். வேறு வழியின்றி, குக்கரின் உள்புறம், இப்போது வளி மண்டலத்தைவிட அதிக அழுத்தத்துக்கு ஆட்படுகிறது. அது வரை ஆவியாகாமல் எஞ்சியிருக்கும் நீர் அந்த உயர் அழுத்தத்தை உணர்கிறது. இதனால் அதன் கொதினிலையும் அதிகரித்து, அதன் வெப்பம் 100 டிகிரியைவிட அதிகமாக உயர்ந்து, பின்னரும் தண்ணீர் என்ற நிலையிலேயே இருக்கிறது. தனிப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் + அரிசி (அல்லது குக்கரிலேயே ஒன்றாய்ப் போட்டிருந்தாலும்) இந்த உயர் அழுத்தம் காரணமாக வந்த அதிக சூட்டினால் (120 டிகிரி செல்ஷியஸ் வரை) அதி விரைவாக வேக ஆரம்பிக்கிறது.

மேலும், குக்கர் ஒரு மூடிய பாத்திரம் என்பதால், ஆவியான நீர் வெளியேறாததால், சக்தி விரயமும் மிக்க் குறைவு.

தொடர்ந்து நாம் சூடு செய்து கொண்டேயிருந்தோமானால், அழுத்தம் அதிகரித்து, குக்கரின் மேலே உள்ள பாதுகாப்பு வால்வ் (அதாங்க வெயிட்) மேலே எழும்பி, சற்றே நீராவியை கணிசமாக வெளியேற்றி, உள் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் குக்கர் பாத்திரம் அளவிற்கு அதிகமான அழுத்தத்திற்கு உட்படாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, அடுப்பை அணைத்த பிறகும், அரிசி வேகுதல் தொடர்கிறது. உள்ளே இருக்கும் சூடு, குக்கர் பாத்திரத்தின் வெளிச்சுவர் வழியாக காற்றுடன் கலந்து வெப்பச் சமன்படுதல் தொடர்கிறது. இப்போது முதலில் நிகழ்ந்த அதே நிகழ்வு ரிவர்ஸ் கியரில் நடக்கிறது. அதாவது, உள்வெப்பம் குறையக்குறைய நீராவி கொஞ்சம் கொஞ்சமாக, மீண்டும் நீர் என்ற வடிவம் பெறுகிறது. அது மட்டுமல்லாமல், நீராவியின் அளவு குறையக் குறைய, உள் அழுத்தம் குறைந்து, மறுபடியும் நீரின் கொதினிலை குறைந்து, இந்த செயல்பாடு வேகமாக நடந்து எல்லா நீராவியும் தண்ணீராய் மாறிவிடுகிறது. இதற்குள் அரிசி முழுமையாய் வெந்துவிடுகிறது.

இந்த நிகழ்வுகளை எல்லாம் கணித்துத்தான் நம் தாய்மார்கள் 3 விசில் என்று சிலரும், விசிலே வராமல், பிரஷர் அதிகரித்தவுடன், அடுப்பைக் குறைத்து வைத்து, குறிப்பிட்ட நேரம் ஆனவுடன் அடுப்பை அணைத்து. எரிபொருள் சிக்கனம் செய்தும் ஜமாய்க்கின்றனர். அதுவும் இப்போ இண்டக்ஷன் அடுப்பு வந்ததும், இன்னும் வசதி. சரியாகத்திட்டமிட்டால், குக்கரை வைத்து, சூட்டையும், நேரத்தையும் நிர்ணயித்து இண்டக்ஷன் அடுப்பை ஆன் செய்தால், தானாகவே வெந்து, குறிப்பிட்ட நேரத்தில் அடுப்பும் அணைந்துவிடும்.

முக்கியமானது என்னவென்றால், அரிசி தண்ணீரில் மட்டுமே வேகும். நீராவியில் அல்ல. நீராவி, பாத்திரத்தின் உள் அழுத்தத்தை உயர்த்தவும், சூட்டை, உள்ளே பரப்பவும் மட்டுமே துணை புரிகிறது.
அரிசியை தனிப் பாத்திரத்தில் நீரின்றியோ/குறைவான நீருடனோ வைத்தீர்கள் என்றால், வேகாது/முழுமையாக வேகாது என்பதை உணர்க.
அதே போல, குக்கரின் உள்ளே தண்ணீரை ஊற்ற மறந்தாலும் அரிசி வேகமுடியாது. ஏனெனில், முதலில் குக்கர் பாத்திரம் அடுப்பின் முழுச்சூட்டையும் உள்வாங்கி, உள்ளே இருக்கும் பாத்திரத்துக்கு (ஒன்றில் ஒன்று தொட்டுக்கொண்டிருப்பதால்-by conduction) சூடு ஏறி, பின் அதிலுள்ள நீர் ஆவியாகி.. இந்த நிகழ்வு நடைபெறுவதற்குள், குக்கர் பாத்திரம் மிக அதிக வெப்பனிலைக்கு உட்படுத்தப் பட்டு , அதன் மூடியிலுள்ள ‘உருகும் அடைப்பு (Fusible plug)  உருகி விடும். உள்ளே இருக்கும் சொற்ப நீராவி வெளியேறி விடும். பிறகு புதிய Fusible plug  போட்டாக வேண்டும்.

மலைவாசஸ்தலங்களில், வளி மண்டல அழுத்தம் குறைவென்பதால் நீரின் கொதினிலை 100 டிகிரிக்கும் குறைவு. அத்னால், அங்கு பாரம்பரிய முறையில் அரிசி வேகவைக்க ரொம்ப நேரம் மெனக்கெட வேண்டும். தெரியுமா உங்களுக்கு?

எவ்வளவு தூரம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவு ஒரு உபகரணத்தை பாதுகாப்பாகவும், செம்மையாகவும் உபயோகப் படுத்தவும் முடியும் இல்லையா?


No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..