Wednesday, October 24, 2012

குக்கரில் அரிசி எப்படி வேகிறது?


ப்ரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை தற்காலத்தில். எல்லா வீடுகளிலும், வெவ்வேறு அளவுகளில் இரண்டு மூன்று குக்கர்கள் உள்ளன. குக்கரை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை எல்லோரும் அறிவோம். இருந்தாலும், அரிசி எப்படி மிக்ச் சீக்கிரம் குக்கரில் வேகிறது என்று விளக்கும் ஒரு முயற்சிதான் இது.

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்தால்தான் கார் ஓட்ட வேண்டுமா என்று கேட்கும் வகையை நீங்கள் சேர்ந்தவரென்றால் இதைப் படிக்க வேண்டிய அவசியமில்லை.

வளிமண்டல அழுத்தத்தில் (அதாவது சாதாரண சூழலில்) தண்ணீர் 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் கொதித்து ஆவியாகிவிடும் தன்மை கொண்டது. அதாவது தண்ணீர் அதன் நிலையில் 100 டிகிரி வரையில்தான் இருக்க முடியும். அதற்கு மேல் சூடேற்றினால் ஆவியாகிவிடும்.

நாம் அரிசியை பாரம்பரியமான முறையில், அதாவது திறந்த பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து பின்னர் அரிசியைப் போட்டு வேக வைத்து வடிப்போமே, அந்த முறையில் அதிகபட்சமாக 100 டிகிரி வெப்பம் மட்டுமே நம்மால் அரிசிக்குத் தர இயலும். அதறகு மேலே தரப்படும் வெப்பம் விரயமாகும், நீரை ஆவியாக்கிவிட்டு.
அதே போல, 100 டிகிரி வெப்பம் கொடுத்தால் அரிசி ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் வேக முடியும். இந்தக் கால அளவை துரிதப் படுத்த வேண்டுமானால், நீரை 100 டிகிரியை விட அதிகமாகக் கொதிக்க வைக்க வேண்டும். அது அந்த் வெப்பத்திலும் நீராகவே இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அரிசி இன்னும் சீக்கிரம் வேக இயலும்.
உதாரணமாக 100 டிகிரி வெப்பம் உள்ள நீரில் அரிசி 30 நிமிட்த்தில் வேகிறது என்றால், 120 டிகிரி வெப்பம் உள்ள நீரில் 15 நிமிடத்தில் வேக முடியும். இது ஒரு உதாரணமே தவிர, கணக்குக்கு உட்ப்டுத்தப்பட்ட குறியீடு இல்லை.

தண்ணீரின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க அதன் கொதிநிலையும் அதிகரிக்கும் என்பது இயல்பு. இதை அடிப்படையாக வைத்துத்தான், தற்கால பிரஷர் குக்கர்கள் வடிவமைக்கப் படுகின்றன.
குக்கரில் நேரிடையாக பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறோம் அல்லவா? அதற்கு அப்புறம், இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரும் அரிசியும் வைக்கிறோம். சில நேரம் நேரடியாக குக்கரிலேயே  அரிசியையும் தண்ணீரையும் சேர்த்துப் போடுவதும் உண்டு (தனியாக உள்ளே பாத்திரம் எதுவும் வைக்காமல்). முதலில் அடுப்பைத் தூண்டி, குக்கர் பாத்திரம் சூடாக ஆரம்பிக்கும் போது, குக்கர் உள்புறம் வளிமண்டல அழுத்தத்தில்தான் இருக்கும். அதனால் 100 டிகிரி வெப்பம் அடைந்தவுடன் குக்கரில் ஊற்றப்பட்ட நீர் ஆவியாக ஆரம்பிக்கும். ஆவியாகி அந்த குக்கரின் பூராவும் பரவிப் பரிணமிக்கும். மேலும் மேலும் சூடேற்ற, அதிக நீர் ஆவியாகி குக்கரின் உள் நிறையும். குக்கரின் கொள்ளளவோ மாறாதது. நீராவியின் அளவோ அதிகரித்துக் கொண்டே போகிறது. நீரைவிட நீராவி பல மடங்கு பருமன் அதிகமானது என்பதை நாம் அறிவோம். வேறு வழியின்றி, குக்கரின் உள்புறம், இப்போது வளி மண்டலத்தைவிட அதிக அழுத்தத்துக்கு ஆட்படுகிறது. அது வரை ஆவியாகாமல் எஞ்சியிருக்கும் நீர் அந்த உயர் அழுத்தத்தை உணர்கிறது. இதனால் அதன் கொதினிலையும் அதிகரித்து, அதன் வெப்பம் 100 டிகிரியைவிட அதிகமாக உயர்ந்து, பின்னரும் தண்ணீர் என்ற நிலையிலேயே இருக்கிறது. தனிப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் + அரிசி (அல்லது குக்கரிலேயே ஒன்றாய்ப் போட்டிருந்தாலும்) இந்த உயர் அழுத்தம் காரணமாக வந்த அதிக சூட்டினால் (120 டிகிரி செல்ஷியஸ் வரை) அதி விரைவாக வேக ஆரம்பிக்கிறது.

மேலும், குக்கர் ஒரு மூடிய பாத்திரம் என்பதால், ஆவியான நீர் வெளியேறாததால், சக்தி விரயமும் மிக்க் குறைவு.

தொடர்ந்து நாம் சூடு செய்து கொண்டேயிருந்தோமானால், அழுத்தம் அதிகரித்து, குக்கரின் மேலே உள்ள பாதுகாப்பு வால்வ் (அதாங்க வெயிட்) மேலே எழும்பி, சற்றே நீராவியை கணிசமாக வெளியேற்றி, உள் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் குக்கர் பாத்திரம் அளவிற்கு அதிகமான அழுத்தத்திற்கு உட்படாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, அடுப்பை அணைத்த பிறகும், அரிசி வேகுதல் தொடர்கிறது. உள்ளே இருக்கும் சூடு, குக்கர் பாத்திரத்தின் வெளிச்சுவர் வழியாக காற்றுடன் கலந்து வெப்பச் சமன்படுதல் தொடர்கிறது. இப்போது முதலில் நிகழ்ந்த அதே நிகழ்வு ரிவர்ஸ் கியரில் நடக்கிறது. அதாவது, உள்வெப்பம் குறையக்குறைய நீராவி கொஞ்சம் கொஞ்சமாக, மீண்டும் நீர் என்ற வடிவம் பெறுகிறது. அது மட்டுமல்லாமல், நீராவியின் அளவு குறையக் குறைய, உள் அழுத்தம் குறைந்து, மறுபடியும் நீரின் கொதினிலை குறைந்து, இந்த செயல்பாடு வேகமாக நடந்து எல்லா நீராவியும் தண்ணீராய் மாறிவிடுகிறது. இதற்குள் அரிசி முழுமையாய் வெந்துவிடுகிறது.

இந்த நிகழ்வுகளை எல்லாம் கணித்துத்தான் நம் தாய்மார்கள் 3 விசில் என்று சிலரும், விசிலே வராமல், பிரஷர் அதிகரித்தவுடன், அடுப்பைக் குறைத்து வைத்து, குறிப்பிட்ட நேரம் ஆனவுடன் அடுப்பை அணைத்து. எரிபொருள் சிக்கனம் செய்தும் ஜமாய்க்கின்றனர். அதுவும் இப்போ இண்டக்ஷன் அடுப்பு வந்ததும், இன்னும் வசதி. சரியாகத்திட்டமிட்டால், குக்கரை வைத்து, சூட்டையும், நேரத்தையும் நிர்ணயித்து இண்டக்ஷன் அடுப்பை ஆன் செய்தால், தானாகவே வெந்து, குறிப்பிட்ட நேரத்தில் அடுப்பும் அணைந்துவிடும்.

முக்கியமானது என்னவென்றால், அரிசி தண்ணீரில் மட்டுமே வேகும். நீராவியில் அல்ல. நீராவி, பாத்திரத்தின் உள் அழுத்தத்தை உயர்த்தவும், சூட்டை, உள்ளே பரப்பவும் மட்டுமே துணை புரிகிறது.
அரிசியை தனிப் பாத்திரத்தில் நீரின்றியோ/குறைவான நீருடனோ வைத்தீர்கள் என்றால், வேகாது/முழுமையாக வேகாது என்பதை உணர்க.
அதே போல, குக்கரின் உள்ளே தண்ணீரை ஊற்ற மறந்தாலும் அரிசி வேகமுடியாது. ஏனெனில், முதலில் குக்கர் பாத்திரம் அடுப்பின் முழுச்சூட்டையும் உள்வாங்கி, உள்ளே இருக்கும் பாத்திரத்துக்கு (ஒன்றில் ஒன்று தொட்டுக்கொண்டிருப்பதால்-by conduction) சூடு ஏறி, பின் அதிலுள்ள நீர் ஆவியாகி.. இந்த நிகழ்வு நடைபெறுவதற்குள், குக்கர் பாத்திரம் மிக அதிக வெப்பனிலைக்கு உட்படுத்தப் பட்டு , அதன் மூடியிலுள்ள ‘உருகும் அடைப்பு (Fusible plug)  உருகி விடும். உள்ளே இருக்கும் சொற்ப நீராவி வெளியேறி விடும். பிறகு புதிய Fusible plug  போட்டாக வேண்டும்.

மலைவாசஸ்தலங்களில், வளி மண்டல அழுத்தம் குறைவென்பதால் நீரின் கொதினிலை 100 டிகிரிக்கும் குறைவு. அத்னால், அங்கு பாரம்பரிய முறையில் அரிசி வேகவைக்க ரொம்ப நேரம் மெனக்கெட வேண்டும். தெரியுமா உங்களுக்கு?

எவ்வளவு தூரம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவு ஒரு உபகரணத்தை பாதுகாப்பாகவும், செம்மையாகவும் உபயோகப் படுத்தவும் முடியும் இல்லையா?


Thursday, October 11, 2012

மாறும் உறவுமுறை

picture for poem
மாறும் உறவுமுறை
பாரதி அட்சயா
மாறும் உறவுமுறை
---------------------------

உணவினிடையே தாத்தாவுக்கு
பேத்தியுடன் செல்லச்சண்டை.
சுவாசக்குழலில் உணவுத்துகளோடி
புரையேறித் திணறித் தவிக்கையில்
இடது கையால் தலையைத் தட்டி
வலது கையால் நீரை நீட்டி
“சாப்பிடும் போது என்னப்பா பேச்சு”
செல்லமாய் அதட்டி நிற்கும் மகளிடம்
விழித்து நிற்கும் தந்தை..
கணப்போதில்
மகள் தாயாகவும்
தகப்பன் மகனாகவும்....

அசரீரி!


அசரீரி! – பாரதி அட்சயா


காலையில் அலுவலகம் வரும் வழியில் நடந்த ஒரு எரிச்சலூட்டும் நிகழ்வால் துவண்டு போய், அலுவலகம்  நுழையும் போதே புலம்பிக் கோண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் செல்வம்.
“இட்ஸ் எ வெரி பேட் டே”
“வொய் யூ சே சோ?” பக்கத்து இருக்கையில் இருந்து ஒரு குரல் கேட்டது. ஆனால் அந்த இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.
“யாரது?” பயத்துடன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க எத்தனித்தான் செல்வம்.
“பயப்படாத, உன்னை ஒன்னும் செய்யமாட்டேன். நீ பொலம்புறியேன்னு பதில் சொன்னேன்” மீண்டும் அசரீரி.
“நீ யாரு, எங்க இருக்க?”
“நான் உன் பக்கத்துலதான் இருக்கேன். என்னையே யாருன்னு கேக்குற”
“என் கண்ணுக்கு தெரியலியே?”
“உன் ஒடம்புல இருக்கிற கோடிக்கணக்கான பாக்டீரியாவெல்லாம் ஒன் கண்ணுக்குத் தெரியுதா?”
“அப்போ நீ பாக்டீரியாவா?”
“அதை விடு. நான் யாரா இருந்தா என்ன? இன்னிக்கு மோசமான நாள்னு ஏன் சொன்ன நீ”
“காலைல ஒரு கார்ல என் பைக்கால இடிச்சுட்டேன். அதுக்கு 500 ரூபாய் அழுதேன். அதுனால சொன்னேன்”
“காருல இடிச்சது தப்புதானே. அப்ப ஃபைன் கட்டிதானே ஆகனும்.”
“அது சரிதான். ஆனா அதுக்கு நான் காரணம் இல்ல. அதனாலதான் எரிச்சலும், கோவமும்”
“அப்ப வேற யார் காரணம்?”
“எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு ஸ்கூட்டி ஓட்டிகிட்டு போனா. அவ ட்ரெஸ் பண்ணியிருந்ததைப் பாத்துட்டு, அதே நெனப்பா அவளை ஃபாலோ பண்ணினேன். அப்பதான் கவனம் சிதறி, இது போல ஆயிடுச்சி”
“ரோட்ல வண்டி ஓட்டும்போது, கவனக்குறைவா, அங்க போற பொண்ணப் பாத்துகிட்டே போய், யார் கார்லயோ மோதி இருக்க. இது உன் தப்புதானே”
“ரோட்ல போகும் போது, பாதி ஒடம்பு தெரியற மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு போறது மட்டும் தப்பில்லையா?. அதுனாலதான் என்னோட கவனம் திரும்பிடுச்சு”
“என்ன ட்ரெஸ் போடணும்கறது அவங்கவங்க விருப்பம், உரிமை இல்லையா?. நீதான் அதுல எல்லாம் மனச தடுமாற விடாம கவனமா வண்டி ஓட்டணும்”
“இல்ல. நீ சொல்றது தப்பு. வீட்டுக்குள்ள இருக்கறது ஓகே. ஆனா, வெளியே பொது எடத்துக்கு வரும்போது, கொஞ்சம் கவனமா இருக்க் வேண்டாமா? நாங்கள்லாம் படிக்கற காலத்துல இப்படியெல்லாம் பொண்ணுங்க அசிங்கமா ட்ரெஸ் போட மாட்டாங்க”
“மாற்றம் நடந்துகிட்டேதான் இருக்கும். நீ சொல்ற காலத்துக்கு முந்தி பொண்ணுங்க வெளியேவே வரமாட்டாங்க. அதுக்காக அப்படியே இருந்துடுவாங்களா என்ன? எதுவுமே மாறும்போது சில அதிர்ச்சி இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் பொறுத்துத்தான் போகனும். கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணமான விஷயமாயிடும். புரியுதா?”
“புரியற மாதிரி இருக்கு. ஆனாலும் மனசு ஒத்துக்க மாட்டேங்குது”
“நீ ஒத்துக்கிட்டா ஒனக்கு நல்லது. இல்லாட்டி மறுபடியும் ஃபைன் கட்டு. சரி விடு. இதெல்லாம் இப்படித்தான். பேசி என்னாகப் போகுது. நேத்திக்கு உன்னால ரங்கன் ரொம்ப அப்செட் ஆயிட்டான், தெரியுமா?
“நேத்திக்கா? நான் அவன் கூட பேசக் கூட இல்லையே. அவன் எதுக்கு அப்செட் ஆனான்?”
“அப்ப ஒன்னால அவன் அப்செட் ஆனது கூட ஒனக்குத் தெரியாதா?”
“நெஜம்மா தெரியாது”
“முந்தா நாள் ராத்திரி ஒன் பையன் சரியா மார்க வாங்கலைன்னு அவனை அடிச்சதைப் பத்தி  நேத்திக்கு மதியம் சாப்பிடும்போது, எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டு இருந்தீல்ல”
“ஆமாம். அதுக்கென்ன”
“அப்போ நீ ஒரு வார்த்தை சொன்னே. அதுதான் ரங்கனை ரொம்ப பாதிச்சுடுச்சு”
“என்ன சொன்னேன்?”
“இப்படி ஒரு புள்ளயப் பெத்ததுக்கு, புள்ளையே பெக்காம இருந்திருக்கலாம்னு நீ சொன்னியே.. ஞாபகம் இருக்கா”
“ஆமாம். அதுக்கு என்ன?”
“ரங்கனுக்கு கல்யாணமாகி பதினஞ்சு வருஷமா இன்னும் கொழந்தயே இல்லாம இருக்கான். தெரியும்ல”
“தெரியும், அதுக்கும் நான் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சம்பந்தம் இருக்கு. கொழந்தையே இல்லாம அவன் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும் போது, நீ அப்படி சொல்றது தெனாவட்டா இல்லையா? அவன் பக்கத்துல வச்சுகிட்டு அப்படி நீ சொல்லி இருக்கலாமா?”
“நல்லா இருக்கே, நீ சொல்றது? நான் அவனை ஒன்னுமே சொல்ல்லையே. என்னோட வேதனை, நான் பொலம்பினேன். இப்படி எல்லாத்துக்கும், யாருக்காவது வருத்தம் வந்துடுமோன்னு யோசிச்சா வாழ்க்கையில ஒன்னுமே பேச முடியாதுப்பா. மௌன சாமியாரா இருக்க வேண்டியதுதான்”
“அதுவும் கரெக்ட்தான்”
“அப்படின்னா என்னை எதுக்கு கொற சொன்ன?”
“கொற சொல்லலியே. நடந்தத சொன்னேன்.”
“அது சரி, நீ யார், எங்க இருக்க சொல்லு. யாராவது பாத்தா இப்படி தனியா பேசிட்டிருக்கானே இவன் என்ன பயித்தியமான்னு சொல்லுவாங்க”
“நான் யாருன்னு எனக்கு தெரியலையே”
“அப்படின்னா நீ ஏதாவது ஆவியா?”
“அப்படி இல்லைனு நெனக்கிறேன். ஆனா என்னால எல்லாத்தையும் பாக்க முடியும், கேக்க முடியும்”
“ஓ. நீ எவ்வளோ நாளா இருக்கற?”
“ஆரம்பத்திலே இருந்து”
“எந்த ஆரம்பத்திலே இருந்து?”
“ஒனக்கு எந்த ஆரம்பம் தெரியும்?”
“அது..வந்து..  நீ எந்த ஆரம்பம் சொன்ன, அத சொல்லு மொதல்ல”
“உனக்குப் புரியாது. விடு. போன வாரம் ஒன்னால பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட் மல்லிகா அழுதா, அதுவாவது தெரியுமா ஒனக்கு?”
“புதுசா என்ன சொல்லி என்னை மிரட்டுற? அவள நான் ஒன்னுமே சொல்லலியே”
“முத்துசாமியோட பொண்ணுக்கு மாப்பிளை பாக்குறதைப் பத்தி நீயும், அவரும் பேசினீங்களே. அப்ப நீ சொன்ன ஒரு வார்த்த பக்கத்துல நின்னுகிட்டிருந்த மல்லிகாவ ரொம்ப காயப்படுத்திடுச்சி”
“நான் என்ன சொன்னேன்னே எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா அவ காயப்பட்டாங்குற. அப்படி என்ன சொன்னேன்”
“25 வயசுக்குள்ள பொண்ண எப்படியாவது கட்டிக் குடுத்துடு முத்துசாமி. இல்லைனா இந்தக் காலத்து பொண்ணுங்க கெட்டுக் குட்டிச்சுவரா போயிடும்னு நீ சொன்னியா இல்லையா”
“ஆமாம். சொன்னேன். முத்துசாமிக்கு நல்லதுன்னு நெனச்சிதான் சொன்னேன். அதுல என்ன தப்பு?”
“நீ சொன்னது சரியா, தப்பாங்கிறது இப்ப பேச்சு இல்ல. ஆனா நீ அப்படி சொன்னது மல்லிகா காதுல விழுந்துடுச்சே. அவளுக்கு 30 வயசாயிட்டுது. இன்னும் கல்யாணம் ஆகலை. நீ வேணும்னே அவளை மனசில வச்சுகிட்டு இப்படி சொன்னதா நெனச்சு பாத்ரூம்ல போய் அழுதுட்டு வந்தா அன்னிக்கு”
“அது எப்படி ஒனக்கு தெரியும்? நீ உள்ள போய் பாத்தியா பொம்பள பாத்ரூமுக்குள்ள”
“நான் எங்கயும் போக வேண்டியதுல்ல. எல்லா எடத்திலயும்தான் நான் இருக்கேனே”
“அப்படின்னா நீ காத்தா”
“இல்லைனு நெனக்கிறேன்”
“நீ எதையோ மறைக்கிற. நீ யார்ன்னும் சொல்ல மாட்டேங்குற. என்னப் பத்தி கொற மட்டும் சொல்ற. கூட இருந்தது மாதிரி எல்லாரு மனசில இருக்கிறதெல்லாம் சொல்ற”
“அதை விடு. உன்னப் பத்தி, உன்னால பாதிக்கப்பட்டவங்க உணர்வுகளைப் பத்தி நான் சொன்னதெல்லாம் கொற சொன்னதா நெனக்காத. நீ காலைல பொலம்புனீல்ல, அதுனாலதான் நான் இதெல்லாம் சொல்ல வேண்டியதாப் போச்சு. நம்ம செயலுக்கு நாமதான் பொறுப்பெடுத்துக்கணும். மத்தவங்களை கொற சொல்றதுல அர்த்தம் இல்ல. அதுனால யாருக்கும் லாபம் இல்ல.
அதே போல நாம பேசுற பேச்சு, செய்ற செயல் எல்லாமே மத்தவங்களுக்கு ஏதோ ஒரு பாதிப்பை, அது நல்லதோ, கெட்டதோ உண்டு பண்ணிகிட்டுதான் இருக்கும். அதையும் நீ உணரணும். இதெல்லாம் நான் என் அனுபவத்துல இருந்து சொல்றேன். எடுத்துக்கறதும், எடுத்துக்காததும் உன் விருப்பம். சரி, நான் கெளம்புறேன்”
“ஒனக்கு ஏது அனுபவம்”
“எல்லாரோட அனுபவமும் என்னோட அனுபவம்தானே? நான் கெளம்புறேன். ஒன்னோட பக்கத்து சீட் ஆள் வர்றான்”
“நீ யாருன்னு சொல்லிட்டுப் போ”
“………”
“என்னடா மச்சி, தனியா பேசிட்டுருக்க”, பக்கத்து சீட் முகுந்தன்.
“ஒன்னும் இல்லடா, ஏதோ பொலம்பிட்டு இருந்தேன், வேறொன்னுமில்ல”
“என்னடா நீயும் இப்படி ஆயிட்ட, ஹூம். எல்லாம் காலம்தான்”
“என்னடா சொன்ன, காலமா?”
இவனுக்கு மட்டும் கேட்பது போல ஒரு மெல்லிய குரல் சொல்லியது.
“அப்பாடி, இப்போவாவது நான் யார்னு கண்டுபிடிச்சியே !”

அவர்களும் இவர்களும்


அவர்களும் இவர்களும் – பாரதி அட்சயா

அதுதான் முதலில்எழும்பியதாகவும்
இவர்கள்தான் அதை இடித்து
இதை எழுப்பியதாகவும்
அவர்கள் கூக்குரலிட்டார்கள்.
இல்லை, இதுதான்
முதலில் இருந்தது, அவர்கள்
இடித்து அதைக்
கட்டியதால்தான்
அதை இடித்து
இதைக் கட்டியதாக
இவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
இது முதலா, அது முதலா
என்ற சண்டை
முதலிலிருந்தே இருக்கிறது.
அவரவர் ஆதாரம்,
அவரவர் நியாயம்,
எதையும் நம்பி
உயிரையும் விட
அணிக்கு ஆயிரமாயிரம்
தொண்டர் படை
பேரணிகள், கூக்குரல்கள்
கூச்சல்கள், குழப்பங்கள்,
நீதிமன்ற விசாரணைகள் !
இவர்களில் பல பேரும்
அவர்களில் பல பேரும்
செத்தபின்னரும் தொடரும்
முடிவில்லா விசாரணை
முடிவது எப்போதென,
பக்தனின்றி சோகமாய்
உள்ளே காத்திருக்குது
அதுவா, இதுவா
எனவறியா தெய்வம்!
*********

விமர்சனம்


விமர்சனம் – பாரதி அட்சயா

சொல்லவும்http://wpteach.com/wp-content/uploads/2012/04/comment.png
முடியவில்லை
சொல்லாமலிருக்கவும்
முடியவில்லை.
உப்பு தூக்கல்
புளி கம்மி
என கருத்து சொல்தல்
என் கடமையல்லதான்..
ஆனால் கருத்து கேட்டு
சுவை கூட்டல்
உன்னை அடுத்த தளத்துக்கு
உயர்த்துமல்லவா?
உனை பாராட்ட மட்டுமே
வேண்டுமென,
உன்னைபோலவே
நானும் விழைகிறேன்
என்பதை நீ அறிவாயா?
பார்த்தவனுக்கு என்ன தெரிகிறதோ
என்ன புரிகிறதோ
அதுதானே ஓவியத்தின் மதிப்பு?
நீ அழகாக இருப்பதாய்
நீயே உணர்ந்துவிட்டால்
உன் இல்லத்தில்
கண்ணாடி எதற்கு?
முன்பு சொன்னபோதெல்லாம்
அது சரியாகப் புரிந்து
கொள்ளப்படவில்லை
எனும் உண்மை
தெளிவாய்த் தெரிந்த போதும்
இம்முறையும் அது நிகழும்
எனும் நிகழ்தகவை
உணர்ந்த போதும் என்னால்
சொல்லாமலிருக்க முடியவில்லை.
விவாதங்கள் வளரா இடத்தில்
தேக்கங்கள் நிச்சயம்.
அதனுடன் முடை நாற்றமும்.
பாராட்டு விவாதமாகி,
விவாதம் திசைக்களவாகி
விதண்டாவாதமாய்ப் போன பின்
ஒவ்வொரு முறையும்
தோன்றுமெனக்கு
இனி சொல்லக் கூடாதென.
அந்த பிரசவ வைராக்கியம்
அடுத்த முறை உடைக்கப்பட்டு
மறுபடியும் சொல்லப் போய்
இம்முறை உன் மௌன
மறுதலிப்பை பதிலாய் வாங்கி
வலி உணர்கிறேன் நான்.
ஆனால் வழக்கம் போலவே
அது உன் மீதானது என வசதியாய்
புரிந்து கொள்கிறாய்
உன் மீதல்ல என்பதை
உணர்ந்த போதும்.
வலி மறந்த பிறிதொரு நாளில்
மீண்டும் என் விமர்சனம் வரலாம்.
அப்போது உன் எதிர்வினை
என்னவாய் இருக்குமென
அனுமானிக்கத் தெரியவில்லை..
எப்போது புரிந்து கொள்வாய்,
என் விமர்சனம்
இன்னும் உன் மேல் நான்
வைத்திருக்கும்
நம்பிக்கையின்
வெளிச்சக்கீற்றென்று?
ஒரு நாள் நிச்சயம்
நான் மௌனியாவேன்
உன் வரையில்.
அது உன் வளர்ச்சி வரைபடத்தில்
வளைவின் உச்சப் புள்ளி….

– பாரதி அட்சயா
    சென்னை