Thursday, October 11, 2012

அசரீரி!


அசரீரி! – பாரதி அட்சயா


காலையில் அலுவலகம் வரும் வழியில் நடந்த ஒரு எரிச்சலூட்டும் நிகழ்வால் துவண்டு போய், அலுவலகம்  நுழையும் போதே புலம்பிக் கோண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் செல்வம்.
“இட்ஸ் எ வெரி பேட் டே”
“வொய் யூ சே சோ?” பக்கத்து இருக்கையில் இருந்து ஒரு குரல் கேட்டது. ஆனால் அந்த இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.
“யாரது?” பயத்துடன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க எத்தனித்தான் செல்வம்.
“பயப்படாத, உன்னை ஒன்னும் செய்யமாட்டேன். நீ பொலம்புறியேன்னு பதில் சொன்னேன்” மீண்டும் அசரீரி.
“நீ யாரு, எங்க இருக்க?”
“நான் உன் பக்கத்துலதான் இருக்கேன். என்னையே யாருன்னு கேக்குற”
“என் கண்ணுக்கு தெரியலியே?”
“உன் ஒடம்புல இருக்கிற கோடிக்கணக்கான பாக்டீரியாவெல்லாம் ஒன் கண்ணுக்குத் தெரியுதா?”
“அப்போ நீ பாக்டீரியாவா?”
“அதை விடு. நான் யாரா இருந்தா என்ன? இன்னிக்கு மோசமான நாள்னு ஏன் சொன்ன நீ”
“காலைல ஒரு கார்ல என் பைக்கால இடிச்சுட்டேன். அதுக்கு 500 ரூபாய் அழுதேன். அதுனால சொன்னேன்”
“காருல இடிச்சது தப்புதானே. அப்ப ஃபைன் கட்டிதானே ஆகனும்.”
“அது சரிதான். ஆனா அதுக்கு நான் காரணம் இல்ல. அதனாலதான் எரிச்சலும், கோவமும்”
“அப்ப வேற யார் காரணம்?”
“எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு ஸ்கூட்டி ஓட்டிகிட்டு போனா. அவ ட்ரெஸ் பண்ணியிருந்ததைப் பாத்துட்டு, அதே நெனப்பா அவளை ஃபாலோ பண்ணினேன். அப்பதான் கவனம் சிதறி, இது போல ஆயிடுச்சி”
“ரோட்ல வண்டி ஓட்டும்போது, கவனக்குறைவா, அங்க போற பொண்ணப் பாத்துகிட்டே போய், யார் கார்லயோ மோதி இருக்க. இது உன் தப்புதானே”
“ரோட்ல போகும் போது, பாதி ஒடம்பு தெரியற மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு போறது மட்டும் தப்பில்லையா?. அதுனாலதான் என்னோட கவனம் திரும்பிடுச்சு”
“என்ன ட்ரெஸ் போடணும்கறது அவங்கவங்க விருப்பம், உரிமை இல்லையா?. நீதான் அதுல எல்லாம் மனச தடுமாற விடாம கவனமா வண்டி ஓட்டணும்”
“இல்ல. நீ சொல்றது தப்பு. வீட்டுக்குள்ள இருக்கறது ஓகே. ஆனா, வெளியே பொது எடத்துக்கு வரும்போது, கொஞ்சம் கவனமா இருக்க் வேண்டாமா? நாங்கள்லாம் படிக்கற காலத்துல இப்படியெல்லாம் பொண்ணுங்க அசிங்கமா ட்ரெஸ் போட மாட்டாங்க”
“மாற்றம் நடந்துகிட்டேதான் இருக்கும். நீ சொல்ற காலத்துக்கு முந்தி பொண்ணுங்க வெளியேவே வரமாட்டாங்க. அதுக்காக அப்படியே இருந்துடுவாங்களா என்ன? எதுவுமே மாறும்போது சில அதிர்ச்சி இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் பொறுத்துத்தான் போகனும். கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணமான விஷயமாயிடும். புரியுதா?”
“புரியற மாதிரி இருக்கு. ஆனாலும் மனசு ஒத்துக்க மாட்டேங்குது”
“நீ ஒத்துக்கிட்டா ஒனக்கு நல்லது. இல்லாட்டி மறுபடியும் ஃபைன் கட்டு. சரி விடு. இதெல்லாம் இப்படித்தான். பேசி என்னாகப் போகுது. நேத்திக்கு உன்னால ரங்கன் ரொம்ப அப்செட் ஆயிட்டான், தெரியுமா?
“நேத்திக்கா? நான் அவன் கூட பேசக் கூட இல்லையே. அவன் எதுக்கு அப்செட் ஆனான்?”
“அப்ப ஒன்னால அவன் அப்செட் ஆனது கூட ஒனக்குத் தெரியாதா?”
“நெஜம்மா தெரியாது”
“முந்தா நாள் ராத்திரி ஒன் பையன் சரியா மார்க வாங்கலைன்னு அவனை அடிச்சதைப் பத்தி  நேத்திக்கு மதியம் சாப்பிடும்போது, எல்லோர்கிட்டயும் சொல்லிகிட்டு இருந்தீல்ல”
“ஆமாம். அதுக்கென்ன”
“அப்போ நீ ஒரு வார்த்தை சொன்னே. அதுதான் ரங்கனை ரொம்ப பாதிச்சுடுச்சு”
“என்ன சொன்னேன்?”
“இப்படி ஒரு புள்ளயப் பெத்ததுக்கு, புள்ளையே பெக்காம இருந்திருக்கலாம்னு நீ சொன்னியே.. ஞாபகம் இருக்கா”
“ஆமாம். அதுக்கு என்ன?”
“ரங்கனுக்கு கல்யாணமாகி பதினஞ்சு வருஷமா இன்னும் கொழந்தயே இல்லாம இருக்கான். தெரியும்ல”
“தெரியும், அதுக்கும் நான் சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”
“சம்பந்தம் இருக்கு. கொழந்தையே இல்லாம அவன் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும் போது, நீ அப்படி சொல்றது தெனாவட்டா இல்லையா? அவன் பக்கத்துல வச்சுகிட்டு அப்படி நீ சொல்லி இருக்கலாமா?”
“நல்லா இருக்கே, நீ சொல்றது? நான் அவனை ஒன்னுமே சொல்ல்லையே. என்னோட வேதனை, நான் பொலம்பினேன். இப்படி எல்லாத்துக்கும், யாருக்காவது வருத்தம் வந்துடுமோன்னு யோசிச்சா வாழ்க்கையில ஒன்னுமே பேச முடியாதுப்பா. மௌன சாமியாரா இருக்க வேண்டியதுதான்”
“அதுவும் கரெக்ட்தான்”
“அப்படின்னா என்னை எதுக்கு கொற சொன்ன?”
“கொற சொல்லலியே. நடந்தத சொன்னேன்.”
“அது சரி, நீ யார், எங்க இருக்க சொல்லு. யாராவது பாத்தா இப்படி தனியா பேசிட்டிருக்கானே இவன் என்ன பயித்தியமான்னு சொல்லுவாங்க”
“நான் யாருன்னு எனக்கு தெரியலையே”
“அப்படின்னா நீ ஏதாவது ஆவியா?”
“அப்படி இல்லைனு நெனக்கிறேன். ஆனா என்னால எல்லாத்தையும் பாக்க முடியும், கேக்க முடியும்”
“ஓ. நீ எவ்வளோ நாளா இருக்கற?”
“ஆரம்பத்திலே இருந்து”
“எந்த ஆரம்பத்திலே இருந்து?”
“ஒனக்கு எந்த ஆரம்பம் தெரியும்?”
“அது..வந்து..  நீ எந்த ஆரம்பம் சொன்ன, அத சொல்லு மொதல்ல”
“உனக்குப் புரியாது. விடு. போன வாரம் ஒன்னால பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட் மல்லிகா அழுதா, அதுவாவது தெரியுமா ஒனக்கு?”
“புதுசா என்ன சொல்லி என்னை மிரட்டுற? அவள நான் ஒன்னுமே சொல்லலியே”
“முத்துசாமியோட பொண்ணுக்கு மாப்பிளை பாக்குறதைப் பத்தி நீயும், அவரும் பேசினீங்களே. அப்ப நீ சொன்ன ஒரு வார்த்த பக்கத்துல நின்னுகிட்டிருந்த மல்லிகாவ ரொம்ப காயப்படுத்திடுச்சி”
“நான் என்ன சொன்னேன்னே எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா அவ காயப்பட்டாங்குற. அப்படி என்ன சொன்னேன்”
“25 வயசுக்குள்ள பொண்ண எப்படியாவது கட்டிக் குடுத்துடு முத்துசாமி. இல்லைனா இந்தக் காலத்து பொண்ணுங்க கெட்டுக் குட்டிச்சுவரா போயிடும்னு நீ சொன்னியா இல்லையா”
“ஆமாம். சொன்னேன். முத்துசாமிக்கு நல்லதுன்னு நெனச்சிதான் சொன்னேன். அதுல என்ன தப்பு?”
“நீ சொன்னது சரியா, தப்பாங்கிறது இப்ப பேச்சு இல்ல. ஆனா நீ அப்படி சொன்னது மல்லிகா காதுல விழுந்துடுச்சே. அவளுக்கு 30 வயசாயிட்டுது. இன்னும் கல்யாணம் ஆகலை. நீ வேணும்னே அவளை மனசில வச்சுகிட்டு இப்படி சொன்னதா நெனச்சு பாத்ரூம்ல போய் அழுதுட்டு வந்தா அன்னிக்கு”
“அது எப்படி ஒனக்கு தெரியும்? நீ உள்ள போய் பாத்தியா பொம்பள பாத்ரூமுக்குள்ள”
“நான் எங்கயும் போக வேண்டியதுல்ல. எல்லா எடத்திலயும்தான் நான் இருக்கேனே”
“அப்படின்னா நீ காத்தா”
“இல்லைனு நெனக்கிறேன்”
“நீ எதையோ மறைக்கிற. நீ யார்ன்னும் சொல்ல மாட்டேங்குற. என்னப் பத்தி கொற மட்டும் சொல்ற. கூட இருந்தது மாதிரி எல்லாரு மனசில இருக்கிறதெல்லாம் சொல்ற”
“அதை விடு. உன்னப் பத்தி, உன்னால பாதிக்கப்பட்டவங்க உணர்வுகளைப் பத்தி நான் சொன்னதெல்லாம் கொற சொன்னதா நெனக்காத. நீ காலைல பொலம்புனீல்ல, அதுனாலதான் நான் இதெல்லாம் சொல்ல வேண்டியதாப் போச்சு. நம்ம செயலுக்கு நாமதான் பொறுப்பெடுத்துக்கணும். மத்தவங்களை கொற சொல்றதுல அர்த்தம் இல்ல. அதுனால யாருக்கும் லாபம் இல்ல.
அதே போல நாம பேசுற பேச்சு, செய்ற செயல் எல்லாமே மத்தவங்களுக்கு ஏதோ ஒரு பாதிப்பை, அது நல்லதோ, கெட்டதோ உண்டு பண்ணிகிட்டுதான் இருக்கும். அதையும் நீ உணரணும். இதெல்லாம் நான் என் அனுபவத்துல இருந்து சொல்றேன். எடுத்துக்கறதும், எடுத்துக்காததும் உன் விருப்பம். சரி, நான் கெளம்புறேன்”
“ஒனக்கு ஏது அனுபவம்”
“எல்லாரோட அனுபவமும் என்னோட அனுபவம்தானே? நான் கெளம்புறேன். ஒன்னோட பக்கத்து சீட் ஆள் வர்றான்”
“நீ யாருன்னு சொல்லிட்டுப் போ”
“………”
“என்னடா மச்சி, தனியா பேசிட்டுருக்க”, பக்கத்து சீட் முகுந்தன்.
“ஒன்னும் இல்லடா, ஏதோ பொலம்பிட்டு இருந்தேன், வேறொன்னுமில்ல”
“என்னடா நீயும் இப்படி ஆயிட்ட, ஹூம். எல்லாம் காலம்தான்”
“என்னடா சொன்ன, காலமா?”
இவனுக்கு மட்டும் கேட்பது போல ஒரு மெல்லிய குரல் சொல்லியது.
“அப்பாடி, இப்போவாவது நான் யார்னு கண்டுபிடிச்சியே !”

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..