Wednesday, September 5, 2012

தகப்பன்…


தகப்பன்…

ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு
இந்த சாலையை நான் கடக்கிறேன்.
மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி
மூட்டை கட்டியபின் பரிகசித்து அடிக்கும்
வெயில் போல பல நாட்கள் என் வேதனை
அர்த்தமற்றுப் போனதுண்டு.
ஆனால் என்றுமே இப்படி ஆகுமென
உறுதியேதும் இல்லாததால்
நான் உள்ளுக்குள் பயந்தவனாகவே
இருக்கிறேன் இன்னமும்,
வெளியில் தைரிய முகம் காட்டி.
பாம்பா பழுதாவென அறுதியிடமுடியா
பேதமை எனை சுயபச்சாதாபம் கொள்ள வைக்கிறது.
வெற்று நம்பிக்கை வார்த்தைகளின் மேல்
நான் நம்பிக்கை இழந்து பல நாள் ஆயிற்று.
மகளாய் நான் காட்டிய பாசத்தைவிட
படிப்பறிவில்லா என் அறியாமையை
அதிகம் நம்புகிறாளோ என் மகளென்னும்
ஐயம் என்னுள் தீயாய்க் கனல்கிறது.
என் கணிப்பெல்லாம் தவறாய்ப் போயெனை
மதி கெட்டோனாக்கும் நன்னாளும்
வாராதோவென நப்பாசையோடு கூடவே
ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு..
இந்த சாலையை நான் கடக்கிறேன்.

2 comments:

  1. நான் உள்ளுக்குள் பயந்தவனாகவே
    இருக்கிறேன் இன்னமும்,
    வெளியில் தைரிய முகம் காட்டி.
    பாம்பா பழுதாவென அறுதியிடமுடியா
    பேதமை எனை சுயபச்சாதாபம் கொள்ள வைக்கிறது


    அருமை

    ReplyDelete
  2. கவிதை நல்லாவே இருக்கு..
    ஆனால், சில சமஸ்கிருத சொற்கள் உறுத்துகிறது..
    வார்த்தை = சொற்கள்.
    சுயபச்சாதாபம்= தன்னிரக்கம்...
    கவிதை தூய தமிழில் அமையப்பெறவேண்டும்...நன்றி!

    ReplyDelete

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..