வருடம் 2000
"நிறுத்துடி, உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? நீ லவ் பண்ண லட்சணம் இந்த ஊருக்கே தெரியுமே. நல்லா பசையுள்ளவனாப் பாத்துதான் லவ் வருமோ? இந்த அழகுல நான் காசு பின்னாடி அலையுறேன்னு என்னை சொல்ற நீ. த்தூ" காரித் துப்பியது மஞ்சுளா, புஷ்பாவைப் பார்த்து.
புஷ்பா வேறு யாருமில்லை, மஞ்சுளாவோட மூத்த மகள்.
கோபம் கொடூரமான உணர்வு, ஆனால் உள்ளத்தில் உள்ளது அனைத்தையும் மடை திறந்து முழுமையாகக் கொட்டிவிடும். கடைசிவரை சரி செய்ய முடியாத இழப்பை பரிசாகத் தந்துவிட்டுத்தான் அடங்கும்....
புஷ்பா காதலித்தது, ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது எல்லாம் இப்போ இல்ல, அது நடந்து பத்து வருசம் ஆச்சு. அப்போல்லாம் மஞ்சுளா அந்தக்காதலை ஏற்கவுமில்லை, புஷ்பா கல்யாணம் செஞ்சுகிட்டதை கண்டுக்கவுமில்லை. கிட்டத்தட்ட "விட்டுது சனியன்" ங்கற மாதிரிதான் நடந்துகிட்டாங்க.
ஆனா கல்யாணத்துக்கப்புறம் புஷ்பாவோட நிலைமை மேலேறிக்கிட்டே இருந்தது. மஞ்சுளாவோட நிலைமை தலைகீழாப் போயிருச்சு.
தன்னோட நிலைமை எறங்கிருச்சுன்னு தெரிஞ்சப்புறம் புஷ்பாவோட உறவை புதுப்பிச்சுகிட்டு, அப்பப்போ வந்து போகன்னு இருந்தாங்க. அப்பப்போ காசு பணம் துணிமணின்னு கேட்டு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.
புஷ்பாவுக்கு அம்மாவைப் புடிக்கலைங்கறது உண்மையா இருந்தாலும், அடிப்படைல பாசக்காரின்றதால அம்மாவை ஒதுக்க நினைக்கல.
"ஏம்மா, நீ அக்காகிட்ட இவ்ளோ மோசமா சண்டை போடுற" ன்னு அம்மாவைக் கண்டிச்சான் ரவி, மஞ்சுளாவோட பையன்.
"ஒங்கக்காளப் பத்தி என்னடா தெரியும் உனக்கு? வண்ட்டான் ஞாயம் பேச"
"என்னைப் பத்தி என்னா தெரியும் ஒனக்கு? ஏதோ பேசணும்னு பேசாத. எங்காசு பணம்னு அவ்ளோ அனுபவிச்சுட்டு இப்போ நான் காசு தர முடியாதுன்னு சொன்னோன்ன என்னியத் துப்புற அளவுக்கு வந்துட்டேல்ல. உங்க ரெண்டு பேத்தையும் நான் இங்க வந்து பாக்குறது இதான் கடைசி தடவை" ன்னு சொல்லிட்டு கிளம்பி விட்டாள் புஷ்பா.
சற்று நேரன், வீடே மயான அமைதியாய்ருச்சு புஷ்பா கெளம்பிப் போனோன்ன. குப்புறடிச்சுப் படுத்துட்டாங்க மஞ்சுளா.
"இந்த நாலு வருசமா என் காலேஜ், ஹாஸ்டல் ஃபீசெல்லாம் அக்காதான் கட்டுச்சு. இன்னிக்கு நீ தேவைல்லாம் வம்பை வலிச்சு அக்காவை அசிங்கமா பேசி, நம்ம தலைல நீயே மண்ணை வாரிப் போட்டுட்ட"
"எலேய், ஒங்கப்பாரு சாவும்போது ஒனக்கு அஞ்சு வயசு. இத்தினி வருசமா உன்னை நான் வளக்கல? படிக்க வைக்கல?, இப்ப காலேஜ் போன்னோன்னதான ஒங்கக்கா ஃபீசு கட்னா? அதுக்கு முன்னாடி எல்லாம் ஒங்கக்காதான் பண்ணாளா? நீ உருப்பட மாட்டடா, பெத்த வவுறு பத்தி எரியுது, நீ சொல்றதெல்லாம் கேக்குறப்போ. அவ என்னை அவ்வளோ மட்டமா பேசுறா, பெத்த தாய்னு கூடப்பாக்காம. நீ அவளுக்கு ஒத்தூதுற. காரியகாரப் பயடா நீயி."
"இப்ப என்ன சொல்லிட்டேன்னு எனக்கு சாபம் உடுற நீயி. உண்மையை சொன்னா உனக்குக் கோவம் வருது. அதான், வேறென்ன" சொல்லிவிட்டு விருக்கென்று வெளியே கிளம்பிப் போனான் ரவி.
**********
வருடம் 1990.
புஷ்பா 8வது படிக்கறப்போ அவளோட அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார். அவர் இறக்கும் வரைக்கும் விவசாயம்தான் செய்து கொண்டிருந்தார். அவருக்கு மாத வருமானம் இல்லை ஆனாலும் விவசாயம் நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்தது. 10 மா நிலம். கிட்டத்தட்ட நல்ல வசதியான குடும்பம்தான்.
ஒரே குறை, விவசாயத்தைப் பத்தி எதுவுமே தெரியாத, அதில் ஆர்வமே இல்லாத மஞ்சுளாவுக்கு, கணவர் இறந்தவுடன் தொடர்ந்து விவசாயம் பண்ணத் தெரியல. ரெண்டு வருசம் குத்தகைக்கு விட்டுப் பாத்ததுல, ஏமாந்ததுதான் மிச்சம்.
மேலும், கணவரின் ஆளுமைக்குக் கீழ் இருந்த மஞ்சுளாவுக்கு இப்போ எந்தத் தடையும் இல்லாத வாழ்க்கை போதையைத் தந்தது.
இது மஞ்சுளாவுக்கு மட்டும் என்றில்லை. எல்லாப் பெண்களுக்கும் இள வயதில் கணவன் மறைய நேரிட்டால், சோகத்தைத் தாண்டி, சிறிதளவேனும் விடுதலை உணர்வு தோன்றத்தான் செய்யும். ஆனால் பொறுப்புச்சுமை அழுத்துவது அதை விட அதிகமாக இருப்பதால் அந்த விடுதலையின் சுகம் உணரத்தக்கதாகவே அமையாது.
சின்ன வயலேருந்தே மஞ்சுளா ஒரு சினிமாப் பைத்தியம். இப்போ சினிமா, சினிமா, சினிமாதான் வாழ்க்கைன்னு ஆகிப்போனது.
வீட்டுக்கார் உயிரோட இருந்த வரைக்கும் வருசத்துக்கு 4 படம் பாத்துக்கிட்டிருந்தவங்க, அவர் போய் சேந்தோன்ன, மாசத்துக்கு நாலு படம்னு ஆகிப் போச்சு.
விறகடுப்பிலிருந்து கெரசினுக்கும், பின்னர் கேஸ் அடுப்பிற்கும். எண்ணெய்ப் பண்டங்கள், பலகாரங்கள் இடை விடாது. விளை நிலங்கள் விலை போய், உணவாகவும், உடையாகவும், கேளிக்கையாகவும் கரைந்தது.
ஆனால் மஞ்சுளா, "கேட்பாரும் இல்லை, மேய்ப்பாரும் இல்லை" என்று சொல்வார்களே, அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள், ஆனால் வீழ்ந்ததென்னவோ மொத்தக் குடும்பமும்.
இருக்குற நெலத்தெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வித்து நாலே வருசத்துல மிஞ்சுனது குடியிருக்குற வீடும் 100 குழி நிலமும்தான்.
"குந்தித்தின்றால் குன்றும் மாளும்" கதைதான்.
+2 வரை படித்த புஷ்பா மேலே படிக்க வசதி இல்லாததாலும், குடும்பத்துக்கென வருமானம் இல்லாத சூழ்நிலையாலும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம்.
தானே வேலைக்குப் போகணும்னு முயற்சி செஞ்சு வேலூர்ல ஒரு தனியார் மருத்துவமனைல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குப் போனா. சம்பாதிக்குற பணத்தை குடும்பத்துக்குதான் செலவு செஞ்சா. அம்மாவைக் கொஞ்சம் கண்டிக்க ஆரம்பிச்சா. புள்ளைங்க தலையெடுத்தோன்ன, இதுவரைக்கும் அம்மா பண்ணுன நிர்வாகம் சரியில்லைனு தோணி அதை சரி பண்ணணும்னு முயற்சி பண்ணும்போதுதான் குறுக்கே வந்தது காதல்.
அந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்துல மேனேஜரா வேலை செஞ்ச குணாவுக்கு புஷ்பாவோட அழகும், அறிவும் உழைப்பும் ஈர்த்திருக்கணும். அவர்தான் புஷ்பாகிட்ட தன் காதலை முதலில் சொன்னது. அதை மறுக்கிறதுக்கு எந்த காரணமும் இல்ல புஷ்பாகிட்ட. அந்த காலத்துல இந்த காதல்ங்கிற சமாசாரமே கற்புநெறி தாண்டினதுங்கற ஒரு சமுதாய மனப்பான்மைதான் அவளை கொஞ்சம் யோசிக்க வச்சது. ஒரு நாலைஞ்சு மாசம் கழித்து ஒரு சுபயோக சுபதினத்தில் ரத்னகிரி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு "ஓடிப்" போனார்கள்.
மஞ்சுளாவுக்கு புஷ்பா காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டுப் போனதுல உள்ளுக்குள்ள பெரிய கோவம் இல்லைன்னாலும் வெளியுலகுக்காக கோபப்படுற மாதிரி நடிச்சிகிட்ட்ருந்தாங்க. அது மட்டுமில்லாம, மறுபடியும் சுதந்திரம். இருந்த 100 குழி நிலத்தையும் வித்து சூரை விட்டாங்க. கடைசில ஒன்னும் மிஞ்சிலைங்கற நெலமை வந்ததும் புஷ்பா கூட பேச்சுவார்த்தை, போக வரன்னு ஆரம்பிச்சாங்க, வாழ்க்கைய ஓட்டணுமேன்னு.
அதுக்குள்ள ரவியும் +2 முடிச்சிட்டு எஞ்சினியரிங் காலேஜ்ல சேர முயற்சி பண்ணிட்ருந்தான். அவனே அக்காகிட்ட தான் காலேஜ் படிக்கணும்கிற ஆசையை சொல்லி உதவி கேட்டான். அக்காகாரிக்கும் தம்பி மேல பாசம். உதவுனா. அவனும் படிச்சு முடிக்கற நேரம்.
இப்போ மஞ்சுளா புஷ்பாகிட்ட மேலும் மேலும் பணத்துக்கு அரிக்க ஆரம்பிச்சாங்க. புஷ்பா ஒரு ஆலோசனை சொன்னா அம்மாவுக்கு. "சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரம்பிச்சுத் தரேன். நீ அதை நடத்திப் பொழைச்சிக்கோ. இப்படி எத்தினி நாள் என்னை நம்பியே வாழ முடியும். எனக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்குல்ல"னு சொன்னதுலதான் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வந்து புஷ்பா கோச்சிகிட்டு கெளம்பிப் போனது.
*********
வருடம் 2010.
ஆங்கிலத்துல ஒவ்வொரு பத்து வருடத்தையும் ஒரு Decade ன்னு சொல்வாங்க. அடுத்த decade ல என்னென்ன அற்புதங்கள் அல்லது சோகங்கள் நம்ம வாழ்வுல நிகழும்னு யாராலயும் கற்பனை பண்ணவே முடியாது. அப்டியே பொரட்டிப் போட்டுட்டு நிக்காம போயிட்டே இருக்கும் காலம்.
ரவிக்கும் கிட்டத்தட்ட அப்டித்தான் ஆச்சு.
எஞ்சினியரிங் முடிச்சு மொத ரெண்டு வருசம் வேலையே கெடைக்கல. அப்றம் சம்பளமே இல்லாம ஒரு கம்பெனில வேலைக்குப் போனான். அந்த ஆறு மாசத்துல கத்துகிட்ட தொழில்தான் அடுத்து சம்பளத்தோட வேலை கிடைக்க வாய்ப்பைக் கொடுத்துச்சு. மொத சம்பளம் 6000 ஓவா. அப்பவே வயசு 23 ஆய்ருச்சி. இப்படிப்போனா எப்படி வாழ்க்கைல செட்டில் ஆக முடியும்கற கவலை ரவிக்கு.
எங்காவது வெளிநாடு போவறதுக்கு முயற்சி பண்லாமான்னு யோசிச்சா ரெண்டு விஷயம் தடையா இருக்கு. ஒன்னு ஏஜென்சி கேக்குற பெரிய தொகை. ரெண்டாவது அந்த ஏஜென்சி போலியா இருக்குமோன்றது.
இதுக்கு நடுவுல ரெண்டு கம்பேனி மாறிட்டான் ரவி. மொத்தமா ஆறு வருடம் அனுபவம் வாரப்போ, 15000 ரூவா சம்பளம். "வயசு 27 ஆச்சு. பொண்ணு பாக்கட்டுமா"ன்னு அம்மா ஆரம்பிச்சுட்டாங்க.
ஏற்கனவே வாங்குற சம்பளத்துல சென்னைல வாழ்க்கை ஓட்றதே பெரும்பாடா இருக்கு. இதுல ஊர்ல இருக்குற அம்மாவுக்கும் மாசமாசம் பணம் அனுப்பணும். அக்காவோ சுத்தமா, ஒட்டு உறவு இல்லைன்னு விட்டுட்டா, இதுல என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த வாழ்ந்துன்னு தோணுச்சு ரவிக்கு.
அப்பத்தான் ஒரு நாள் ரவியோட காலேஜ்ல கூடப்படிச்ச சம்பத் போன் பண்ணுனான்.
"டேய், நேத்திக்கு பவித்ரா உன்னைப் பத்தி விசாரிச்சாடா"
"எந்த பவித்ரா" தனக்குத் தெரியாத மாதிரி இழுத்தான் ரவி.
"டேய் டகால்டி, நடிக்காதடா. நாம பைனல் இயர் படிக்கும்போ காலேஜ்ல பர்ஸ்ட் இயர் ஜாய்ன் பண்ணாளே. உனக்கு கூட ரூட் விட்டாள். நீதான் அவ பெரும் பணக்காரி, நமக்கு செட்டாவுதுன்னு கண்டுக்காம விட்டேல்ல, அதே பவித்ராதான். இப்ப ஞாபகம் வருதா?"
"என்னவாம் அவளுக்கு, எதுக்கு ஏன் நம்பர் கேக்குறா?"
"நீ செட்டில் ஆயிட்டியா, எங்க வொர்க் பண்றேன்னு கேட்டா. நான் சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டாடா. அப்றம் கல்யாணம் ஆயிருச்சான்னும் கேட்டா"
"அவளுக்கும் வேலையில்ல, உனக்கும் வேற வேலையில்ல, வைடா ஃபோனை."
******
"பாட்டி, உங்க வீட்டுக்கு விருந்தாடி வந்திருக்காங்க, பெரிய கார்ல" பக்கத்து வீட்டுப் பொடுசு மஞ்சுளாம்மாவுக்கு தகவல் சொல்லிவிட்டு ஓடுது.
"வணக்கம். என் பேரு தியாகராஜன். மதுரைலேருந்து வரேன். உள்ள வர்லாங்களா"
ஆஜானுபாகுவான தோற்றம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் கம்பீரமாய்த் தெரிந்தார் தியாகராஜன்.
"வாங்க, உள்ள வாங்க"
"உங்க குடும்பத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டுத்தான் வந்திருக்கேன்"
"என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு...."
"சொல்றேன். என் பொண்ணு பவித்ரா உங்க பையன் ரவியோட காலேஜ்ல படிச்சா. என் பொண்ணுக்கு உங்க பையனைப் புடிச்சிருக்கு. இந்த லவ் கிவ்லாம் ஒன்னும் இல்ல. ஆனா புடிச்சிருக்கு. அவ என்கிட்ட எதுவும் சொல்லல இத்னி வருசமா.
அவளுக்கு மாப்பிளை பாக்க ஆரம்பிச்சு ஒன்னும் சரியா அமையவே இல்ல. தட்டிப் போய்கிட்டே இருந்துச்சு. அப்பதான் ஒரு நாள் அவகிட்ட கேட்டேன். உனக்கு யார்னா தெரிஞ்ச, புடிச்ச பையன் இருந்தா சொல்லுன்னு, சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். அவ சட்டுன்னு உங்க பையனைப் பத்தி சொன்னா. உங்க குடும்ப சூழ்நிலை, ஏழ்மை இதெல்லாம் காரணம் காட்டி நான் ஏத்துக்க மாட்டேன்னு நெனைச்சு இது நாள் வரை எங்கிட்ட சொல்லல அவ. என்கிட்ட சொல்லாதது மட்டுமில்ல, அவ உங்க பையன் கிட்ட கூட இதைப் பத்தி சொல்லல.
எனக்கிருக்குறது ஒரே பொண்ணு. அவ மனசுக்கு ஒங்க பையனைப் புடிச்சிருக்கு. உங்க பையனுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நல்ல குணமான, உழைக்கத் தயாரா இருக்குற பையன். எனக்கு முழு சம்மதம். உங்களுக்கும், உங்க பையனுக்கும் இதுல விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்"
"எனக்கு இதுல ஏதும் சொல்றதுக்கு இல்லை. என் பையனுக்குப் புடிச்சிருந்துன்னா எனக்கும் புடிச்ச மாதிரிதான். ஆனா இதுல எங்க ரெண்டு பேரு சம்மதம் மட்டும் போதாதுல்ல...." என்று இழுத்தாங்க மஞ்சுளா.
********
"எதாருந்தாலும் போன்லயே சொல்லும்மா. இப்ப என்னால ஊருக்கு வர முடியாது, லீவு கெடைக்காது" அம்மாவிடம் திட்டவட்டமாக சொன்னான் ரவி.
"உன் ஃப்ரெண்டு பவித்ராவோட அப்பா நம்ம வூட்டுக்கு வந்தார்ப்பா." ன்னு ஆரம்பிச்சு நடந்ததெல்லாம் சொன்னாங்க மஞ்சுளா.
"நான் அவளைப் பாத்தே ஏழெட்டு வருசம் ஆச்சும்மா. இது என்ன புதுசா திடீர்னு ஒன்னிய வந்து பாத்துருக்காங்க"
"எப்ப பாத்திருந்தா என்னப்பா, ஒன்னியப் புடிச்சிருக்குன்னு சொல்லிருக்கா. அவங்கப்பா உனக்ககும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறார். நல்ல குடும்பமா தெரிது. நீ என்ன சொல்ற?"
"எனக்கு ஒன்னும் சொல்லத் தோணலம்மா. ஆனா, நாம ரெண்டு பேரு மட்டும் முடிவு பண்ண முடியாதுன்னு சொன்னியே, வேற யாரு இதுல முடிவு பண்ணனும்?"
"ஒனக்கு கூடப் பொறந்தவ ஒருத்தி இருக்கா, ஞாபகம் இருக்குல்ல?"
'இங்க பார்ரா, ஏம்மா, ஒனக்கு இன்னும் ஒம் பொண்ணு நெனைப்பு இருக்கா? ஆச்சர்யமா இருக்கு"
"எனக்கு நெனைப்பு இருக்றதெல்லாம் இருக்கட்டும். அவ உங்கூடப் பொறந்தவ. அவ கிட்ட கலந்துக்காம அதை முடிவு பண்ணிரக் கூடாதுல்ல. இன்னிக்கு அவ கூடப் பேச்சு வார்த்தை இல்லைங்கறதுனால இப்டியே விட்ற முடியுமா"
"சரிம்மா, நான் அடுத்த வாரம் கெளம்பி அக்காவை நேர போய் பாத்துட்டு வரேன். இந்தக் கல்யாண டாபிக் கெடக்கட்டும். அக்காகிட்ட பேசணும்னு நீயே சொன்னதுக்கு அப்றம் டிலே பண்ணக்கூடாதில்ல"
*********
காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள் புஷ்பா.
"யேய் ரவி, எப்டிரா இருக்க" ஓடி வந்து தம்பியின் கையைப் பற்றிக் கொண்டாள்.
"அம்மா நல்லாருக்கா ? நீ இங்க வர்றது அம்மாக்குத் தெரியுமா?"
"அம்மா சொல்லித் தாங்க்கா நானே வந்தேன்"
புஷ்பாவுக்கு ஆச்சரியம். மனுச மனசு எவ்ளோ வித்தியாசமா நெனைக்குது, எவ்ளோ மாறுது காலப்போக்குல.
"எப்டிக்கா இருக்கீங்க எல்லாரும்?"
"இருக்கோண்டா, ரெண்டு வருஷமா எதுவும் சரியாப் போகல. எதுல கைய வச்சாலும் தேற மாட்டேங்குது. உங்க மாமா புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறேன்னு ஒரு ஸ்டேஷனரி சாப் நெறைய காசைப் போட்டு ஆரம்பிச்சாரு. எதிர்பார்த்த அளவுக்குப் போகல. கடை போட்ட எடம் சரியா அமையல. பெருத்த நஷ்டம். இதுக்கு நடுவுல பெரியவ வயசுக்கு வந்துட்டா. அதுக்கு ஃபங்ஷன் கூட வைக்கல. வீட்டோட முடிச்சிகிட்டோம். மறுடியும் வேலைக்குப் போகலாமான்னு முயற்சி பண்ணிட்டிருக்காரு உங்க மாமா.
புள்ளைங்களைப் பாத்துக்கணுமேன்னு நான் அப்பவே வேலையை விட்டது தப்பாப் போச்சு. காசு பணம் இல்லாம தவிக்கும்போதான் அம்மா எம்மாங்கஷ்டப் பட்டிருக்கும்னு தோணுதுடா"
"உங்க மாமாவுக்கு இருக்குற திறமைக்கு இந்தக் கஷ்டம் எல்லாத்தையும் தாண்டிருவோம். என்ன ஒன்னு, இருக்கறதை வுட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டதுதான் தப்பாய்ருச்சு"
"ஆனா, இதெல்லாம் வாழ்க்கைல ஒரு பெரிய விஷயம் இல்லடா ரவி. இங்க பாரேன். இப்ப நான் வயர் கூட பின்னி விக்குறேன். வீட்டு வேலைலாம் முடிச்சிட்டு கெடைக்குற நேரத்துல இதை செய்றேன். ஏதோ நம்மாலான வருமானத்தைக் கொண்டாரலாம்ல, அதான்"
"இதான் என் அக்கா. தோக்கறதுன்னா என்னான்னே தெரியாது. நீ பெரிய ஆளுதாங்க்கா" நெகிழ்ந்து போய் அக்காவின் கைகளைக் கோர்த்துக் கொண்டான் ரவி.
"அப்றம், நீ எப்டிறா இருக்க. எவ்ளோ சம்பாதிக்கற? அம்மாவை நல்லபடியா வச்சிருக்கியா?"
"ஒன்னும் பெருசா சம்பாதிக்கலக்கா, ஆனா முயற்சி பண்ணிட்டே இருக்கேன் அடுத்தடுத்து."
தன் கல்யாணப் பேச்சையும், அக்காவைக் கலந்து பேசி சொல்வதாக அம்மா பெண் வீட்டில் சொல்லிவிட்டதையும் சொன்னான் ரவி.
"அம்மாவை நான் எவ்ளோ அசிங்கமாப் பேசிருக்கேன். அதெல்லாம் மறந்துட்டு என்னைக் கேக்கனும்னு அம்மாவுக்கு தோணிருக்கு பாரேன்"
'சரிடா, சாயந்தரம் உங்க மாமா வந்ததும் சொல்லிட்டு நானும் உங்கூட வரேன். போய் அம்மாவைப் பாத்து மத்ததெல்லாம் பேசுவோம்."
உறவுகள் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.
*******
எத்தனை வருடங்களாகப் பிரிந்து கிடந்த குடும்பம். திடீர்னு ஒரு நாள் காலைல ஒன்னு சேர்றதுல்லாம் சாதாரணமா நடக்கக்கூடிய நிகழ்வு இல்லை. ஆனால் இங்கே ரவியின் திருமணப்பேச்சு நிமித்தம் அது நிகழ்ந்தது. ஆனா என்ன, ரவியும் புஷ்பாவுக்கு வீட்டுக்குப் போன நேரம், வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டக்கா சாவியைக் கொடுத்துச்சு.
"நம்ம பூட்டுத்தாக்கு பாபுவோட பேத்திக்குக் கல்யாணம், திருவலம் கோயில்ல. அதுக்குதான் ஒங்கம்மா போயிருக்கு. காலைலதான் கெளம்பிப் போச்சு. 7.30 - 9 முகூர்த்தம். 10 மணிக்கெல்லாம் வந்திரும்"
அக்காவும் தம்பியுமாய் உள்ளே வந்தார்கள். புஷ்பாவுக்கு எல்லாம் புதுசா இருந்தது. கொல்லைல ரெண்டு மாடு கட்டிக் கெடக்குது. மாடு ரெண்டும் கொட்டாய்லேருந்து வெளில கட்டி இருக்கு. கொட்டாய் சாணியள்ளி, கூட்டி சுத்தமா இருந்துச்சு.
சமையல் கட்டுல, பாத்திரம்லாம் வெளக்கி சுத்தமா கவுத்துருந்துச்சு. அரிசி டின்லயும், பருப்பெல்லாம் அழகழகா ப்ளாஸ்டிக் டப்பாலயும் கொட்டி அடுக்கிருக்கு.
"நம்ம வீடுதானாடா இது?"ன்னு தம்பியைக் கேட்டாள் புஷ்பா.
"அக்கா, அம்மா மின்ன மாதிரி இல்லக்கா. நெறைய மாறிடுச்சு. நான் பணம் அனுப்பவான்னு கேட்டா 'வேணாண்டா, நான் பாத்துக்கறேன். உன் சம்பளத்துல நீ உன் வாழ்க்கையைப் பாரு' ன்னு சொல்லிரும்."
"வாழ்க்கை எல்லாரையும் மாத்திருதுல்ல" வியந்தாள் புஷ்பா.
அக்கா தோசை ஊற்றித் தர ரவி சாப்பிட்டான்.
"அக்கா, நான் போய் கடைசி வீட்டு மாமாவைப் பாத்துட்டு வரேன். உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாய் கெடக்குறாராம். நீ சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. அம்மா எப்டியும் வாரதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆவும்ல" சொல்லிட்டு வெளில கெளம்பினான் ரவி.
அரை மணி நேரம் கழித்து ரவி திரும்ப வந்தான். கேட்டைத் திறக்கும் போது வீட்டுக்குள்ள பேச்சு சத்தம் கேட்டது. காரசாரமா வாக்குவாதம் நடக்குறா மாதிரி இருந்தோன்ன, அப்டியே திண்ணைலயே உக்காந்துட்டான் ரவி.
"இப்ப மாடு கன்னு வளத்து, பால் வித்து, ராட்டி தட்டி வித்துப் பொழைக்குறியே, இதே ஒழைப்பை அப்பா செத்தோன்ன செஞ்சிருந்தீன்னா, நம்ம நிலம்லாம் கையை விட்டுப் போயிருக்குமா? " புஷ்பாவின் குரல்தான்.
"அப்டி ஒழைச்சிருந்தீன்னா, நானும் +2வுக்கு மேல படிச்சு இன்னிக்கு நல்ல வேலை பாக்குற நெலைல இருந்திருப்பேன்ல. நீ சொத்தை மட்டுமா அழிச்ச, என் படிப்பையும்தான்"
அம்மா காயப்பட்டிருக்க வேண்டும். பதில் சொல்லல போல. அக்காதான் மேல மேல பேசிட்டே இருந்தாள்.
"அப்றம் நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கும் போது என்னென்ன சொன்ன, சாதி பாக்கணும், சாதகம் பாக்கணும்னு. நான் காசுள்ள ஆளை மயக்கிட்டு இழுத்துகிட்டு ஓடறேன்னு. இப்ப உம் புள்ள விவகாரம் எப்புடி? சாதி பாத்தியா, சாதகம் பாத்தியா? காசுக்காரின்னுதான தலைய ஆட்டற?"
"எதெ, அவங்கதான் தேடி வராங்களா? நீங்க பணம்னு ஓடலியா? அப்ப, எனக்கும் அதேதான? அவருதான என்னைக் கட்டிக்கிறேன்னு வந்தாரு? அப்ப உன் புள்ளைக்கு ஒரு ஞாயம், எனக்கொரு ஞாயமா, சொல்லு"
அம்மாவிடமிருந்து பதிலேதும் இல்லை போல.
"ரவியை ஆசைப்பட்ட பொண்ணையே அவன் கட்டிக்கட்டும். எனக்கும் சந்தோசந்தான். ஆனா நீ எனக்கு பண்ணது சரில்லனுதான் சொல்றேன்."
மேற்கொண்டு உரையாடல் தொடரவே இல்லை.
ரவிக்கு வருத்தமா இருந்தது. நேத்திக்கு சுமுகமா பேசுன அக்கா, இவ்ளோ வன்மத்தோட அம்மாகிட்ட பேசிருக்க வேணாம்னு தோணுச்சு. அக்கா கேட்ட கேள்வில்லாம் தப்பு இல்ல, ஆனா அதெல்லாம் கேட்டு அம்மாவைக் காயப்படுத்திருக்க வேண்டாமேன்னு நெனச்சான்.
அக்கா பேசுன அதிர்ச்சிலேருந்து மீளாம அப்டியே திண்ணைலயே கொஞ்ச நேரம் உக்காந்திருந்தான் ரவி.
திடீர்னு கேட் திறக்கிற சத்தம் கேட்டுத் திரும்பிப்பாத்தான் ரவி. அம்மா தெருவுலேருந்து கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளே வராங்க. அப்டியே அதிர்ச்சில உறைஞ்சு போய்ட்டான் ரவி.
அம்மா இப்பதான் வராங்கன்னா, அக்கா யார்கிட்ட விவாதம் பண்ணிட்ருந்தா இன்னேரம்? தனக்குத்தானேதான் பேசிகிட்டிருந்தாளா!
"வாடா, வாரேன்னு போன் பண்ண மாட்டியா"
"இ..இல்லம்மா, திடீர்னு பொறப்பட்டு வந்துட்டேன்"
அதுக்குள்ள புஷ்பா கதவைத் தொறக்கிறா. "அம்மாஆஆ"ன்னு கத்திட்டே ஓடி வந்து கட்டிக்கறா.
"எப்டிம்மா இருக்க, என்னை சுத்தமா மறந்துட்டேல்ல"
"அதெப்படி மறப்பேன். ஏதோ, நம்ம கெட்ட நேரம், வெலகி இருந்துட்டோம். அதான் நீங்க ரெண்டு பேரும் சேந்து வந்துட்டீங்களே, வேறென்ன வேணும் எனக்கு"ன்னு சொல்லிட்டு, புஷ்பாவை அணைச்சிகிட்டாங்க மஞ்சுளா.
"ரவி எல்லாத்தையும் சொன்னான்மா, பொண்ணோட அப்பாவுக்கு நம்ம சம்மதத்தை போன் பண்ணி சொல்லிட்டு மேல ஆக வேண்டியதைப் பார்க்கலாம்மா."
"காலைல எதுனா சாப்டீங்களா"ன்னு கேட்டவாறே சமையற்கட்டை எட்டிப் பார்த்தார் மஞ்சுளாம்மா.
"ப்ரிட்ஜுல மாவு வச்சிருந்தீல்ல, அதை எடுத்து தோசை ஊத்தி சாப்டோம்மா"
சற்று நேரம் ஊர்க்கதை, நாட்டுக்கதைலாம் பேசியபின் முத்தாய்ப்பாக மஞ்சுளாம்மா சொன்னது.
"அந்தப்பொண்ணோட அப்பா பணக்காரர்ங்கறதுக்காக மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கல. உன்னை விரும்புற பொண்ணு அவ. கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷமா இருப்பீங்க. நீயும் உன் மாமனார் தொழிலை கவனிச்சுகிட்டீன்னா, உங்க வாழ்க்கையும் செழிப்பும் சந்தோசமுமா இருக்கும். அதனாலதான்.
மத்தபடி, எனக்கு நீ ஒரு பைசா தர வேண்டாம். என் கையால ஒழைச்சே என் காலம் ஓடிரும்.
இன்னிக்கு ஒழைக்கிற மாதிரி உங்கப்பா செத்துப் போனோன்ன, புரிஞ்சு நான் உழைச்சிருந்தா நம்ம புஷ்பாவும் காலேஜ் போய் படிச்சிருக்கலாம். நல்ல வேலைக்கும் போயிருந்திருக்கலாம். நம்ம நிலம்லாம் இன்னிக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொத்தா நின்னிருக்கும். எல்லாம் வித்துத் தின்னே அழிச்சேன். எனக்கு அப்பெல்லாம் அது தப்புன்னே தெரியல. போனது போவட்டும். இப்பவாவது காசு உழைச்சு வந்தாதான் ஒட்டும், நிக்கும்ங்கறது எனக்குப் புரிஞ்சுதே, அது போதும்"
அனுபவம் எல்லாப் புரிதலின்மைக்கும் பதில் தருகிறது. அது இந்தக் குடும்பத்திற்கும் புரிதலைக் கொடுத்திருக்கிறது.
( முற்றும் )