Tuesday, September 18, 2012

குயில் சத்தம்



குயில் சத்தம்


யில்வாகனன் சாரின் வீட்டு வாசலில், அழைப்பு மணியை அமுக்கி விட்டு கதவின் திறப்பிற்காக செல்வராஜ் காத்திருந்தார்.
கதவு திறக்கப்படுவதற்குள் ஒரு சிறிய அறிமுகம்.
செல்வராஜ் இருபத்தி நான்கு வீடுகள் கொண்ட இந்த “வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின்” செயலாளர். ஐம்பதை நெருங்கும் வயது.
மயில்வாகனன் இதில் உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரர். எழுபதைத் தாண்டிய வயது. வாழ்நாளில் பெரும்பகுதியை வடகிழக்கு மாநிலமொன்றில் ஒரு தனியார் நிறுவனத்தில் உழைத்து செலவிட்டவர். மனைவியை இழந்து இந்த வீட்டில் தனியாய் பொங்கி சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.  ஒரே ஒரு மகன் பெங்களூருவில் மனைவி குழந்தைகளுடன் இருக்க, இவர் மட்டும் பிடிவாதமாய் இந்த வீட்டில்.
“வாங்க, வாங்க செல்வராஜ்””
“என்ன சார், சாப்டாச்சா”?”
“ஆச்சு, உக்காருங்க செல்வராஜ்” இருக்கையை துடைத்து அமரக் கோரினார்.
சற்று நேரம் நாட்டு நடப்பைப் பற்றி பேசி விட்டு செல்வராஜ் முக்கிய விஷயத்துக்கு வந்தார்.
“மயில்வாகனன் சார், இவ்வளவு தூரம் நாங்கல்லாம் சொன்னதுக்கு அப்புறமும் நீங்க விடாப்பிடியா நிக்கிறது நல்லா இருக்கா சார்””
“செல்வராஜ், நானும் அதேதான் சொல்றேன். இந்த ரெண்டு வருஷத்துல கிட்டத்தட்ட பத்து மீட்டிங் போட்டாச்சு. நான் சொல்ற விஷயத்தை நீங்க யாருமே காதுல வாங்கி மனசார பரிசீலனை பண்ண மாட்டேங்குறீங்க. ஒரு முடிவு எடுத்துட்டு அதை எப்படி என்னை ஒத்துக்க வைக்குறதுங்கறத மட்டும்தான் யோசிக்கறீங்க. இதில என்ன மட்டும் கொற சொன்னா எப்படி?”
“சிட்டியில மெயினான எடத்துல நம்ம ஃப்ளாட்ஸ் இருக்கு. இந்தத் தெருவுல கிட்டத்தட்ட 200 வீடு இருந்துச்சு. 25 வருஷம் முன்னாடி ஹவுசிங் போர்டு கட்டிக்குடுத்த வீடுங்கறதுனால வீடுகளைச் சுத்தி நெறைய எடம் விட்டு கட்டியிருக்கான். நம்ம 24 வீடுகளைத் தவிர, பாக்கி எல்லா ப்ளாக்லயும் ப்ரைவேட் பில்டர் கிட்ட கொடுத்து புத்தம் புதுசா, பெரிய ஃப்ளாட் வாங்கி, பைசா செலவில்லாம குடியே போயாச்சு. இப்படி எல்லாருமே ஒத்துக்கிட்டு செஞ்ச ஒரு முடிவை நீங்க மட்டும் ஒத்துக்காம பிரச்னை பண்றீங்க. ஒங்களால நாங்களும் பாதிக்கப்படறோம். இதியும் நீங்க புரிஞ்சுக்கணும்”
“நீங்க சொலறது எதையுமே நான் மறுக்கல. ஆனா நான் சொல்றதையும் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இப்ப இருக்கற வீட்ல ரெண்டு ரூம்தான் இருக்கு. வீடு பழசாய்டுச்சு. மொசைக் டைல்ஸ் தான் போட்ருக்கு. அங்கங்க காரை பேந்து வருது. எல்லாம் எனக்கும் தெரியுது. ஆனா இதுக்கெல்லாம் தீர்வு, ப்ரைவேட் பில்டர்கிட்ட கொடுக்கறதுதானா?
பைசா செலவில்லாம புது வீடுன்னு சொன்னீங்க. எப்படி பைசா செலவில்லாம புது வீடு கெடைக்கும்? இப்போ 24 வீடு இருக்கற இடத்துல, 40க்கும் மேல வீடு கட்டுவான், அதுவும் இப்ப இருக்கறதை விடப் பெரிசா. அப்பதான் அவனால நமக்கு காசில்லாம வீடு தர முடியும். அதாவது, நம்ம நெலத்தை நாம இன்னும் ஒரு 15 பேருக்கு வித்துதான் நமக்கு புது வீடு கட்டித்தரான் பில்டர்.
நீங்கல்லாம் சொத்தை விக்கணும்னு சொல்றீங்க, நான் வேணாம்னு சொல்றேன். இதான் பிரச்னை”
“சரி சார், ஆனா இப்ப இந்த வீடுகள்ல குடியிருக்கறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? ரெண்டாவது மாடியில இருக்கறவுங்க பிரச்னை உங்களுக்கு எங்க தெரியுது? போன வாரம் பேஞ்ச மழையில ராகவன் சார் வீடு குடிசை வீடு போல ஒழுகுது. அவரு சம்சாரம், பிள்ளைங்க எல்லாம் உக்காரக் கூட எடமில்லாம.. ரொம்பக் கஷ்டம் சார். ஒங்களுக்கென்ன, நீங்க மொதல் மாடியில பாதுகாப்பா இருக்கறீங்க, அடுத்தவங்க கஷ்டம் உங்களுக்குப் புரியல சார்”
“செல்வராஜ், இப்போ யார் எந்த மாடியில இருக்கறாங்கங்கறதா பிரச்னை? பாக்கப்போனா நீங்க கூடதான் மொதல் மாடியில இருக்கறீங்க, நான் மட்டுமா”
“ஆனா, நான் மத்தவங்க கஷ்டத்தை ஒணர்ந்து, வீட்டை இடிச்சுட்டு கட்ட ஒத்துக்கிட்டு இருக்கேனே”
“நானும் இடிச்சுட்டு கட்ட ஒத்துக்கறேனே, அந்த வேலையை நாம 24 பேருமே செய்யலாமே. புதுசா எதுக்கு இன்னும் 15 பேரை உள்ள விடணும்?”
“அதுல என்ன தப்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் பேரு புது ஓனர்ஸ் வந்தா நமக்கு என்ன எடைஞ்சல்? சொல்லப்போனா மாசாமாசம் அவங்களும் மெயின்டெனன்சுக்கு பணம் கொடுப்பாங்க. அதுவும் நமக்கு நல்லதுதானே””
“நமக்கு என்ன எடஞ்சலா? இப்போ நம்ம வீட்டை சுத்தி எவ்வளவு காத்தோட்டாமா, நெறைய மரங்களோட குளுகுளுன்னு இருக்குது. நீங்க சொல்றது போல கட்டினா, மொதல் பலி இந்த மரங்கள்தான். அப்புறம் சுத்தி உள்ள எடம், காத்து”
“சிட்டியில எல்லாருக்கும் இதெல்லாம் தெரியாதா சார்? வேற வழியில்ல, புரிஞ்சுக்கங்க சார்””
“எதைப் புரிஞ்சுக்கணும்கறீங்க? நாம பேசிட்டு இருக்கும் போதே,  மரங்கள்லேருந்து குயில் கூவுற சத்தம் கேக்குதா ஒங்களுக்கு. இந்த சத்தமெல்லாம், நீங்க சொல்றது போல செஞ்சா அப்புறம் கேக்கவே கேக்காது. இயற்கையை அழிச்சுட்டு நாமெல்லாம் சுபிட்சமா இருக்கணுமா சொல்லுங்க”
“மயில்வாகனன் சார், பொதுக்கூட்டத்துல பேசுற மாதிரி பேசுறீங்க. நாம மட்டும் நெனச்சு இயற்கைய காப்பாத்த முடியுமா சார்?”
“நாம ஒன்னும் இயற்கையக் காப்பாத்தவும் வேணாம். அழிக்கவும் வேணாம். அதத்தான் நான் சொல்றேன்”
“விதண்டாவாதம் பண்ணாதீங்க சார்”
“இது விதண்டாவாதம் இல்ல செல்வராஜ். நாம எல்லாரும் சேந்து, நம்ம காசிலயே இந்த பழைய வீட்டை இடிச்சுட்டு, இன்னும் கொஞ்சம் பெருசா நீங்கள்லாம் ஆசைப் படற மாதிரி கட்டலாம்னு சொன்னேனே, அதை ஏன் வேணாம்னு சொல்றீங்க”
“அதுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் 15 லட்சம் செலவு செய்யணும் சார். எல்லாராலயும் முடியுமா?”
“எல்லாராலயும் முடியாதுன்னு நீங்களே முடிவு பண்ணா எப்படி? மொதல்ல அந்த ப்ரொபோசல நீங்கள்லாம் விவாதிக்கவே இல்லையே. தெறந்த மனசோட விவாதிச்சு, எல்லோரும் தங்கள் பிரச்னையை சொல்லி எப்படி சமாளிக்கலாம்னு இன்னும் பேசவே இல்லையே. என் வாயை அடைக்கறதிலேயே உங்க சக்திய விரயம் பண்றீங்க”
“அப்படியெல்லாம் இல்ல சார். எல்லாரும் யோசிச்சு முடியாதுன்னு சொன்னதுக்கப்புறம்தான் முடிவு எடுத்தோம். அப்புறம், பில்டர்கிட்ட கொடுத்தா அவனே நமக்கு 15 லட்சம் தரேங்குறான். கட்டி முடிக்க்ற வரைக்கும் வேற வீட்டுல குடியிருக்க மாசா மாசம் 20000 ரூபாய் வாடகைப்பணமும் தரேங்குறான்.. நீங்க என்னடான்னா நாமே 15 லட்சம் செலவு பண்ணனும்கறீங்க. இதெல்லாம் போகாத ஊருக்கு வழி”
“இதான் இப்ப பிரச்னையே, நான் சொல்றத, நீங்கள்லாம் தெறந்த மனசோட பரிசீலனை பண்ணா மாட்டேங்குறீங்க. ஏன்னா, ஒங்களுக்கெல்லாம் பயம். அப்படி விவாதிச்சா அதில உள்ள நல்லது கெட்ட்து தெரியும், புரியும். ஒரு முடிவு எடுத்துட்டு, அதையே பிடிச்சுகிட்டு தொங்குறீங்க.
உங்களுக்கே தெரியும். இங்க யார்கிட்டேயும் பணம் ஒரு பிரச்னையில்ல. எல்லார் வீட்டுலயும் அடுத்த தலமுறை சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சு. பில்டர் குடுக்கற 15 லட்சத்தையும் வாங்கி பேங்குல போட்டு வச்சு என்ன சாதிக்கப் போறீங்க, வீட்டுக்குள்ள காத்தில்லாம புழுங்கிகிட்டு”
“அதெல்லாம் விடுங்க சார். இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி இழுத்தடிப்பீங்க?””
“இப்படி கேக்கறதுதான் எனக்கு வேதனையா இருக்கு. நான் வேணும்னே இழுத்தடிக்கறேன்னு நீங்களாவே முடிவு பண்ணிட்டீங்க””
“ஆமாம் சார். உங்களைத் தவிர பாக்கி எல்லாருமே ஒத்துகிட்டு கையெழுத்து போட்டாச்சு. நீங்க ஒரு ஆள், ரெண்டு வருஷமா இழுத்தடிக்கிறீங்க. கேட்டா, இயற்கை, குயில் சத்தம் அது இதுன்னு சொற்பொழிவாட்டம் பேசறீங்க. உங்க திட்டம்தான் என்ன?”
“இதுக்கு மேல நான் என்ன சொல்றது? என் கிட்ட எந்த திட்டமும் இல்ல. எனக்கு நீங்க சொல்றதுல உடன்பாடு இல்ல. அவ்வளோதான்”
“ஆரம்பத்துல மூணு நாலு பேரு இந்த ப்ரொபோசலுக்கு ஒத்துக்கல தான். ஆனா கொஞ்ச  நாள்ல புரிஞ்சுகிட்டு அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. நீங்க ஒருத்தர் இப்படி புடிச்ச புடியிலேயே நிக்கறதுனால எல்லாருக்கும் நஷ்டம், கஷ்டம். அதியும் நீங்க புரிஞ்சுக்கணும்”
“ஒன்னு சொல்றேன். கோச்சுக்காதீங்க. என்கிட்ட தனிப்பட்ட முறையில சில ஓனர்ஸ் பேசினாங்க. அவங்க என்னோட ஐடியா நல்லா இருக்குன்னும், ஆனா பெரும்பான்மை பக்கம் வேற வழி இல்லாம நிக்கறதாவும் சொல்றாங்க. நம்ம ஊர்ல பொதுவா, யாருமே தனக்குன்னு கருத்தே வச்சுக்கறதில்ல. ஒன்னு ரெண்டு பேரு கொஞ்சம் யோசிச்சாலும், பெரும்பான்மை பக்கம் சாஞ்சுடறாங்க. எவன் ஜெயிப்பானோ அவனுக்கு ஓட்டு போடறதப் போல”
“மயில்வாகனன் சார், ப்ளீஸ், கொஞ்சம் எறங்கி வாங்க. யாருமே இப்போ மெயின்டெனென்ஸுக்கு பணமே தரதில்லை. அதான் இடிச்சுட்டு கட்டப் போறோமேன்னு சொல்றாங்க. என்னால நிர்வாகம் பண்ண முடியல சார்” காலில் விழாத குறையாக கெஞ்சினார் செல்வராஜ்.”
“இல்ல செல்வராஜ். இந்த பிரச்னையை நீங்க எல்லாரும் கொண்டு போற விதம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது. நீங்க எல்லாரும் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு கிட்டத்தட்ட திட்டம் போட்டு செய்யுறீங்க. நான் தனிப்பட்ட முறையில உங்களை குத்தம் சொல்லல. ஆனா உங்க கூட இருக்கறவங்க சில பேர் செய்ற திட்டத்துக்கு உங்களை உபயோகப் படுத்துறாங்க”
“நானும் சொல்ல வந்ததை சொல்லிடறேன் சார். அடுத்த வாரம் சங்கக் கூட்டம் போடப் போறோம். பெரும்பான்மை முடிவுப்படி யாரு ஒத்துக்கலியோ, அவங்க வீட்டுக்கு, வாட்டர் கனெக்ஷன கட் பண்ணலாம்னு தீர்மானம் கொண்டு வரப் போறாங்க. பெரும்பான்மை இருந்தா அதை நிறைவேத்தறது என் கடமை இல்லையா. அப்புறம் நீங்க என் மேலே வருத்தப் படக் கூடாது, இல்லையா”
“ஓஹோ, அவ்வளவு தூரம் போயாச்சா. முடிவு பண்ணிட்டு தான் வந்திருக்கறீங்க. அப்ப எதுக்கு இவ்வளோ நேரம் பேசி கால விரயம் பண்ணினோம். சரி. உங்களால என்ன முடியுமோ பண்ணுங்க. நானும் சமாளிக்கறேன். கெளம்புங்க” எழுந்து நின்று கை கூப்பினார் மயில்வாகனன்.
செல்வராஜ் வாசலைத் தாண்டும்போது “ஒரு நிமிஷம்” என்றவாறு வெளியில் வந்தார் மயில்வாகனன்.
“அசோசியேஷன் பைலாஸ் நீங்க படிச்சு இருக்கீங்களானு எனக்குத் தெரியாது.  நீங்க சொன்னது போல தண்ணி கனெக்ஷன கட் பண்றது அவ்வளவு சுலபமில்ல. ஃப்ளாட்ட நிர்வாகம் பண்ண எடைஞ்சல் பண்ணிணாலோ, மெயின்டெனன்ஸ் சார்ஜு ரொம்ப நாளா கட்டாம இருந்தாலோதான், அதுவும் நோட்டீஸ் கொடுத்துதான் அப்படியெல்லாம் செய்ய முடியும். மத்தவங்க சொல்றாங்கன்னு ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டு நீங்க சிக்கல்ல மாட்டிக்காதீங்க. இப்பவே சொல்லிட்டேன்”
“சிக்கல்னா?””
“ஆமாம். நீங்க என் வீட்டுக்கு தண்ணி கனெக்ஷன நிறுத்தினா நான் சும்மா இருப்பனா? போலீஸ்ல போய் புகார் குடுத்தா உங்க நெலம எண்ண ஆகும்?”
“ஓகோ, போலீஸ்ல போய் கம்பிளெயிண்ட் குடுக்கற அளவுக்கு போய்டுவீங்களா?”
“எனக்கு வேற என்ன வழி அப்புறம்”
பதிலளிக்காமல் சிந்தனை வயப்பட்டவராக வெளியேறினார் செல்வராஜ்.

********

ன்ன சார், பெருசு மசியலியா” எட்டாம் எண் வீட்டின் சொந்தக்காரரும் , கமிட்டி உறுப்பினருமான பூபதி.
“இல்ல சார், அவர் பிடிவாதமா இருக்கார். நானும் சொல்லிட்டு வந்திட்டேன், நம்ம தீர்மானத்தைப் பத்தி”
“சொல்லிட்டீங்க இல்ல. அப்ப விடுங்க. ரெண்டு நாள்ல வழிக்கு வருவார். பாருங்க”
“எனக்கு நம்பிக்கை இல்ல சார். மனுஷன் தனியா வீட்டுல இருக்கார். எதையும் சமாளிப்பார் போல இருக்கு. இன்னும் என்னென்ன பிரச்னை பண்ணப் போறாரோ. என் பாடுதான் கஷ்டம், இன்னும் கொஞ்ச நாளைக்கு””
“ஒரு யோசனை தோனுது எனக்கு. மயில்வாகனனோட ஒரே பையன் பெங்களூர்ல இருக்கான். அவங்கிட்ட போன் பண்ணிப் பேசிப் பாத்தா என்ன?”
“அந்தப் பையன் கொஞ்சம் பிராக்டிகலான பையன்தான். ஆனா அப்பா சம்பந்தப்பட்ட விஷயத்துல எப்படி நடந்துப்பானோ தெரியலியே. நீங்க வேணா பேசிப் பாருங்களேன்”
அன்றிரவே பூபதி, முரளிகிட்ட, அதாங்க, மயில்வாகனனோட பையன்கிட்ட பேசிட்டார்.
அவன் தெளிவா சொல்லியிருக்கான்.
“அங்கிள், எனக்கு அந்த வீட்டை இடிச்சுட்டு கட்டுறதுல ஒன்னும் ஆட்சேபனை இல்லை. சொல்லப்போனா, அந்த வீட்டையே வித்துடலாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டு இருக்கேன். அவர்தான் ஒத்துக்க மாட்டேங்குறார். அம்மா செத்துப்போய் கிட்ட்த்தட்ட நாலு வருஷமா தனியா அவர் சென்னையிலேயே இருக்கிறார். இப்போ இந்த வீட்டை இடிச்சுட்டு கட்டலாம்னு நான் சொன்னா கேக்கவா போறார். இருந்தாலும் நீங்க எல்லாரும் ஒத்துகிட்டு அப்பா ஒருத்தராலதான் பிரச்னைனு சொல்றீங்க. அதுனால நான் அப்பாகிட்ட பேசுறேன். ஆனா போன்ல வேண்டாம். அடுத்த மாசம் ஒரு கல்யாணத்துக்காக குடும்பத்தோட சென்னை வரேன். அப்ப வேணா பேசிப் பாக்குறேன்”
“பூபதி சார். அப்போ இப்போதைக்கு மீட்டிங் போடறது, தண்ணி கட் பண்றதுன்னு எந்த ஆக்ஷனும் எடுக்க வேண்டாம். அடுத்த மாசம், அவர் பையன் வந்து பேசி சரி பண்ணட்டும். நீங்க என்ன நெனக்கறீங்க?”
“அதுவும் சரிதான். இவ்வளோ நாள் வெயிட் பண்ணினோம். இன்னும் கொஞ்ச நாள்தானே? எப்படியும் அவரோட மகன் வார்த்தையையாவது மதிச்சுதானே ஆகனும்? பாத்துக்கலாம்”

******
டுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. அலுவலக வேலையாய் டெல்லி சென்றிருந்த செல்வராஜின் செல்பேசி ஒலித்தது. ஹோட்டல் அறையில் தூங்கிக்கொண்டிருந்தவர் அரக்க பரக்க, செல்பேசியை எடுத்து காதுகளில் பொருத்த, எதிர்ப் பக்கம் பூபதியின் குரல்.
“சார், ஒரு குட் நியூஸ். நம்ம மயில்வாகனன் சாருக்கு நைட் ஹார்ட் அட்டாக் வந்து, ஹாஸ்பிடல் கொண்டு போறதுக்குள்ள உயிர் போய்டுச்சு.”
“அய்யய்யோ, என்ன சார், இதைப் போய் குட் நியூஸ்னு சொல்றீங்க. எப்படி திடகாத்திரமாய் இருந்த மனுஷன் பொசுக்குனு போய்ட்டாரே”
“குட் நியூஸ்னா சொன்னேன். இல்லை சார். நியூஸ்னு தான் சொன்னேன். உங்க காதுல அப்படி விழுந்தது போல”
தொடர்ந்து பூபதி, மயில்வாகனன் சாரின் மகனுக்கு தகவல் தந்தது, அவன் அதிகாலைக்குள் வந்து சேர்ந்தது, இன்று மாலைக்குள் தகனம் செய்யவிருப்பது என நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், பின் புலத்தில் கூவும் குயில்களின் குக்கூ சத்தம் மட்டும்தான் செல்வராஜின் காதுகளில் பெரிதாய் ஒலித்தது.  ஹூம்…….இன்னும் எவ்வளவு நாளுக்குக் கேட்கப் போகிறது?
இனம் புரியாதவொரு உணர்ச்சி அவர் மனதைக் கப்பியது.
http://www.vallamai.com/literature/short-stories/26271/

Wednesday, September 5, 2012

ஆற்றங்கரைப் பிள்ளையார்


ஆற்றங்கரைப் பிள்ளையார்

பருவப் பெண்ணின்
செருக்கோடு வளைந்து
நெளிந்து பாய்கிறது நதி.
கரையோரம் பொறுக்க
யாருமின்றி உதிர்ந்து
கிடக்கின்றன நாவற்பழங்கள்.
அப்பா தூக்கியெறிந்த
உணவுத்தட்டு ஆடி
அடங்குகிறது முற்றத்தில்
சோற்றுப்பருக்கைகளின் மீது.
செத்த எலியொன்றை
சிதைத்துப் புசிக்கின்றன
பசி கொண்ட காகங்கள்.
சருகு மெத்தையில்
சுருண்டு கிடக்குதொரு நாகம்.
காய்களின் கனம் தாங்காமல்
தரை தொடுகிறது மாமரக்கிளை.
தனது கடைசி உணவுக்காய்
காய்க்கிறது தினமென்று
உணராப் பெண்ணொருத்தி
அம்மரத்தின் பூப்பறித்து
தினந்தினம் தொழுகின்றாள்,
எல்லாம் அறிந்தும் 
எதுவும் அறியாதது போலிருக்கும்
அரளி மலர் சூடிய
ஆற்றங்கரைப் பிள்ளையாரை !

தகப்பன்…


தகப்பன்…

ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு
இந்த சாலையை நான் கடக்கிறேன்.
மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி
மூட்டை கட்டியபின் பரிகசித்து அடிக்கும்
வெயில் போல பல நாட்கள் என் வேதனை
அர்த்தமற்றுப் போனதுண்டு.
ஆனால் என்றுமே இப்படி ஆகுமென
உறுதியேதும் இல்லாததால்
நான் உள்ளுக்குள் பயந்தவனாகவே
இருக்கிறேன் இன்னமும்,
வெளியில் தைரிய முகம் காட்டி.
பாம்பா பழுதாவென அறுதியிடமுடியா
பேதமை எனை சுயபச்சாதாபம் கொள்ள வைக்கிறது.
வெற்று நம்பிக்கை வார்த்தைகளின் மேல்
நான் நம்பிக்கை இழந்து பல நாள் ஆயிற்று.
மகளாய் நான் காட்டிய பாசத்தைவிட
படிப்பறிவில்லா என் அறியாமையை
அதிகம் நம்புகிறாளோ என் மகளென்னும்
ஐயம் என்னுள் தீயாய்க் கனல்கிறது.
என் கணிப்பெல்லாம் தவறாய்ப் போயெனை
மதி கெட்டோனாக்கும் நன்னாளும்
வாராதோவென நப்பாசையோடு கூடவே
ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு..
இந்த சாலையை நான் கடக்கிறேன்.