ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, பள்ளி நாட்களில் மனப்பாடப் பகுதியில் செய்யுள்களை மனனம் செய்வதைப் பற்றிய பேச்சு வந்தது.
படிக்கும் நாட்களில், உரைநடையை விட, செய்யுள் பகுதியை சுலபமாக மனனம் செய்ய முடியும் என்பது உண்மையென்பதால், முக்கியமான அறிவியல் பாடங்களை செய்யுள் வடிவில் புனைந்தால், புரிந்து கொள்வதோடு, மனனம் செய்வதும் சுலபமாக இருக்கும் என்று ஒரு நண்பர் கூறினார்.
அந்த கருத்தை உடனே ஏற்றுக் கொண்டு, ஒலியைப் பற்றி கவிதை வடிவில் ஒரு சிறிய படைப்பினை ஆக்கினேன். காகிதத்தில் எழுதவில்லை. அங்கிருந்த நண்பர்களிடம் கூறினேன்.
இது நல்ல முயற்சியென்றும் மேற்கொண்டு நிறைய செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டதோடு சரி, பிறகொன்றும் செய்யவில்லை, இத்துனை வருடங்களில்.
மனதில் அன்று தோன்றிய அந்த வார்த்தைகளை, இங்கே கொடுத்துள்ளேன். இது ஒரு உதாரணம் தான். ஆர்வமுடையோர், இது போல படைப்புகள் செய்யலாமே, நிகழ்கால, எதிர் கால மாணாக்கர்களின் நன்மை கருதி!.
ஒலி
ஒலியென்றிங்கே எதுவுமில்லை,
தனியே ஒலியென்றிங்கே எதுவுமில்லை !
மெல்லிய இயந்திர அதிர்வுகள் தானே என்றும்
ஒலியாய் நம்மை உணர வைக்கும்.
அதிர்வென்பது அழுத்த வேறுபாட்டை
அலையலையாய் அலைய வைக்கும்.
ஒலியென்றிங்கே எதுவுமில்லை,
தனியே ஒலியென்றிங்கே எதுவுமில்லை !
முகடென்பது அலையின் உச்சம்,
அகடென்பதோ அலையின் நீச்சம்.
ஒரு நொடிப் போதில் கடக்கும் அலைகளை
எண்ணியறிவதே அதிர்வெண் ஆகும்.
ஒலியென்றிங்கே எதுவுமில்லை,
தனியே ஒலியென்றிங்கே எதுவுமில்லை !
இரண்டாயிரம் முதல் இருபதாயிரம் வரை
அதிர்வெண் இருப்பின் ஒலியை உணரும் மனித செவி.
திடப்பொருள், திரவம், வாயு அனைத்திலும்
பரவும் ஒலியின் அலைகள் வெற்றிடம் தவிர்த்து.
ஒலியென்றிங்கே எதுவுமில்லை,
தனியே ஒலியென்றிங்கே எதுவுமில்லை !
Good
ReplyDelete