எத்தனையோ மாலைப் பொழுதுகள் வந்து கடக்கின்றன. ஆனால் நினைவில் நின்று நம்மை நெகிழ வைப்பவை ஒரு சில மாலைப் பொழுதுகளே.
அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிறு மாலை ஒரு மறக்கவியலாத சுகானுபவத்தை அளித்ததெனலாம்.
வி-எக்செலின் ப்ளூ ஸ்கை கச்சேரிக்கான எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே எங்களிடம் தொற்றிக் கொண்டு இருந்தது.
நாங்கள் நான்கு பேரும் செல்வதாகத் திட்டமிட்டிருந்த போதும், கடைசி நேரத்தில் எதிர்பாரா விதமாய் கூடுதலாய் என் சகோதரி மகளும் இணைந்து கொண்டாள்.
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த இடம், கிட்டத்தட்ட ஒரு கிராமத்துத் தோப்பை ஒத்து, இயற்கை தரு நிழலோடு ரம்மியமாக இருந்தது. நாங்கள் கீழே விரிக்கப் பட்டிருந்த பாயில் அமர்ந்து காத்திருந்தோம்.
குழந்தைகளும் குழந்தை மனம் படைத்த தேவதை ஆசிரியைகளும் கழுத்தைச் சுற்றி நீல வண்ண ஸ்கார்ப் அணிந்து நீல வானத்தை அந்த வனத்துக்குள் கணப் பொழுதுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர்.
என்றும் போல, அன்றும் கையில் கிடாருடன் நம் இளம் தேவதை நேகா முன் நடத்த, குழந்தைகளுடன் ஐக்கியமாகி புஜி அவர்களை ஒன்றிணைக்க, கோகுல கிருஷ்ணனுக்கு அடங்கும் ஆநிரைகளாய் குழந்தைகள் கட்டுண்டு இருந்த காட்சி, காணக் கண் கொள்ளாதது.
வெகு இயல்பாய் நிகழ்ச்சி துவங்கியது. எவ்வித கூச்சமோ, தயக்கமோ இன்றி குழந்தைகளும் தாளத்துக்கியைந்து பாட ஆரம்பித்தனர்.
நாற்காலிகளிலும் தரையிலுமாய் சேர்ந்துக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 50 பேரும் லயித்திருக்க, கைதட்டல் நிறைந்த பாராட்டுகளுடன் ஒவ்வொரு பாடலாய் வெகு இயல்பாய் மாறி மாறிக் குழந்தைகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இடையில் தமிழ்ப்பாடல்கள் இசைக்கப்பட்டது குதூகலத்தின் உச்சம்!
நிகழ்ச்சியின் உச்சகட்டம் சின்மயியின் பாடல் நிகழ்வுதான். சற்றே தயக்கத்துடனும், கூச்சத்துடனும் ஆரம்பித்தாலும் பாடிய விதத்தில் ஒரு அசாத்திய உறுதியான சுய வெளிப்பாடு தெறித்தது!
ஒரு சிறு குச்சியை மைக்குக்கு இணையாகப் பாவித்து, சின்மயி தன்னுடைய நாத லோகத்துக்கு விஜயம் செய்தபோதும், குறுகிய அளவு கண்களைத் திறந்து பார்வையாளர்களின் அங்கீகரிப்பினை ஏற்றுக் கொண்ட விதம், என் கண்களில் நீரை வரவழைத்தது.
'என்ன வளம் இல்லை இந்தக் குழந்தைகளிடம்' என்றெண்ண வைத்ததொரு performance அது!
ஒரு மணி நேரம் கடந்ததே தெரியாமல் நிகழ்ச்சி நிறைவுற்றதும் நாங்கள் புறப்படும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்த பாடல்,'ஆசுமான், ஆசுமான், ஆசுமாஆஆன்!!!!'