"என்னங்க, எங்க இருக்கீங்க? வர நேரமாவுமா?"
"அண்ணா நகர்ல ஒரு கிளையண்ட்டுக்காக காத்துகிட்ருக்கேன். என்னாச்சு சுசீ, ஏன் பதட்டமா இருக்க?"
"இன்னிக்கு எண்ணை தேச்சு குளிச்சேனா, அப்போ வைரத் தோட்டை கழட்டி வச்சேன். குளிச்சிட்டு தலையை ஆத்திட்டு தூங்கிட்டேன். இப்ப எழுந்து போட்டுக்கலாம்னு தேடுனா ரெண்டு தோட்டையும் காணோம். இன்னி வெலைக்கு எப்டியும் ஏழெட்டு லெட்சம் பொறும்ல? அதான் படபடன்னு வருது"
"சுசீ, பதட்டப்படாம யோசிச்சுப் பாரு. எந்த எடத்துல வச்சன்னு. தொலைஞ்சு போயிருக்காது, நிச்சயமா அங்கதான் எங்கனாவது இருக்கும், இல்லை கீழே விழுந்து கெடக்கும். பொறுமையா தேடு. நான் எப்டியும் இன்னும் 2 மணி நேரத்துல வந்திருவேன். வந்து தேடித்தரேன். சரியா" என்றவாறு போனைத் துண்டித்தார் நாராயணன்.
"இங்கதானே வச்சேன், நல்லா ஞாபகம் இருக்கே"ன்னு தனக்குத்தானே பேசியவாறு மீண்டும் டிவி ஸ்டேண்டை சுத்தியே தோடுகளைத் தேட ஆரம்பித்தார் சுசீலா.
நிதானமா யோசிக்க சொன்னார்ல.
உக்காந்து என்ன செஞ்சோம்னு வரிசையா நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.
பாதி யோசிக்கும் போதே,"அங்கருக்குமோ, இங்கருக்குமோ"ன்னு தோணுன எடமெல்லாம் போய்த் தேடி நேரம் போனதுதான் மிச்சம். தோடு கெடைக்கல.
நாராயணன் வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 4.
"என்ன கெடைச்சுதா?"
"இல்லீங்க"
"காசு பெத்த பண்டத்துல இப்டியா அலட்சியமா இருப்ப?"
"என்னங்க இப்டி சொல்றீங்க? இந்த டிவி ஸ்டேண்ட்ல இந்த இடத்துலதான் வச்சேன்."
"ஏன் அதை பத்திரமா ஒரு டப்பால போட்டு பீரோல வச்சிருக்கலாம்ல? சம்பாதிச்சாதாண்டி காசோட அருமை தெரியும்"
"இப்ப எதுக்கு எங்கிட்ட சண்டைக்கு வாரீங்க? நானே நகையைக் காணுமுன்னு தவிச்சுகிட்டு நிக்கிறேன். நீங்க சம்பாதிக்குற பெருமையை சொல்லிக்காட்டுற நேரமா இது" கண்ணைக் கசக்க ஆரம்பித்தார் சுசீலா.
வைரம்லாம் வாங்குற அளவுக்கு காசுள்ள குடும்பம் கிடையாது சுசீலாவோட பொறந்த வீடு. இந்தத் தோடு வாங்குறதுக்கு, அதுவும் 25 வது கல்யாண நாளுக்கு நாராயணன்கிட்ட சண்டை போட்டு வாங்கிகிட்ட தோடு. முழுசா இன்னும் ரெண்டு வருசம் கூட ஆகலையேன்னு ஆதங்கம் சுசீலாவுக்கு.
சாயந்தரம் வரைக்கும் தேடித்தேடி, இருவரும் சண்டை போட்டு சோர்ந்து போனதுதான் மிச்சம்.
"காலைல நான் வெளில போனதுக்கப்புறம் நீலா மட்டுந்தான் வீட்டுக்குள்ள வந்திட்டுப் போயிருக்கா. வேற யாருமே உள்ள வர்ல. நீ இங்கதான் வச்சேன்னு தீர்மானமா சொல்றதால, தோடு தொலைஞ்சிருக்க வாய்ப்பில்ல, நீலாதான் எடுத்துட்டுப் போயிருக்கணும்னு எனக்குத் தோணுது"
நீலா இந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சில் வீட்டு வேலை செய்யும் பெண். பாலவாக்கத்தில் இருந்து தினமும் பஸ்சில் வந்து இங்கு திருவான்மியூரில் வீட்டு வேலை செய்கிறாள்.
"நம்ம வீட்டு வேலை முடிச்சிட்டு, வழக்கமா அடுத்து யார் வீட்டுக்குப் போவா நீலா?"
"B ப்ளாக்ல லலிதா மாமி வீட்டுக்குப் போவா"
லலிதா மாமிக்கு போன் போட்டுக் கேட்டதில் இன்னைக்கு நீலா வேலைக்கு வர்ல, தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டான்னு பதில் வந்தது.
"ஒன்னும் சரியாப்படலையே. நீலாவுக்கு போன் போடு"
போன் போட்டு நீலாவை அவசரமாக வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள்.
நீலாவிடம் எப்படிப் பேசுவது என்று கணவனும் மனைவியும் ஒத்திகை பார்த்துக் கொண்டனர்.
"இந்தா நீலா, நீ எங்ககிட்ட 10 வருசமா வேலை பாத்திருக்க. இதுவரைக்கும் உன்னால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல. இன்னிக்கு நீ இங்க வந்துட்டுப் போன நேரத்துல, இங்க வச்சிருந்த வைரத் தோடு காணாமப் போயிருக்கு. உன்னைத் தவிர வீட்டுக்கு வேற யாரும் வர்ல, அதுனாலதான் உங்கிட்ட கேக்குறோம்"
"என் மேலயாம்மா சந்தேகப் படுறீங்க? அப்டில்லாம் அடுத்தவங்க பொருளைத் திருடி வாழ்க்கை நடத்துறவ இல்லம்மா நானு. தோடு வேற எங்கியாவது மறந்தாப்ல வச்சிருப்பீங்க, நல்லா தேடிப் பாருங்கம்மா" இரண்டு கைகளையும் கூப்பினாள் நீலா.
அடுத்தது குறுக்கு விசாரணை.
"நீ ஏன் லலிதா மாமி வீட்டுல வேலை செய்யப் போகல இன்னிக்கு"
காலைல நீங்க மொளாத்தூள் அரைக்க மில்லுக்குப் போவ சொன்னீங்கள்ல, அங்க அந்த சத்தத்துல நிக்கும்போதே தலை வலிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்றம் திரும்பி இங்க வந்து பாத்திரம் தொலக்கி, துணி காய வச்சு, வூடு பெருக்கி தரை தொடச்சி முடிக்கறப்போ தாங்க முடியாத தலைவலிம்மா, அதான் லலிதா மாமிக்கு போன் பண்ணி சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்."
"தோ பாரு நீலா, திரும்பத் திரும்பப் பேசறதுல ஒன்னும் அர்த்தம் இல்ல. நீ எடுத்துட்டுப் போன தோட்டைக் கொண்டாந்து திரும்பக் கொடுத்துரு. இல்லைன்னா நான் போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுக்கறதத் தவிர வேற வழி இல்லை", நாராயணன் கடைசி அஸ்திரத்தை உபயோகிச்சார்.
"அய்யா, வேணாம்யா, போலீசுக்கெல்லாம் போயிறாதீங்க. சாமி சத்தியமா, நான் தோட்டை எடுக்கலய்யா"
நீலா பயந்து போய் விட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
கடைசியில் நாராயணின் காலில் விழுந்து விட்டாள் நீலா.
"அய்யா, என் குடும்பம் ஏழைப்பட்ட குடும்பமா இருந்தாலும் மானத்தோட வாழ்றோம்யா, போலீஸ்லாம் வந்து விசாரிச்சா, நான் நாண்டுகிட்டு செத்துடுவேன்யா"
"சரி நீலா, நீ கெளம்பு. நாங்க சொன்னதெல்லாம் யோசிச்சுப் பாரு. சீக்கிரமா தோட்டைக் கொண்டாந்து கொடுத்துரு. அடகு கிடகு வச்சிருந்தீன்னா சீட்டைக் கொண்டாந்து கொடு. நாங்களே மீட்டுக்கறோம்."
"உனக்கு என்ன தோணுது சுசீ? நீலா எடுத்துருப்பாளா?
"அவதான் எடுத்துருக்கணும். வீட்டுக்குள்ள வேற யாருமே வர்ல, தோட்டையும் காணும். போலீஸ் கம்ப்ளெயிண்ட்னு நீங்க சொன்னோன்ன பதறுறா. அவ எடுக்கலைன்னா ஏன் பதறணும்?
"அவளை வேலைக்காரின்னு ஒரு நாள் கூட நெனைச்சதோ, நடத்துனதோ கெடையாது. அவ குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டதுன்னு எல்லாத்துக்கும் முடிஞ்ச அளவுக்கு பொருளா பணமா குடுத்து சப்போர்ட் பண்ணிருக்கோம். கடைசில உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற மாதிரி இப்டி நம்ம வீட்டு நகையை எடுத்துட்டுப் போயிட்டாளே. இது அடுக்குமா?" சாபம் விடாத குறை, சுசீலாவுக்கு.
இரவு பத்து மணி வரை நீலா திரும்ப வரவில்லை.
பொறுமையிழந்து போய், போலீஸ் ஸ்டேஷனுக்கு புறப்பட்டார் நாராயணன், புகார் கொடுக்க.
******
"ஏங்க, ஒரு நிமிசம் யோசிங்க. இந்த போலீஸ் கம்ப்ளெயிண்ட் அது இதுல்லாம் நமக்கு சரியா வருமான்னு தெரிலயே. பேசாம போனா போவுதுன்னு விட்றலாமா?"
"அதெப்படி சுசீ விட முடியும்? சாதாரண விஷயமா இது. நீ பேசாம இரு. நான் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வரேன்."
"சரி, அப்டின்னா செக்ரெட்டரி சார்கிட்ட சொல்லிட்டு அவரையும் கூட்டிகிட்டு போங்க. அதென்னவோ போலீஸ் ஸ்டேஷன் போறதுன்னா கொஞ்சம் கலக்கமா இருக்கு. இதெல்லாம் நமக்கு தேவையான்னு தெரில"
செக்ரெட்டரி மகேந்திரன் நாராயணனுக்கு நன்கு அறிமுகமானவர். நாராயணன் நடந்தவற்றை சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார்.
"இது உங்க வீட்டுக்குள்ள நடந்தது. இதுல அசோஷியேஷன் தலையை விட முடியாது. அதான் யோசிக்கிறேன்."
"சார், அது எனக்குப் புரியுது. நான் உங்ககிட்ட இதை விசாரிக்க சொல்லலை. தகவல்தான் சொல்றேன். ஒரு ஃப்ரெண்டா என் கூட ஸ்டேஷனுக்கு வர முடியுமான்னுதான் கேக்குறேன்"
"அதெப்டி சார், கமிட்டியைக் கலந்து பேசாம நான் தன்னிச்சையா வர முடியாதுல்ல"
"புரியுது சார். பிரச்னை வரும்போதுதான் மனுசங்களை புரிஞ்சுக்க முடியுது. நீங்க மாசமாசம் மெயிண்டெனன்ஸ் காசை வாங்குற வேலையை மட்டுந்தான் பாப்பீங்க. நடத்துங்க.."
"விருட்டென்று கோபத்துடன் வெளியேறினார் நாராயணன்.
தரைத்தளம் சென்று காரை எடுத்து மெயின் கேட்டுக்கு அருகில் வரும்போது செக்ரட்டரி வழி மறித்தார். கதவைத் திறந்து காரில் ஏறினார்.
"சாரி சார். உங்க கூட வரக்கூடாதுன்னு இல்லை. என்ன, ஏதுன்னு யோசிக்கறதுக்குள்ள நீங்க கோவப்பட்டுட்டீங்க. வாங்க, ஒரு ப்ரெண்டா உங்க கூட வர்றேன், போகலாம்"ன்னு சொன்னவுடன் கார் நகர்ந்தது.
********
காவல் நிலையம்.
"சார், உங்களுக்கு உறுதியாத் தெரியுமா, அந்தப் பொண்ணுதான் நகையை எடுத்திருப்பான்னு?"
"வேற யாரும் எடுத்திருக்க வாய்ப்பே இல்ல சார். வீடு பூராவும் தேடியும் பாத்துட்டோம். அவதான் நிச்சயமா எடுத்திருக்கா"
"சரி, நீங்க சொன்னதெல்லாம் ஒரு கம்ப்ளைண்ட்டா எழுதிக் குடுங்க, நாங்க கூப்ட்டு விசாரிக்கிறோம்"
அவசர அவசரமாக புகார் எழுதி வாங்கப்பட்டது.
நீங்க கெளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்.
*******
"மாப்பிள்ளை போன் பண்ணிருந்தார். லக்ஷ்மியும் பேசுனா. நீங்க வந்தா போன் பண்ண சொன்னாங்க"
லக்ஷ்மி, நாராயணன் - சுசீலா தம்பதியரின் ஒரே மகள், மும்பையில் வசிக்கிறார்கள்.
"என்னவாம்? தோடு தொலைஞ்ச கதையை அவசரமா பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?"
"அவகிட்ட சொல்லாம எப்படி இருக்கிறது. நீங்க வேற சும்மா இருக்காம போலீஸ் கீலீஸ்னு கெளம்பிட்டீங்க"
"அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம். டயர்டா இருக்கு இப்போ. தூங்கப்போவோம்."
*******
விடிகாலை 5 மணிக்கெல்லாம் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியிடம் இருந்து இண்டர்காமில் நாராயணனுக்கு அழைப்பு.
"சார், நீலா அவங்க வீட்டுக்காரர் வந்திருக்காரு, உங்களைப் பாக்க. மேலே அனுப்பி வைக்கவா?"
தூக்கக் கலக்கத்தில் இருந்தார் நாராயணன்.
"வேணாம், நானே கீழே வரேன்"
சட்டையைப் போட்டவாறே லிஃப்டைப் பிடித்து கீழே போன நாராயணனை வழியிலேயே மடக்கி காலில் விழுந்தான் சோமு, நீலாவின் கணவன்.
"அய்யா, நீலாவை டேசனுக்கு கொண்டு போயி அடிக்கிறாங்கய்யா. காலைல மூணு மணிலேருந்து. கதறிக்கிட்ருக்காய்யா.
நாங்கூட அங்க இங்க கைய வைக்கிற ஆளுதான். ஆனா, நீலா சுத்தத் தங்கம்யா. அவ ஒங்க பொருளை எடுக்கலய்யா. ஒரு வார்த்தை நீங்க நேர வந்து சொன்னா உட்ருவாங்கய்யா"
நாராயணனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அதே சமயம் தான் தோற்றுப் போவதாகவும் தோன்றியது. நகை கிடைக்காதோ என்ற பயம் வேறு.
"இதோ பாருப்பா, எங்களுக்கு அவ மேல் புகார் கொடுக்கணும்னு ஆசையா என்ன? இல்ல, எங்கூட்டு நகை, தானே கால் மொளைச்சு நடந்து போயிருக்குமா என்ன? தப்பை ஒத்துகிட்டு நகையைத் திருப்பிக் கொடுத்துட்டா நீலாவை வெளிய விட்ருவாங்க. நானும் அப்றமா கேசை வேணா வாபஸ் வாங்கிக்கறேன். தண்டனை ஏதும் இல்லாம பாத்துக்கறேன், போதுமா"
********
காலை பத்து மணி வாக்கில் அந்த ஏரியா கவுன்சிலர் காவல் நிலையத்துக்குப் போய் வாக்குவாதம் செய்தவுடன் வேறு வழியில்லாமல் நீலாவை விசாரணை முடிந்து வீட்டுக்கு அனுப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் போன் செய்து சொன்னார்கள். நீலா உண்மையை ஒத்துக் கொள்ளவில்லை என்றும், நீலா வீட்டில் நடந்த சோதனையிலும் ஏதும் சிக்கவில்லை என்றும், பக்கத்திலுள்ள அடகுக் கடைகளில் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் நாராயணனுக்குத் தகவல் சொன்னார்கள்.
நீலா நகையைத் திருப்பித் தரமாட்டாள் என்பது நாராயணனுக்கு தெளிவாகத் தெரிந்தது. சற்று அவமானமாகக் கூட இருந்தது. இந்த விஷயத்தில் நீலாவிடம் தோற்றுப் போனதாகவே தோன்றியது.
அன்றைக்கு மாலை அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது.
போலீஸ் அடித்ததில் நீலாவுக்கு பலத்த உள்காயம் என்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும்
தகவல் வந்தவுடன் நாராயணனுக்கு பயம் வந்து விட்டது.
ஆனால் செக்ரெட்டரியோ இதெல்லாமே நாடகமாகத்தான் இருக்குமென்றும், அந்தக் கவுன்சிலர்தான் இதையெல்லாம் தூண்டி விட்டிருப்பார் என்றும் சொன்னார்.
நீலாவின் மருத்துவமனை நாடகம் நாராயணனுக்கு புதியதொரு தலைவலியாகத் தோன்றியது.
*******
"வாங்க நாராயணன் சார், முக்கியமான விஷயம் பேசணும்னுதான் வரச் சொன்னேன்" பீடிகை போட்டார் சப் இன்ஸ்பெக்டர்.
"சொல்லுங்க சார், நகையக் கண்டுபிடிச்சிட்டீங்களா?"
"இன்னும் இல்ல சார். அந்தம்மா அடமெண்ட்டா இருக்காங்க. போதாக்கொறைக்கு அவங்க ஏரியா கவுன்சிலர் வேற இதுல தலையை விட்டுக் கொழப்புறார்.
உங்க நகையை மீட்க முடியும்னு தோணல. மொதல்ல அந்த நகையை அந்தம்மாதான் எடுத்துதான்னு எங்களால இப்போதைக்கு உறுதியா சொல்ல முடில. எவ்ளோ அடிச்சும் அது எடுக்கல, எடுக்கலன்னு சொன்னதையே சொல்லிட்ருக்கு. பேசாம, நீங்க கேசை வாபஸ் வாங்குங்க. நாங்க கொஞ்சம் பொறுமையா நோட்டம் பாத்தா, அவளை ஆதாரத்தோட புடிச்சிருவோம். இப்ப அந்தம்மா ஆசுபத்திரில அட்மிட் ஆகி உள்காயம்னு சர்ட்டிபிகேட் வாங்கிருக்கு. இன்னிக்குள்ள இந்த கேசை வாபஸ் வாங்கலைன்னா, போலீஸ் மேலயே கேஸ் போடுவோம், ப்ரஸ்சுக்குப் போய் போலீசை ரெண்டுல ஒன்னு பாத்திடுவேன்னு மெரட்டுறான் அந்த கவுன்சிலர்."
"நல்லாருக்கு சார். திருடன் போலீசை மெரட்றதும், அதைக் கேட்டு, நீங்க என்ன வாபஸ் வாங்க சொல்றதும். போலீஸ் எப்டியும் விசாரிச்சு நகையை மீட்டுத் தருவீங்கன்னு நம்பிதா கேஸ் கொடுத்தேன். என்னால வாபஸ் வாங்க முடியாது. நீங்க எப்டியாவது விசாரிச்சு நகையை மீட்டுக் கொடுங்க"
இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல வெளியே வந்தார் நாராயணன். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும், சப் இன்ஸ்பெக்டரையே எதிர்த்துப் பேசிவிட்டோம் எனும் ஹீரோ மனப்பான்மை அவருக்கு ஒரு திமிரைத் தந்தது.
******
இன்னையோட ஒரு வாரம் ஆச்சு, நகை தொலைஞ்சு போய். அன்னைக்கு சப் இன்ஸ்பெக்டர் கிட்ட கேஸ் வாபஸ் வாங்க முடியாதுன்னு சொன்னதுக்கப்புறம் எந்த முன்னேற்றமும் இல்லை. நீலா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும், போலீஸ் கவுன்சிலர் கூட சமரசம் பேசி செட்டிலாய்ட்டாங்க.
நாராயணனுக்கு ஸ்டேஷன்ல எந்த மரியாதையும் கிடைப்பதில்லை இப்பல்லாம்.
"டெய்லி வந்து இப்டி பாலோ பண்ணாதீங்க சார். விசாரணை பண்ணிட்ருக்கோம். எதுனா தகவல் கெடைச்சா போன் பண்றோம், போங்க"
"இப்படி விட்டேத்தியா சொன்னா எப்டி சார், ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. பொருளைத் தொலைச்சவனுக்கு கவலை இருக்கும்ல. எதுனா ஆக்ஷன் எடுங்க, ப்ளீஸ்"
"சார், ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு கேஸ் வருது எங்களுக்கு. உங்க கேஸை மட்டுமே பாத்துகிட்ருக்க முடியுமா. புரிஞ்சுக்கங்க சார்"
மீண்டும் நாராயணன் அங்கேயே அமர்ந்திருக்க, "கெளம்புங்க சார்" என்ற அதட்டலின் கனம் தாங்காமல் நகர்ந்தார்.
********
நீலாவோட நிலைமை இன்னும் மோசம்.
"இப்டிப் படுத்தே கெடந்தா எப்டி நீலா? புள்ளைங்கள்லாம் ஒம்மூஞ்சியைப் பாத்துதானே வளருதுங்க. எந்திரிச்சு குடும்பத்தைக் கவனி. அடுத்து பொழைப்புக்கு என்ன செய்லாம்னு ரோசி"
"முடியலக்கா. நானு கல்லாணத்துக்கு மிந்தி சொகுசா இருந்தவ. இந்தாளு மேல ஆசைப்பட்டு கட்டிகிட்டு ஓடியாந்தேன். இவரு ஒளுங்கா குடிக்காம சம்பாதிச்ச காசை எங்கிட்ட கொடுத்திருந்தா நான் ஏன் பொறத்தியார் வூட்டுக்கு பாத்திரம் தொலக்கப் போவணும் சொல்லு? அப்டிப் போக சொல்லதான இப்டி பழிசொல்லு கேட்டு போலீஸ் கைல அடி வாங்கி சாவுறேன்.
கைய நீட்ட சொல்லி உள்ளாங்கைல ப்ளாஸ்டிக் பைப்பாலயே அடிச்சானுக தெரியுமா, வலி உசுரு போயிருச்சு. இந்தா பாரு, மொழங்காலுக்குக் கீழ"ன்னு புடவையைத் தூக்கிக் காட்டுறா. கெண்டைக்காலெல்லாம் தடிச்சுக் கெடக்கு.
"எப்புடி ஒழைச்சிருக்கேன் தெரியுமா அந்தக் குடும்பத்துக்கு? என் மேல திருட்டுப் பட்டம் கட்ட எப்புடி மனசு வந்துச்சு அந்தம்மாவுக்கு?
எனக்கு உசுர் வாழவே புடிக்கல. இந்தப் புள்ள ரெண்டையும் கரை தேத்தனுமேன்னு இன்னும் சாவாம கெடக்கேன்."
"இதுல அந்த கவுன்சிலர் அண்ணன் கேக்குறாரு. 'ஆறேழு லட்சம்ன்றாங்க, என்னையும் கொஞ்சம் கவனிங்க'ன்னு"
"இந்த ஊர் ஒலகத்துக்கு நான் ஒரு திருடின்னு ஆயிப்போச்சு. அந்த காம்பவுண்ட்ல 4 வூட்டுக்கு வேலை செஞ்சேன். அல்லாரும் இப்போ வேணாம்னுட்டாங்க. இனி எப்டி நான் கை சுத்தமானவன்னு புரிய வைக்கிறது? ஆயுசுக்கும் இந்தக் கெட்ட பேரோடு வாழ்ந்து சாவணும்கிறது என் விதி போல"
"நீலா, நீ சொல்றதெல்லாம் கரீக்டுதான். ஏழைப் பட்ட நாம என்ன செய்ய முடியும் சொல்லு. மத்ததெல்லாம் சாமி பாத்துக்கும்னு சொல்லிட்டு எழுந்து குடும்பத்தைக் கவனிக்குற வழியைப் பாரு. ஒழைக்குற நமக்கு, இந்த நாலு வூடு இல்லைன்னா, வேற நாலு வூடு. தூக்கிப் போட்டுட்டு வா"
"சாமி எங்க பாக்குது, பாத்தா எனக்கு இப்டி நேந்திருக்குமா"
"நான் சொல்றேன், நம்பு. சாமி ஒன்னிய என்னிக்கும் கை விடாது", நீலாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிப் போனார் பக்கத்து வீட்டு செண்பகம்.
*********
திருவான்மியூர் காவல் நிலையம்.
"சார், என் பேரு மகேந்திரன். ஏற்கனவே மிஸ்டர் நாராயணன் புகார் கொடுக்க வந்தப்போ, அவர் கூட வந்திருந்தேன்"
"ஏன் சார் இப்டி உசுரை எடுக்கறீங்க, புகார் கொடுத்தவர் தொல்லை தாங்கலைன்னா, நீங்க வேற புதுசா ஃபாலோ பண்ண வந்திருக்கீங்களா, கெளம்புங்க சார் இங்கேருந்து" கொந்தளித்தார் எஸ் ஐ.
"ஃபாலோ பண்றதுக்காக வர்ல சார். ஒரு முக்கியமான தகவல், உங்ககிட்ட ரகசியமா சொல்லணும், அதான் நேர்ல வந்தேன்"..
******
"வணக்கம் சார். முத்துக்கண்ணு, சப் இன்ஸ்பெக்டர்." என்றவாறு கையை நீட்டினார்.
"வாங்க சார். நான் ராமானுஜம். இந்த பிராஞ்ச் மேனேஜர். என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு.."
"ஒரு விசாரணை. அது சம்பந்தமா உங்க உதவி வேணும். உங்க க்ளையண்ட் ஒருத்தர் கடைசியா எப்ப லாக்கர அக்செஸ் பண்ணினார்ங்கற தகவல் வேணும்."
"கஸ்டமர் டேட்டாவை அப்டி டக்னு குடுத்துற முடியாது சார். அதுக்கு ஒரு ப்ரோசீஜர் இருக்கு. ஒரு ஃபார்ம் தரேன். அதை பில்லப் பண்ணிக் கொடுங்க. அப்றமா நான் டேட்டா எடுத்துத் தரேன்"
அதற்குள் சிவில் உடையில் இருந்த இன்னொரு போலீஸ்காரர் மேனேஜர் ரூமுக்குள் நுழைந்து எஸ் ஐயிடம் கண் ஜாடை செய்தார்.
எஸ் ஐ வெளியே வந்தவுடன், "சார், முந்தா நேத்திக்கு, அதாவது நகை தொலைஞ்சு போனதா கம்ப்ளெயிண்ட் கொடுத்த பத்தாம் நாள் இங்க வந்து லாக்கரைத் தொறந்திருக்காங்க, காலைல பத்து மணிக்கு தொறந்திட்டு 10.02 க்கு முடிருக்காங்க"
"ஓகே, ஓகே, ஒரு நிமிஷம்" என்றவாறு மீண்டும் மேனேஜர் ரூமுக்குள் நுழைந்த எஸ்.ஐ, "அதுக்குள்ள இன்னுமொரு முக்கியமான கேஸ். நான் அப்றமா வரேன், தேங்க்ஸ் சார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
********
"சொல்லுங்க சார், அந்த நகை எந்த வருஷம் வாங்குனீங்க, வாங்குன பில் எடுங்க"
திடீரென வீட்டுக்கு வந்த எஸ்.ஐ இப்படிக் கேட்டவுடன் சுசீலாவும் நாராயணனும் பதில் சொல்லவியலாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றனர்.
"என்ன சார் ஒன்னும் சொல்லாம நின்னா எப்படி? பில் இருக்கா இல்லையா? வழக்கு சம்பந்தமா நீங்க ஒத்துழைச்சாதானே எங்களால கேசை சீக்கிரமா முடிக்க முடியும்"
"பில் இருக்கான்னு தேடிப் பாக்கணும். சுசீ, பீரோல இருக்கா பாரு"
சில நிமிடங்கள் காத்திருப்பு, இறுக்கமான மெளனத்துடன்.
"இந்தாங்க, இதானா பாருங்க"
"இதேதான், 2016 ல வாங்குனது. இந்தாங்க சார்"
எஸ்.ஐ பில்லை போட்டோ எடுத்தவுடன், "வாங்க, ஒரு எடுத்துல நகை கெடைச்சிருக்கு. உங்களுதான்னு போய் செக் பண்ணிருவோம்"
"அதெப்படி சார்" னு படக்குனு கேட்டார் நாராயணன்.
"அதெப்படின்னா? நகை தொலைஞ்சதுன்னு புகார் கொடுத்தீங்கல்ல, நாங்க கண்டுபிடிக்கணும்ல"
சுசீயும் நாராயணனும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உறைந்து போய் நின்றனர்.
"வாங்க சார், போகலாம், அப்டியே உங்க ....
பேங்க் லாக்கர் சாவியையும் எடுத்துட்டு வாங்க" என்றார் எஸ்.ஐ.
"அது எதுக்கு" இது நாராயணன்.
"போகும்போது சொல்றேன், எடுத்துட்டு வாங்க"
நாராயணனுக்கு காலெல்லாம் வெடவெடன்னு ஆட ஆரம்பித்தது. சுசீ முகமோ பேயறைந்தது போல்.
அடுத்த சில நொடிகள். யாரும் அசையவில்லை. இது எதிர்பாராதது.
"என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசாத் தெரியும். இந்த நிமிசம் வரைக்கும் உங்க ரெண்டு பேரையும் நான் மரியாதையாதான் நடத்திகிட்டிருக்கேன். லாக்கர் சாவியை எடுத்துகிட்டு உடனே வாங்க. எதுனா நான்கோஆபரேட் பண்ணினீங்கன்னா, அப்றம் நான் வேற மாதிரி நடக்க வேண்டியிருக்கும். நான் கவர்ன்மெண்ட் சர்வண்ட். எனக்கு நீலாவும் ஒன்னுதான், நாராயணனும் ஒன்னுதான், அண்டர்ஸ்டேண்ட்" போலீஸ் தொனி மிரட்டலில் அதிர்ந்து போய், நாராயணன் உள்ளே இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
"நானும் வர்ட்டுமா உங்க கூட..."னு சுசீலாவும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கீழே வந்தார்.
" வாங்க சார், நம்ம ஜீப்பிலேயே போய்ட்டு வந்துறலாம்"ன்னு எஸ்.ஐ கூப்பிடவும், இன்னும் பயந்தார் நாராயணன்.
"இல்ல சார், நாங்க எங்க கார்லயே வர்றோம். லேடீஸ் வர்றாங்க. உங்க ஜீப்ல போனா ஒரு மாதிரி இருக்கும், அதான்..."
"சார், நான் நீலாவைப் பண்ண மாதிரி அரெஸ்ட் பண்ணியா கூட்டிட்டு போறேன். நீங்க கொடுத்த கம்ப்ளெய்ண்ட்டை விசாரிக்கத்தானே கூப்டுறேன். சரி, நானும் உங்க கார்லயே வர்றேன்" என்றவாறு நாராயணனின் காரில் ஏறினார் எஸ்.ஐ.
கணவனையும் மனைவியையும் தனியாய்ப் பேசவோ, வேறு யாருடனும் போனில் பேசவோ வாய்ப்பு தராமல் வங்கி வரை கூடவே இருந்தார் நாராயணன்.
"சார், இன்னேரம் என்ன நடக்குதுன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். நேரா உள்ள போய் லாக்கரைத் தொறந்து நீங்க மறைச்சு வச்ச ரெண்டு தோட்டையும் எடுத்துட்டு வாரீங்க. இதைப் பத்தி யார் கூடவும், எதுவும் பேசக்கூடாது பேங்க்ல. புரியுதா? இங்க எதுவும் கொளறுபடி பண்ண நினைச்சீங்கன்னா, அசிங்கப்படுறது நீங்களாதான் இருப்பீங்க, ஏன்னா உங்க லாக்கர் பக்கத்துல 6 கேமெரா இருக்கு. மேல மேல தப்பு பண்ணி அசிங்கப்படாம சொன்னதை செய்ங்க."
"சார், தொலைஞ்ச நகை இங்க எப்படி சார் இருக்கும்?" என்றவாறே கணவருடன் உள்ளே போக எத்தனித்தார் சுசீலா.
சுசீலாவிடம், "ஹலொ மேடம், நீங்க உள்ள போக வேண்டாம், இங்கேயே நில்லுங்க, சார் போய் நகையை எடுத்துட்டு வரட்டும்"
எந்த பதிலும் சொல்லாமல், கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போல் வங்கிக்குள் சென்றார் நாராயணன்.
******
நாராயணன் இல்லம்.
எஸ்.ஐ, இன்னொரு போலீஸ்காரர், நாராயணன், சுசீலா, நீலா மற்றும் நீலாவின் கணவர் சோமு.
"சம்பந்தப்பட்ட எல்லாருமே இங்க இருக்கோம். இங்க நடக்கறதும் இந்த வழக்கு விசாரணையோட ஒரு பகுதிதான். இப்ப சொல்லுங்க நாராயணன். எதையும் மறைக்காம நடந்தது நடந்தபடி சொல்லுங்க. அப்றமா மேற்கொண்டு என்ன செய்றதுன்னு முடிவு பண்ணுவோம்.
"மொதல்லயே ஒன்னு சொல்லிக்கறேன். நாங்க சட்டத்துக்கும் நீதிக்கும் பயந்து நடக்குறவங்க. யாரையும் கஷ்டப்படுத்திப் பாக்கணும்னு நினைக்கறவங்க கிடையாது." நாராயணன் ஆரம்பித்தவுடன் இடைமறித்தார் எஸ்.ஐ.
"நேரா டாபிக்குக்கு வாங்க. ஜஸ்ட் நடந்ததை வரிசையா சொல்லுங்க, அது போதும்"
"நாங்க போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததுல சொல்லியிருந்த எல்லாமே உண்மைதான். நீலாவைத் தவிர வேற யாரும் வீட்டுக்குள்ள வர்ல. நகையும் வச்ச எடத்துல இல்லை. வீட்ல மத்த எல்லா எடத்துலே தேடியும் கிடைக்கல. அப்ப எங்களுக்குத் தோணுன ஒரே சந்தேகம் நீலா மேல மட்டுந்தான். ஆனா கடந்த 10 வருசமா நீலா எங்க வீட்ல வேலை செஞ்சதுல, ஒரு தரம் கூட சந்தேகப் படுற மாதிரி எதுவும் நடக்கல.
இருந்தாலும், நகையைக் காணோம்ன்ற பதட்டத்துல நீலா மேல சந்தேகம்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டோம்.
இதுனால நீலாவை நீங்க கடுமையா விசாரிச்சு கஷ்டப்படுத்துனப்போ எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு"
"எதுக்கு நீட்டி மொழக்குறீங்க. நடந்ததை மட்டும் சொல்லுங்க சீக்கிரமா"
"சரி சார். சொல்றேன். 4 நாள் முந்தி எங்க வீட்ல சாம்பார் வச்சிருந்தாங்க. சாதத்துல சாம்பாரை ஊத்திப் பிசையலாம்னு ஆரம்பிச்சா, கைல என்னவோ தட்டுப் படுதேன்னு எடுத்துப் பாத்தா தொலைஞ்சு போன ஒரு தோடு.
பத்து நாளைக்கு மின்ன தொலைஞ்சு போன தோடு எப்புடி இன்னைக்கு நம்ம வீட்டு சாப்பாட்டுல வந்திருக்கும்னு புரியாம தேட ஆரம்பிச்சோம்.
அப்பதான் தோடு தொலைஞ்சு போன அன்னிக்கு எங்க வீட்ல மொளகாத்தூள் அரைச்சது ஞாபகத்துக்கு வந்துச்சு. அன்னிக்கு காலைல நீலா மொளாத்தூள் அரைச்சிட்டு வந்து இந்த டிவி ஸ்டேண்டுக்குப் பக்கத்துல, இந்த சில்வர் டப்பாவை தொறந்து வச்சிருக்கு, ஆறட்டுமேன்னு. அதுக்கு கொஞ்ச நேரம் முன்னதான் தோட்டைக் கழட்டி இந்த டிவி ஸ்டேண்ட் மேல இருந்த நியூஸ் பேப்பர்ல வச்சிருக்காங்க. பேன் காத்துல நியூஸ் பேப்பர் ஆடி அந்தத் தோடு ரெண்டும் கீழ கரெக்டா மொளத்தூள் டப்பாவுல உழுந்து உள்ள போயிருக்கணும். மொளாத்தூள் ஆறிப்போன உடனே, நீலாவே எடுத்து மூடி கிச்சன் கப்போர்டுல வச்சிட்டு வீட்டுக்குப் போயிருக்கு. மொளாத்தூளை பெரிய டப்பாலேருந்து வாரத்துக்கு ஒருக்கா சின்ன பிளாஸ்டிக் டப்பாவுல அள்ளி தினசரி உபயோகத்துக்கு வச்சுக்குவோம். அதுவழியா ஒரு தோடு சாம்பாருக்கு வந்திருக்கணும்னு அனுமானம் பண்ணி, சில்வர் டப்பாவுல போய் தேடுனா இன்னொரு தோடும் அதுக்குள்ள இருந்து கிடைச்சுது.
தோடு நம்ம வீட்டுக்குள்ளதான் இருந்திருக்குன்னு தெரிஞ்சோன்ன உடனே போலீசுக்குத் தகவல் சொல்லிக் கேசை வாபஸ் வாங்கணும்னு தெரிஞ்சாலும் அதை செய்ய எங்களுக்கு தைரியம் வர்ல. ஏற்கனவே நீலா போலீஸ்ல அடிவாங்கி, திருட்டுப் பட்டம் வாங்கி கஷ்டப்பட்டிருக்கு. இது தெரிஞ்சா இன்னும் பிரச்னை பெரிசாயிரும்னு பயந்து நகையை லாக்கர்ல கொண்டி வச்சுட்டோம். இன்னும் நாலைஞ்சு நாள் கழிச்சு நகை போனா பரவால்ல, நாங்க கேசை வாபஸ் வாங்கிக்கறோம்னு சொல்லி வாபஸ் வாங்கலாம்னு நெனைச்சிட்ருந்தோம். ஆனா அதுக்குள்ள எஸ்.ஐ சார், எப்படியோ தகவல் கெடைச்சு தோடு கெடைச்சதை கண்டு பிடிச்சுட்டார். இதான் நடந்தது"
"அப்ப என் வூட்டுக்காரி மேல பொய் கேசு கொடுத்துட்டு, நகை கெடைச்சோன்ன கமுக்கமா கொண்டு போய் பேங்குல வச்சுட்டு வந்தா என்னா அர்த்தம். மனசாச்சி இருந்தா ஒடனே நகை கெடைச்சிருச்சுன்னு எங்க எல்லாருக்கும் சொல்லிருக்குனுமா இல்லியா" இது சோமு.
"கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இப்போ கேஸ் கொடுத்திருக்கிறது நாராயணன். நகையை யாருமே திருடலைன்னாலும் ஒளிச்சு வச்சது நாராயணன். ஆக குற்றவாளியும் நாராயணன்தான். ஆதாரத்தை மறைச்சது, பொய்யா இன்னொருத்தர் மேல குற்றம் சுமத்துனது, விசாரணைக்கு ஒத்துழைக்காம கேசை திசை திருப்புனதுன்னு நாலைஞ்சு செக்ஷன்ல என்னால கேஸ் புக் பண்ண முடியும். நீலா ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தா ஒங்க ரெண்டு பேத்தையும் புடிச்சு உள்ள தள்ளவும் முடியும். இப்போ நீலா தரப்பு என்ன சொல்றாங்கன்றதுதான் முக்கியம்"
நீலா பேசுவதற்காக எழுந்து நின்றாள். அவளின் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பேசவியலாமல் விக்கி விக்கி கண்ணீரைத் துடைப்பதிலேயே நேரம் கழிந்து கொண்டிருந்தது.
"நீ பேச வேணாம். உக்காரு. நா பேசிக்கறேன்"னு எழுந்தான் சோமு.
"சார், எங்க மேல எந்தத் தப்பும் இல்லன்னு ஆயிருச்சு. ஆனா நீலாதான் நகையை எடுத்துச்சுன்னு கேசு கொடுத்து அவளை அடி வாங்கி அவமானப் படுத்துனதுக்கு ஈடா, ஒரு லச்ச ரூவா கொடுக்க சொல்லுங்க. இத்தோட பைசல் பண்ணிட்டுக் கெளம்பிடுறோம்"
நீலாவுக்குக் கோவம் தலைக்கேறியது.
"த்தூ.. காசு வேணுமா உனக்கு? அவங்க பொருள் தொலைஞ்சதுக்கு நம்ம மானத்தை வாங்குனாங்க. இப்போ என் மானம் போனதுக்கு நீ காசு கேக்குற. அப்றம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசங்கிறேன்"
"சார், எங்களுக்குக் காசும் வேணாம், பணமும் வேணாம். என் மேல குத்தம் இல்லைன்னு அவங்களையே சொல்ல வச்சுட்டீங்க. ஞாயமாப் பாத்தா, நகை கெடைச்ச உடனேயே அதை போலீஸ்கிட்ட சொல்லி கேசை வாபஸ் வாங்கிருக்கணும். அப்டி செஞ்சா அவங்க மருவாதி குறைஞ்சுரும். ஆனா "நீலாவோட மானம் போனா என்ன, ஏழை நாயி எக்கேடு கெட்டா என்ன, ஆயுசுக்கும் திருட்டுப்பட்டத்தோட அலையுட்டுமே, இப்ப என்ன"ன்னு இருந்தவங்களை, அவங்க வாயாலேயே உண்மைய ஒத்துக்க வச்சதுக்கு நன்றி சார்"ன்னு சொல்லி எஸ்.ஐ கால்ல விழுந்தார் நீலா.
"நீலா, நீ நினைக்குற அளவுக்கு"ன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்ச சுசீலாவைப் பேச விடாமல் தடுத்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
"போதுந்தாயே, நீங்க செஞ்சதெல்லாம் போதும், இந்த சென்மத்துல உங்க சங்காத்தமே வேணாம்".
"போலாம் வா, காசு வேணுமா காசு, வீட்டுல போய் வச்சிக்குறேன் ஒனக்கு," புருசன் கையைப் பிடிச்சு தரதரவென இழுத்துக் கொண்டு வெளியேறினார் நீலா.
முற்றும்